Fri. Nov 22nd, 2024

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாஜக 4 தொகுதிகளில் வெற்றிப் பெற்றது.

திருநெல்வேலியில் நயினார் நாகேந்திரன், நாகர்கோவில் எம்.ஆர்.காந்தி, கோவை வடக்கு வானதி சீனிவாசன், மொடக்குறிச்சி சி.கே.சரஸ்வதி ஆகியோர் வெற்றிப் பெற்றனர். அக்கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டார். கொரோனோ தாக்குதல் குறைந்தவுடன், பாஜக எம்.எல்.ஏ.க்கள் நான்கு பேரும், தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகன் தலைமையில் இன்று டெல்லிச் சென்று பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

இந்தச் சந்திப்பின் போது, மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற பணியாற்றுங்கள், மாநில வளர்ச்சிக்காக குரல் கொடுங்கள் என பிரதமர் மோடி, பாஜக எம்.எல்.ஏ.க்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

இதேபோல், அகில இந்திய பாஜக தலைவர் ஜே.பி. நட்டாவையும் தமிழக பாஜக எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

பிரதமருடனான சந்திப்பு குறித்து எல்.முருகன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், நீர் சேமிப்பு குறித்தும் மத்திய அரசின் திட்டங்களைத் தமிழக மக்களிடம் கொண்டுசேர்க்க வேண்டும் என்றும் பிரதமர் அறிவுரை வழங்கினார். .தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகளை தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும், தமிழகத்தில் சுற்றுலாத்துறை மேம்படுத்த மத்திய அரசு உதவ வேண்டும் போன்ற கோரிக்கைகளையும் முன்வைத்தோம். தமிழக அரசியல் நிலரவம் குறித்தும் பிரதமரிடம் விரிவாக எடுத்துரைத்தோம்.

இவ்வாறு எல்.முருகன் கூறினார்.