Fri. Nov 22nd, 2024

தமிழக பாஜக எம்.எல்.ஏ.க்கள் பிரதமர் மோடியை இன்று டெல்லியில் சந்தித்து கலந்துரையாடினர் அதுதொடர்பாக, பாஜக எம்.எல்.ஏ.வும், தேசிய பாஜக மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் தனது முகநூலில் கருத்து தெரிவித்துள்ளார். அதன் விவரம் இதோ….

தமிழகத்தின் நலன், தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி, தமிழக அரசியல் சூழல் குறித்து விரிவாக எங்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள திமுக அரசு எவ்வாறு மக்கள் பணிகளைத் தொடங்கியுள்ளது என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் பல கேள்விகளை எழுப்பினார். அவரது அக்கறையும், ஆர்வமும் எங்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது.

“கொரோனா தடுப்பூசி குறித்து இப்போதுதான் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. அதனால் தேவையும் அதிகரித்துள்ளது. எனவே, தமிழகத்திற்கு அதிகமான தடுப்பூசிகளை வழங்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தோம். “ஆரம்ப கட்டத்தில் அதிகமான தடுப்பூசிகளை வீணடித்த மாநிலங்களில் தமிழகமும் ஒன்று என்பதால் சூழல் அப்படி இருந்திருக்கலாம். எவ்வளவு வேகமாக தமிழகம் தடு்ப்பூசிகளை செலுத்த தயாராக இருக்கிறதோ அவ்வளவு தடுப்பூசிகளை வழங்க தயாராக இருக்கிறோம்.

இந்த மாதம்கூட தமிழகத்திற்கான தடுப்பூசி ஒதுக்கீடு இரு மடங்கு அதிகரித்துள்ளோம். தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்” என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.

“தமிழகம் நீர் பற்றாக்குறை மாநிலம் என்பதால் பாஜகவின் கனவுத் திட்டமான நதி நீர் இணைப்பு திட்டம் குறிப்பாக கோதாவரி – காவிரி இணைப்புத் திட்டத்தை விரைவாக முன்னெடுக்க வேண்டும்” என்றோம். அதற்கு புன்னகையுடன், “நீர் பற்றாக்குறையைப் போக்க மத்திய அரசு தமிழகத்திற்கு தேவையானவற்றை செய்வோம்” என்று பிரதமர் உறுதியளித்தார்.

. “மழைநீர் சேகரிப்பு, சுற்றுச் சூழல் போன்ற விஷயங்களில் ஏராளமான இளைஞர்கள் ஆர்வமுடன் உள்ளனர். இதனைப் பயன்படுத்திக் கொண்டு மழைநீர் சேகரிப்பு, தண்ணீர் சேகரிப்பு குறித்து பொதுமக்கள், இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழக பாஜக சார்பில் இயக்கம் நடத்த வேண்டும்” என்று எங்களுக்கு பிரதமர் ஆலோசனை வழங்கினார்.

தமிழகம் தொழில் வளர்ச்சி பெற்ற மாநிலம். ஏற்கனவே, தொழில் வழித் திட்டங்கள், ஸ்மார்ட் சிட்டி, சாலைகள் என்று கட்டமைப்பு மேம்பாட்டுக்கான திட்டங்களை மத்திய அரசு வழங்கியுள்ளது. தமிழகத்தில் பாரம்பரியமான இடங்கள், தொல்லியல் சின்னங்கள், மதம் சார்ந்த இடங்கள் அதிகமாக உள்ளதால் தொழில் வழித்தட திட்டங்கள் போல, சுற்றுலா வழித்தட திட்டங்களை தமிழகத்திற்கு தனித் திட்டமாக செயல்படுத்தலாம் என்று கோரிக்கை விடுத்தோம்.

ராமேஸ்வரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள இணைக்கும் ஹெலி சுற்றுலாவை அறிமுகப்படுத்த வேண்டும் என்று சட்டமன்ற பாஜக குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் கோரிக்கை விடுத்தார். அதனை பரிசீலிப்பதாக பிரதமர் பதிலளித்தார்.

தமிழக பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் எம்.ஆர். காந்தியை பார்த்ததும் பிரதமர் மோடி நெகிழ்ச்சியடைந்தார். 1967-ல் அவர் கன்னியாகுமரிக்கு வந்தபோது எம்.ஆர்.காந்தி மாவட்டத் தலைவராக இருந்ததை பிரதமர் நினைவுகூர்ந்தார். பாசத்துடன் அவருடன் பிரதமர் கலந்துரையாடினார்.வருத்தத்துடன் சில விஷயங்களை பிரதமரிடம் பதிவு செய்தோம்.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஒருசில அமைப்புகள், மோடி எதிர்ப்பு, பாஜக எதிர்ப்பு என்ற பெயரில் தேசத்திற்கு எதிரான கருத்துக்களை மக்களிடம் பரப்புவதில் குறியாக இருக்கிறார்கள். இதனை மத்திய அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். ‘ஜெய்ஹிந்த்’ முழக்கம் ஆளுநர் உரையில் இல்லாததை பெருமையாக பேசும் சூழல் தமிழகத்தில் உருவாகி வருகிறது என்பதையெல்லாம் எடுத்துக் கூறினோம்.

4 எம்.எல்.ஏ.க்களும் அவரவர் தொகுதிகளின் வளர்ச்சிக்கான சில கோரிக்கைகளை முன்வைத்தோம். இது தொடர்பாக மத்திய அமைச்சர்களை சந்திக்க இருப்பதையும் சொன்னோம். அனைத்தையும் கவனமாக கேட்டுக் கொண்ட பிரதமர் மோடி, சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சினைகளை முன்வைத்து சிறப்பாக செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

பிரதமர் உடனான 35 நிமிட சந்திப்பு ஆக்கப்பூர்வமானதாக, மகிழ்ச்சிகரமாக நேர்மறை சக்தியை அளிக்கும் ஒன்றாக அமைந்தது. தமிழகத்தின் மீதும், தமிழக மக்கள் மீதும் பிரதமர் மோடி காட்டிய ஆர்வமும், அக்கறையும் எங்களை மெய்சிலிர்க்க வைத்தது.பிரதமர் மோடியை சந்தித்த பிறகு பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டாவை 4 எம்.எல்.ஏ.க்களும் சந்தித்தோம்.

மகளிரணி தேசியத் தலைவராக அவரை அடிக்கடி சந்தித்தாலும் இந்தச் சந்திப்பின்போது பல்வேறு ஆலோசனைகளை அவர் வழங்கியது பயனுள்ளதாக இருந்தது. தமிழகத்தின் பாஜக வளர்ச்சிக்கு 4 எம்.எல்.ஏ.க்கள் கிடைத்திருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.

சட்டமன்றத்தில் பேசும் எந்தவொரு தகவலாக இருந்தாலும் முழுமையாக ஆராய்து, அறிந்து பேச வேண்டும் என்று அறிவுறுத்தினார். அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்துச் செல்வதில் அதிக அக்கறை காட்ட வேண்டும் என்றார். மத்திய அரசின் திட்டங்கள், பிரதமர், கட்சித் தலைவர்களின் செயல் திட்டங்களை தமிழில் மொழிபெயர்த்து மக்களிடம் கொண்டுச் செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

பிரதமர் மோடியும், பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டாவும் தமிழகத்தின் வளர்ச்சிக்காக, தமிழக மக்களின் நலனுக்காக உங்களுடன் துணை நிற்போம் என்று எங்களிடம் கூறியது எங்களை உற்சாகப்படுத்தியது.