Sat. Nov 23rd, 2024

தமிழ்நாடு காவல்துறையின் தலைமை இயக்குனராக சைலேந்திரபாபு ஐபிஎஸ் பதவியேற்றுக் கொண்டதன் அடிப்படையில், சிறப்பு கட்டுரை ஒன்றை பதிவு செய்தோம். அவரின் புகழ்பாடும் கட்டுரையல்ல அது. 30 ஆண்டுகளுக்கு முன்பு வாலிப வயதில் எந்தளவுக்கு எனர்ஜியாக இருந்தாரோ, அதைவிட பன்மடங்கு அதிமாகவே இப்போதும் இருக்கிறார். உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதைப் போலவே, உள்ளத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்கிறார் என்பதை வெளிப்படுத்தும் விதமாகவே அந்த கட்டுரை எழுதப்பட்டது.

சிங்கிளாக வேட்டையாடும் சிங்கம் என்று குறிப்பிட்டு வெளியான சிறப்புச் செய்தியை படித்துவிட்டு, மதுரையில் இருந்து மூத்த ஊடகவியலாளர் ஒருவர் கைபேசியில் அழைத்து, சென்னை சிட்டியில் இன்னொரு சிங்கமும் இருக்கிறது. ஆனால், அமைதியாக இருக்கிறது போல என்று குறிப்பிட்டார். புரியவில்லை என்றோம். சிட்டி கமிஷனராக இருக்கும் சங்கர் ஜிவால் ஐபிஎஸ்.ஸின் அதிரடி ஆட்டத்தை விவரித்தார். வியப்புக்குரியதாகவே இருந்தது.
சேலத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக அவர் பணிபுரிந்திருந்த போது, அங்கு அவர் சாகசம் புரிந்ததாக நினைவில் ஏதும் இல்லை. ஆனால், மதுரையில் காவல் கண்காணிப்பாளராக அவர் பணிபுரிந்த காலத்தில் சிங்கமாக சீறி சமூக விரோதிகளை வேட்டையாடிக்கிறார் என்று ஊடகவியலாளர் கூறியது, வியப்பிற்குரியாதாக இருந்தது.

தனியொருவராக அவர் வேட்டையாடிய களத்தை, 25 ஆண்டுகளுக்கு முன்பு (1996 ம் ஆண்டில்) நிகழ்ந்த நிகழ்வை சூடு குறையாமல் விவரித்தார் மதுரை மூத்த ஊடகவியலாளர்கள்.

மதுரையில் பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள திடீர் நகர் மற்றும் மேல வாசல் பகுதிகளில் அடிக்கடி சமூக விரோதிகளின் ரவுடி ராஜ்யம் அதகளப்படுமாம். அப்படியொரு அதகளப்படுத்தப்ட்ட நாள் ஒன்றில், பெட்ரோல் குண்டு வீச்சுகள் வான வேடிக்கை காட்டியிருக்கிறது. தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்திருக்கிறார் அப்போதைய மதுரை எஸ்.பி. சங்கர் ஜிவால். அதுவும் இரவு நேரத்தில் பெட்ரோல் குண்டுகள் தீம்பிழம்புகளுடன் பறக்க, சங்கர் ஜிவால் ஐபிஎஸ்.ஸுடன் வந்த ஸ்டிரைகிங் ஃபோர்ஸ் என்று சொல்லப்படும் அதிரடிப்படை வீரர்களே, பற்றி எரியும் தீ ஜூவாலைகளை பார்த்து பயந்து கொண்டு பதுங்க, தனியொருவராக சங்கர் ஜிவால் ஐபிஎஸ் திடீர் நகருக்குள் நுழைந்திருக்கிறார்.

45 நிமிடம் எந்த சத்தமும் இல்லை. அதிரடிப்படை வீரர்கள் ஒவ்வொருவராக வயர்லெஸ்ஸில் மாறி மாறி அலறியிருக்கிறார்கள். அந்த காலத்தில் ஃபேமஸான லக்கி டிராவல்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பேருந்துகள் எல்லாம் பெட்ரோல் குண்டு வீச்சில் எலும்பு கூடாக காட்சியளித்துக் கொண்டிருக்க, திடீர் நகரில் இருந்து திமிரிக் கொண்டு சங்கர் ஜிவால் ஐபிஎஸ் கம்பீரமாக வெளியே வருகிறார். துப்பாக்கி முனையில் 5, 6 சமூக விரோதிகளை கைது செய்து அழைத்து வந்த காட்சியைப் பார்த்து, ஒட்டுமொத்த மதுரை மக்களே வியந்து போய் விட்டனர். அதிமுக ஆட்சி அகற்றப்பட்டு, திமுக ஆட்சி அமைந்த சில மாதங்களில் இந்த நிகழ்வு நடைபெற்றது. அந்த பகுதியைச் சேர்ந்த அதிமுக கவுன்சிலர் ஒருவரும் கைது செய்யப்பட்ட நபர்களில் முக்கியமானவர்.

கண் முன்பே பெட்ரோல் குண்டு வீச்சும், அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களைக் கொண்டு சமூக விரோதிகள் ஆவேசமாக தாக்கிக் கொண்டு அன்றைய தினத்தில், எவ்வளவு துணிச்சலான காவல்துறை அதிகாரியும், மின்சாரம் துண்டிக்கப்பட்டு கும்மிருட்டாக இருந்த திடீர் நகரில் கால் வைக்க பயப்படுவார்கள். ஆனால், சங்கர் ஜிவால் ஐபிஎஸ் ஒற்றை ஆளாக அன்றைக்கு அதிரடி காட்டியதை இன்றைக்கும் கூட மறக்க முடியவில்லை என்று அவரின் வீரதீரததை மெய் சிலிர்க்க கூறி முடித்தார்.

டிஐஜி, ஐஜி, அடிஷனல் டிஜிபி, டிஜிபி என அடுத்தடுத்து உயர் பதவிகளை பெற்று காவல்துறையின் தலைமைப் பீடத்திற்கு வரும் உயரதிகாரிகளில் பலர், தங்களுடைய காவல்துறை பயணத்தில் விழுப்புண்களை சுமந்து கொண்டே தான் வருகிறார்கள். அதில், ஒரு சிலரின் சாகசங்கள் மட்டுமே ஊடகங்களால் கொண்டாப்படுகிறது.. மற்ற உயரதிகாரிகளின் வீரதீர செயல்கள் கானல் நீராக, அந்த நிகழ்வுகளுக்கு சாடசியாகும் ஒரு சிலரின் கண்களுக்கு மட்டுமே கானல் நீராக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.

காவல் கண்காணிப்பாளராக, சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக பணியாற்றிய காலத்தில் ஐபிஎஸ் உயரதிகாரிகள் நிகழ்த்திய சாகசங்கள், இன்றைய இளம் தலைமுறை ஐபிஎஸ் அதிகாரிகளும் உணர்ந்து கொள்ளும் வகையில், தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு ஐபிஎஸ்., சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் ஐபிஎஸ்., தற்போதைய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையே கைது செய்து லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனர் கந்தசாமி ஐபிஎஸ் உள்ளிட்ட உயரதிகாரிகள், மாதத்திற்கு ஒரு முறை, கலந்துரையாடல் கூட்டம் நடத்தி தங்கள் சாகசங்களை எடுத்துரைத்து, இளம்தலைமுறை ஐபிஎஸ்.க்களை உற்சாகப்படுத்த வேண்டும்.

மேலும், 20 ஆண்டுகளுக்கு முன்பு மனித உரிமை மீறல் பெரியளவில் பேசப்படவில்லை. இப்போது, தனிமனித உரிமை மீறல் குறித்தான விழிப்புணர்வு பொதுமக்களிடமும் எழுந்துள்ள நிலையில், கண்ணியத்தோடு கடமையாற்ற வேண்டிய கடமையுணர்வையும் கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் விருப்பமாக இருக்கிறது.

நிறைவாக,

சிங்கமாக சிலிர்த்து எழும் குணம் படைத்த பெருநகர சென்னை காவல் துறை ஆணையர் சங்கர் ஜிவால் ஐபிஎஸ்.ஸின் சாகச விளையாட்டுகளை அறிந்து கொள்ளாமல், நல்லரசுவும், அவரை சீண்டி விட்டது.

மன்னிசுடுங்க சிட்டி கமிஷனர் சார்…