Sun. Nov 24th, 2024

தமிழக அரசு துறைகளில் மிகவும் முக்கியமான துறை என்றால், செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறைதான். ஒவ்வொரு ஆட்சியின் போதும், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் தொடர்பான செய்திகளை பொதுமக்களிடம் கொண்டு செல்வதில் முக்கிய பங்கு வகிப்பது இந்த துறை தான். இதனால், தலைமைச் செயலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், மாநகராட்சிகள், அருங்காட்சியகங்கள், போக்குவரத்து கழகங்கள் என அனைத்து இடங்களிலும் பதவிகளை பிடிப்பதற்காக, செய்தித்துறையில் உள்ள அதிகாரிகள் போட்டி போடுவார்கள்.

அந்தவகையில், கடந்த பத்தாண்டுகளாக அதிமுக தொடர்ந்து ஆட்சியில் இருந்து வந்ததால், அதிமுக நிர்வாகிகளின் வாரிசுகளான செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை அதிகாரிகள் தலைமைச் செயலகம் உள்பட மாநிலம் முழுவதும் ராஜாங்கம் செய்து வந்தனர். இந்த பத்தாண்டு காலமும் திமுக முன்னணி நிர்வாகிகளின் வாரிசுகளான செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை அதிகாரிகள், மாற்றான் தாய் பிள்ளைகளைப் போல, செல்வாக்கு இல்லாத அரசு துறைகள் அல்லது அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி வந்தனர்.

பத்தாண்டு காலம் அதிமுக ஆட்சியில் விருப்பப்பட்ட இடங்களுக்கு பணி மாறுதல் பெற முடியாமல் ரத்தக் கண்ணீர் வடிந்து வந்த செய்தி மக்கள் தொடர்புத்துறை அதிகாரிகள் ஏராளமான பேர் உள்ளனர். அவர்கள் எல்லாம் திமுக நிர்வாகிகளின் வாரிசுகள் என்பதாலும், தனக்கு சாமரம் வீச மாட்டார்கள் என்பதாலும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சமுதாயத்தைச் சேர்ந்த முன்னாள் செய்தித்துறை அதிகாரியான எழிலகனின் திருவிளையாட்டில் சிக்கி நாடோடிகளாக ஒவ்வொரு அலுவலகமாக பெட்டியை தூக்கிக் கொண்டு அலைந்தனர்.

யார் இந்த எழிலகன்?

இப்படியொரு பக்கம் திமுக குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பழிவாங்கப்பட்டவர்கள் அதிகமாக இருந்தாலும் கூட, எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரான பிறகு செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சூப்பர் ஸ்டராக வந்து அமர்ந்த எழில் என்கிற எழிலகனுக்கு யாரெல்லாம் பணிவிடை செய்ய தயாராக இருந்தார்களோ, அவர்களுக்கு எல்லாம் தலைமைச் செயலகம் உள்பட செல்வாக்குமிக்க துறைகளில் பணிமாறுதல் கொடுத்து சீராட்டி வந்தவர் எழிலகன்..

ஆக மொத்தத்தில், அதிமுக ஆதரவு மனநிலை, திமுக ஆதரவு மனநிலை என்று கடந்த காலத்தில் இருந்த செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை இன்றைக்கு எழிலகனால் பழிவாங்கப்பட்டவர்கள் ஒரு அணியாகவும் அவரால் சீராட்டி வளர்க்கப்பட்டவர்கள் ஓரு அணியாகவும் பிளவுபட்டு நிற்கும் அளவுக்கு சென்றுவிட்டது.

திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்த நாளில், கடந்த பத்தாண்டுகளாக தலைமைச் செயலகத்திற்கே வராத செய்தித்துறை அதிகாரிகள், எழிலகனால் நான்காண்டுகளுக்கு முன்பு விரட்டப்பட்ட அதிகாரிகள் அனைவரும் தற்போது தலைமைச் செயலகத்திற்கு துள்ளிக் குதித்து வந்துவிட்டார்கள். அத்தனை பேரும் திமுக குடும்பத்து வாரிசுகள் என்றாலும் கூட, செல்வாக்கு மிக்க பதவிகளைப் பெற, அவர்களுக்குள்ளாக எழுந்துள்ள போட்டி என்பது, அரசியல் கட்சிகளான திமுக – அதிமுக இடையேயான குரோதத்தை விட பலமடங்கு சக்தி வாய்ந்தது.

முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற நாளில் இருந்து இன்று வரை கிட்டதட்ட, 13 நாட்கள் கடந்துவிட்ட பிறகும் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறையில் முழுமையான பணிமாறுதல் நடைபெறவில்லை.

முதலமைச்சர் அலுவலகத்தில் இரண்டு பணியிடங்களும், கூடுதல் இயக்குனர் என்ற உயரதிகாரி பதவி என மொத்தம் 3 பதவிகளுக்குதான் பணிமாறுதல் நடைபெற்று இருக்கிறது. ஆனால், பணிமாறுதலுக்காக காத்துக் கிடப்பவர்களில், இரண்டு கூடுதல் இயக்குனர், 10க்கும் மேற்பட்ட இணை இயக்குனர்கள், அதே அளவுக்கு அல்லது ஒன்றிரண்டு கூடுதலாக துணை இயக்குனர்கள், அதற்கு அடுத்த நிலையான உதவி இயக்குனர்கள், 50க்கும் மேற்பட்ட மக்கள் தொடர்பு அலுவலர்கள் என 100க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.

தலைமைச் செயலகத்தில் தங்களுக்கு பதவி கிடைக்கும் என்று திமுக வாரிசுகளில் செல்வாக்கு மிக்கவர்கள், அவரவருக்கு தெரிந்த வழிகளில் சிபாரிசுடன் நாள்தோறும் தலைமைச் செயலகத்திற்கு வந்து செல்கின்றனர். பலர், தங்களுக்கு தலைமைச் செயலகத்தில் அதிகாரப்பூர்வமாக பணிமாறுதல் வழங்காத போதும், முதலமைச்சர் அலுவலகம், செய்திப்பிரிவு போன்ற இடங்களில் பணியாற்றிக் கொண்டு வருகின்றனர்.

இப்படி திமுக குடும்பத்து அரசு அதிகாரிகளே, தங்களுக்கு எங்கு பணிமாறுதல் கிடைக்கும் என்று அல்லலுற்று அலைந்து கொண்டிருக்கும் போது, கடந்த ஐந்தாண்டு காலம் செல்வாக்குமிக்க பதவிகளில் சுகம் கண்ட அதிமுக குடும்பத்து அரசு அதிகாரிகளும், எழிலகனின் சிபாரிசோடு கோட்டைக்கு படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற தகவல்தான் அதிர்ச்சிக்குரிய செய்தி.

கடந்த பத்து நாட்களாக கோட்டைக்கு சென்று வந்து கொண்டிருக்கும் மூத்த திமுக நிர்வாகியின் குடும்ப வாரிசான செய்தித்துறை அதிகாரி ஒருவர், எவ்வளவு நாள் காலதாமதம் செய்தாலும் 100 சதவிகிதம் திருப்திபட்டுக் கொள்ளும் வகையில் பணியிட மாற்றம் செய்ய முடியாது. அதனால், நல்லதோ, கெட்டதோ, தலைமைச் செயலகம் முதல் அனைத்து துறைகளுக்கான பணியிடங்களில் உடனடியாக பணியிட மாற்றம் செய்து உத்தரவுப் பிறப்பித்தால், ஒவ்வொரு நாளும் படும் அவஸ்தையில் இருந்து விடுபட்டு, எந்த இடத்திற்கு பணிமாற்றம் செய்கிறார்களோ, அங்கே போய் நிம்மதியாக வேலைப் பார்ப்போம் என்று அலுத்துக் கொண்டார் அந்த அதிகாரி..

செய்தி மற்றும் மக்கள் விளம்பரத்துறை அதிகாரி வெள்ளகோவில் சாமிநாதன் விரைந்து முடிவெடுப்பாரா? என்பதுதான் ஒட்டுமொத்தமாக அவரது தலைமையின் கீழ் பணியாற்றக் கூடிய அலுவலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.