Fri. Nov 22nd, 2024

செய்தித்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன், முதல்வர் மு.க.ஸ்டாலினின் உத்தரவின்பேரில் திருப்பூர் மாவட்டத்தில் கொரோனோ தடுப்பு மற்றும் மருத்துவக் கட்டமைப்புகளை விரிவுப்படுத்தும் பணியில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தில் முன்களப் பணியாளர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கும் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன்…..

இதன் காரணமாக சென்னை தலைமைச் செயலகம் முதல் மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மக்கள் செய்தித் தொடர்பு அலுவலர் (பி.ஆர்.ஓ.) பதவிக்கான பணிமாறுதல் நிலுவையில் உள்ளது.

கடந்த பத்தாண்டுகளாக அதிமுக ஆட்சியில் இருந்ததால், திமுக முன்னணி தலைவர்களின் வாரிசுகளான செய்தித்துறை அதிகாரிகள், முக்கியத்துவம் இல்லாத இடங்களில் பணியாற்றி வந்தனர். மேலும், 70 க்கும் மேற்பட்ட அதிகாரிகள், தங்களது சொந்த மாவட்டத்திற்கு வெகு தொலைவில் பணியாற்றி வருகின்றனர்.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தங்கள் வேதனைகள் எல்லாம் தீரும். தாங்கள் விரும்பிய இடங்களில் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கும் என்று மிகுந்த ஆவலுடன் இருந்து வருகிறார்கள். ஆனால், இந்த நிமிடம் வரை செய்தித்துறையில் முழுமையான பணியிட மாறுதல் நடைபெறவில்லை. ஆனால், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மட்டும் ரவிச்சந்திரன் என்ற மக்கள் தொடர்பு அலுவலர் பணிமாறுதல் பெற்று வந்துள்ளதாகவும், கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக அவர் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியிடம் உதவியாளராகவும் இருந்தவர் என்றும் பொங்குகிறார்கள் திமுக ஆதரவு அதிகாரிகள்.

திமுக.வையும் அதன் தலைவர் மு.க.ஸ்டாலினையும் தரக்குறைவாக விமர்சனம் செய்த கே.டி.ராஜேந்திரபாலாஜியிடம் உதவியாளராக பணிபுரிந்த ரவிச்சந்திரன், முதல் நபராக பணியிட மாறுதல் பெற்றுள்ளதற்கு நகராட்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவின் பரிந்துரைதான் காரணம் என்று எரிமலை போல சீற்றத்துடன் பேசும் அவர்கள், இதுதொடர்பாக வாட்ஸ் அப் குரூப்பில் தீயாக பரவி வரும் தகவல் அட்டையை நமக்கு அனுப்பி வைத்தனர்.

தனது துறையில் முழுமையான பணியிட மாறுதல் செய்வதற்கு நேரம் இல்லாமல் இருக்கும் செய்தித்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன், மக்கள் தொடர்பு அதிகாரி ரவிச்சந்திரன் பணியிட மாறுதலுக்கு மட்டும் எப்படி சம்மதித்தார் என்று ஆவேசமாக கேள்வி எழுப்பும் திமுக ஆதரவு செய்தித்துறை அதிகாரிகள், மூத்த அமைச்சரின் பரிந்துரை என்பதால் பணிந்து போய்விட்டாரா? என்று கேள்வி மேல் கேள்வி எழுப்புகிறார்கள் அவர்கள்.

One thought on “செய்தித்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் துறையில் அமைச்சர் கே.என்.நேரு தலையீடு? எரிமலைப் போல சீற்றம் காட்டும் செய்தித்துறை அதிகாரிகள்….”

Comments are closed.