Sun. Nov 24th, 2024

பெங்களூர் சிறையில் இருந்து அதிகாரப்பூர்வமாக விடுதலையாக இருந்த நேரத்தில், ஒருவாரத்திற்கு முன்பாக, வி.கே. சசிகலாவுக்கு கடந்த 20-ந் தேதி திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அங்குள்ள பவுரிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்தவப் பரிசோதனைக்குப் பின்னர் விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு வி.கே. சசிகலா அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று பாதித்து இருப்பது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து, கொரோனோவுக்கான மருத்துவச் சிகிச்சை அவருக்கு வழங்கப்பட்டது. இதனிடையே, சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட 4 ஆண்டுகால சிறை தண்டனை முடிவடைந்தது. இதனால், கடந்த 27-ந் தேதி மருத்துவமனையில் சசிகலா அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அதிகாரப்பூர்வமாக அவர் விடுதலை செய்யப்பட்டார். தொடர்ந்து கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில், இன்று பிற்பகலில் சசிகலா மருத்துவமனையில் இருந்து தனது உறவினர்கள் ஏற்பாடு செய்திருந்த தங்கும் விடுதிக்குப் புறப்பட்டார்.

தேவனஹள்ளியில் உள்ள சொகுசு பங்களாவிற்கு அவர், அ.தி.மு.க. கொடி கட்டிய காரில் புறப்பட்டுச் சென்றார். வழியெங்கும் அ.தி.மு.க. மற்றும் அ.ம.மு.க. தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

மருத்துவமனையில் இருந்து தேவஹள்ளி வரை சசிகலாவின் காரைத் தொடர்ந்து ஏராளமான வாகனங்கள் அணிவகுப்பு போல அணிவகுத்துச் கென்றது. அவருடன் இளவரசியின் மகனும், ஜெயா டி.வி.யின் தலைமை செயல் அதிகாரியுமான விவேக் ஜெயராமனும் உடன் சென்றார்.

தேவனஹள்ளி பங்களா நுழைவு வாசலுக்கு முன்பு, சசிகலாவுக்கு பூசனிக்காய், தேங்காய் உள்ளிட்டவை மூலம் திருஷ்டி சுற்றப்பட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை கண்டு சசிகலா உணர்ச்சி வசப்பட்டவராக காட்சியளித்தார். அந்த இடமே, வெளிப்படுத்த முடியாத அளவுக்கு உணர்ச்சி மேலிட்டவர்களின் கூட்டத்தினரால் அமைதியாக காட்சியளித்தது.

இன்றிலிருந்து 7 நாட்கள் அங்கு தங்கியிருக்கும் சசிகலா, வரும் 7 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை சென்னை திரும்பவுள்ளார். கார் மூலம் ஓசூர், வேலூர் வழியாக சசிகலாவை அழைத்து வர அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் பிரம்மாண்டமான ஏற்பாடுகளை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. வி.கே. சசிகலா, சென்னை திரும்பியவுடன், அ.தி.மு.க.விற்குள் என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்பது குறித்து அரசியல் பார்வையாளர்கள் பல்வேறு விதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.