Mon. May 6th, 2024

திமுக இளைஞரணிச் செயலாளராக இருந்த காலத்திலேயே மு.க.ஸ்டாலின், அதிகாலையில் நடைப்பயிற்சி மேற்கொள்வது வழக்கமான ஒன்று. தொடர்ந்து ஒரு மணிநேரத்திற்கு மேலாக உடற்பயிற்சி மேற்கொள்வதிலும் தணியாத ஆர்வம் கொண்டவர் மு.க.ஸ்டாலின்.

அரசியல் மற்றும் அரசு விழாக்களில் கலந்து கொள்வதற்காக வெளியூர் செல்லும் போதும், அதிகாலையில் எழுந்து நடைப்பயிற்சியை தவறாமல் மேற்கொண்டு வருபவர் மு.க.ஸ்டாலின். அதுவும் சென்னை மேயராக அவர் பதவி வகித்த போது, அதிகாலையில் எழுந்து சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று அங்கேயே நடைப்பயிற்சி மேற்கொண்டதுடன், அந்தநத் பகுதி மக்களிடம் குறைகளையும் ஆர்வமுடன் கேட்டறிந்து அவர் நிறைவேற்றி வைத்த நிகழ்வுகளை, சென்னையில் உள்ள ஒவ்வொரு மண்டலத்தைச் சேர்ந்த மக்கள், இன்றும் நினைவுக்கூர்ந்து வியப்புடன் கூறுவதை கேட்க முடிகிறது.

தன்னைப் போல உடலை ஆரோக்கியமாக பேண வேண்டும் என்று திமுக.வின் இரண்டாம் கட்ட தலைவர்களுக்கு கண்டிப்புடன் கூறி வருகிறார் தளபதி மு.க.ஸ்டாலின் என்று திமுக முன்னணி நிர்வாகிகள் அடிக்கடி கூறுவார்கள்.

அந்தவகையில், முதல்வர் பதவியேற்றப் பிறகும், அதிகாலை நடைப்பயிற்சி, மிதிவண்டி சவாரி, உடற்பயிற்சி உள்ளிட்டவற்றை தொடர்ந்து செய்து வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அதிக பணி காரணமாக நள்ளிரவில் தூங்கச் சென்றாலும் அதிகாலை 4.30 மணியளவில் எழுந்தவுடன், நாளிதழ் வாசிப்பு, உடற்பயிற்சி உள்ளிட்டவற்றை மேற்கொள்வதில் முதல்வர் தயக்கம் காட்டியதே இல்லை என்கிறார்கள், அரசு அதிகாரிகள்.

முதல்வராக மே 7 ஆம் தேதி பதவியேற்ற நாள் முதலாகவே, கொரோனோ தடுப்பு நடவடிக்கைகளில் தனித்த கவனத்துடன் செயல்பட்டு வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், சேலம், கோவை, திருச்சி, மதுரை என பல மாவட்டங்களுக்குச் சென்று கொரோனோ தடுப்பு பணிகளை ஆய்வு செய்ததுடன், தனது தொகுதியான கொளத்தூருக்கும் 15 நாட்களுக்கு ஒருமுறை சென்று மக்கள் நலத்திட்டப் பணிகளை வழங்கி வருகிறார். மேலும், கொளத்தூர் தொகுதியில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளையும் துரிதப்படுத்தி வந்துள்ளார்.

இப்படி தொடர்ந்து நேரம், காலம் பார்க்காமல் உழைத்த காரணத்தினால் அவரது உடலில் சிறியளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக நேற்று காலை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனைக்குச் சென்று பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டார். அதற்குள் முதல்வர் மருத்துவமனையில் அனுமதி என்ற தகவல் பரவியதால், திமுக நிர்வாகிகள் உள்பட பொதுமக்களும் அதிர்ச்சியடைந்து, முதல்வரின் உடல்நலம் குறித்து அறிந்து கொள்ள ஆர்வம் காட்டினர்.

மேலும், நேரம் காலம் பார்க்காமல் உழைப்பதை முதல்வர் மு.க.ஸ்டாலின் குறைத்துக் கொள்ள வேண்டும். உடல்நலனில் மிகுந்த அக்கறை கொள்ள வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் அண்ணா அறிவாலயத்திற்கும், ஆழ்வார்ப்பேட்டை இல்லத்திற்கும் தொடர்பு கொண்டு அன்புடன் கேட்டுக் கொண்டனர்.

தனது உடல்நலன் குறித்து பொதுமக்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் அச்சம் கொண்டுள்ளதை மேலும் நீட்டித்துவிடக் கூடாது என்று கருதியோ எண்ணவோ, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அதிகாலையிலேயே மிதிவண்டி பயிற்சியில் ஈடுபட்டு, திமுக வினரையும், பொதுமக்களையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை மாமல்லபுரம் புறப்பட்டுச் சென்றார். வழியில் முட்டுக்காடு பாலத்தில் மிதிவண்டி பயிற்சிக்கான பிரத்யேக உடையை அணிந்து தனது நண்பர்கள் சிலருடன் எந்த பந்தாவும் இன்றி 18 கிலோ மீட்டர் தூரம் பயணித்து மாமல்லபுரம் சென்றார். வழியில், எதிர்கொண்ட பெண்கள் மற்றும் இளைஞர்கள் உள்ளிட்ட பொதுமக்களிடம் நலம் விசாரித்ததுடன், தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்தும் ஆர்வமுடன் கேட்டறிந்தார்.

காவல்துறை பாதுகாப்பு இன்றி தனியாகவும், எளிமையுடனும் காணப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலினைப் பார்த்து பொதுமக்கள் நெகிழ்ச்சியடைந்தனர். முதல்வரிடம் கலந்துரையாடுகிறோம் என்ற எண்ணமே துளியும் இன்றி, சகஜமாக பேசி, அவருடன் பலர் செல்பியும் எடுத்துக் கொண்டனர்.

முதல் அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றுக் கொண்ட பிறகு கடந்த 60 நாட்களில் முதல்முறையாக அவர் மேற்கொண்ட மிதிவண்டி பயிற்சி இது என்கிறார்கள் திமுக முன்னணி நிர்வாகிகள்.

மிதிவண்டி பயிற்சியை முடித்த முதல்வர் மாமல்லபுரத்தில் உள்ள ஓட்டல் அடையார் ஆனந்த பவனில் சிறிது இளைபபாறிவிட்டு சென்னை திரும்பினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் மிதிவண்டி பயிற்சியையொட்டி, சிறப்பான காவல்துறை ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை.

இதனால் 18 கிலோ மீட்டர் தூரத்திற்கு இடையே உள்ள பகுதிகளைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள், காலதாமதமாகதான் முதல்வர் மு.க.ஸ்டாலின் தங்கள் பகுதிக்கு வந்ததை அறிந்து ஆச்சரியப்பட்டுள்ளனர். மு.க.ஸ்டாலின் மிதிவண்டி பயிற்சி மேற்கொண்டது தொடர்பான தகவல் புகைப்படங்களுடன் சமூக ஊடகங்களில் வெளியானதை பார்த்தும் அவர்கள் வியப்படைந்துள்ளனர்.

நேற்று காலை ராமச்சந்திரா மருத்துவமனையில் உடற் பரிசோதனை.. இன்று காலை மாமல்லபுரத்தில் மிதிவண்டி பயிற்சி. இளமை துள்ளலுடன் காணப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஒவ்வொரு செயலும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது என்கிறார்கள் அவருக்கு பாதுகாப்பு வழங்கி வரும் காவல்துறை உயரதிகாரிகள்…

கேரளம் உள்ளிட்ட இடதுசாரிகள் ஆளும் மாநிலங்களில்தான் முதல் அமைச்சரும், அமைச்சர்களும் இவ்வளவு எளிமையாக மக்களுடன் நெருக்கமாக பழகுவார்கள். அந்த பெருமையை இப்போது தமிழகத்திற்கும் கிடைக்கும் வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின், பொதுமக்களுடன் இருந்து விலகாமல், அவர்களில் ஒருவர் தான் என்பதை இதுபோன்ற நேரங்களில் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்.

பந்தா இல்லாத முதல்வரை தமிழகம் நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் சந்திக்கிறது என்பதே சிறப்புக்குரிய ஒன்றுதான்.,