Sat. Nov 23rd, 2024

ஏப்ரல் 1 ஆம் தேதி தமிழகத்தில் கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,817 பேர் மட்டுமே.

ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு. மறுநாள் ஏப்ரல் 7 ம் தேதி தமிழகத்தில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிககை 3,986 அதிகரித்தது.

அன்றைய தினம் தமிழகம் முழுவதும் ஒட்டுமொத்தமாக கொரோனோவுக்கு சிகிச்சை எடுத்து வந்தவர்களின் எண்ணிக்கை 27,743 பேர்.

ஏப்ரல் 15 ஆம் தேதி தமிழகம் முழுவதும் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,987 ஆக அதிகரித்த நிலையில், ஒட்டுமொத்தமாக சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை அன்றைய தேதியில் 58,097 ஆக அதிகரித்து இருந்தது.

ஏப்ரல் 26 ஆம் தேதி தமிழகத்தில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,842 அதிகரித்ததை அடுத்துதான் காபந்து அரசான அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி விழித்துக் கொண்டு, இரவு நேர ஊரடங்கு, அழகு நிலையம், ஹோட்டல்களில் உட்கார்ந்து சாப்பிட அனுமதி மறுப்பு, மத வழிபாட்டு தலங்களில் பிரார்த்தனைக்கு தடை என பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது.

சட்டமன்றத் தேர்தலுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்ட மே 2 ஆம் தேதி தமிழகத்தில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30,621 ஆக அதிகரித்த நிலையில், தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக கொரோனோவுக்கு சிகிச்சைப் பெற்றவர்களின் எண்ணிக்கை 1,82,772 ஆக உயர்ந்து உச்சத்தைத் தொட்டது.

ஏப்ரல் 6 முதல் மே 2 ஆம் தேதி வரை காபந்து அரசாங்கத்தின் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி, தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறைச் செயலாளர் உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் இரண்டு முறை ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்திற்குப் பிறகும், ஏப்ரல் மாதம் முழுவதும் தமிழகத்தில் மிக,மிக வேகமாக கொரோனோ தொற்று பரவி வருவது குறித்தும், உயிர்ப்பலி அதிகரித்து வருவது குறித்தும் பிரதமர் மோடிக்கு காபந்து முதல்வர் பழனிசாமி ஒரு கடிதம் கூட எழுதவில்லை.

பிரதமர் மோடியும் மேற்கு வங்க தேர்தல் பிரசாரத்தில் பிஸியாக இருந்தார். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கதறியதற்கே பிரதமர் செவி மடுக்கவில்லை என்பது வேறு விஷயம்.

மருத்துவக் கட்டமைப்பு விரிவுப்படுத்துவது தொடர்பாக, சென்னை, சேலம் உள்பட எந்த மாவட்டத்திலும் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று ஆய்வு நடத்தவே இல்லை. தேர்தல் முடிந்தவுடன் சேலத்திற்கு சென்று தனது வீட்டில் பதுங்கிக் கொண்டார்.

கிட்டதட்ட 30 நாட்களும் (ஏப்ரல்) தமிழகத்தை பெருந்துயரில் ஆழ்த்தப்போகிற கொரோனோவைப் பற்றிய சிந்தனையே அவருக்கு எழவில்லை.

தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் இருப்பதால், கொரோனோ தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த முடியவில்லை என்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து கூட காபந்து அரசின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முறையிடவில்லை.

கிட்டதட்ட ஒரு மாதக் காலத்தில், ஆற அமர செய்து இருக்க வேண்டிய மருத்துவக் கட்டமைப்பை விரிவுப்படுத்தும் பணிகளை மேற்கொள்ளாமல் கும்பகர்ணன் போல தூங்கிக் கொண்டிருந்துவிட்டு, மே 2 ஆம் தேதிக்குப் பிறகு பிரதமருக்கு கடிதத்திற்கு மேல் கடிதம் எழுதிக் கொண்டு அரசியல் செய்துக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி என்று குமறுகிறார்கள் சமூக நல ஆர்வலர்கள்.

ரெம்டெசிவிர் மருந்து, ஆக்சிஜன், கொரோனோ தடுப்பூசி மருந்துகளை தமிழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று ஒரு கடிதம்… வெளிநாட்டில் மருத்துவம் படித்துவிட்டு வந்து தமிழகத்தில் பதிவு செய்துள்ள மருத்துவர்களுக்கான தடையை நீக்கி, சிகிச்சை அளிக்க அனுமதிக்க வேண்டும் என்று ஒரு கடிதம், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நிதியுதவி வழங்க வேண்டும் என்று ஒரு கடிதம்…

இப்படி கடிதம் எழுதிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு, இந்த சிந்தனையெல்லாம் ஏப்ரல் மாதம் முழுவதும் அவரது மூளையில் உதிக்கவே இல்லையே, ஏன்? என்றும் கேள்வி எழுப்புகிறார்கள் ஓய்வுப் பெற்ற அரசு சுகாதாரத்துறை அதிகாரிகள்..

டெல்லியைப் போல சமாளிக்க முடியாத அளவிற்கு கொரோனோ பாதிப்பு தமிழகத்தில் உச்சம் தொட்டதற்கு குற்றம் சாட்ட வேண்டும் என்றால் முதலில் காபந்து முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமியைதான் சொல்ல வேண்டும். இரண்டாவதாக தலைமைச் செயலாளராக இருந்த ராஜிவ் ரஞ்சன், 3 வதுதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், இதற்கு எல்லாம் மேலாக ஆளுநர் என்று ஒருவர் கிண்டி ராஜ்பவனில் உட்கார்ந்து பிடில் வாசித்துக் கொண்டிருக்கிறாரே தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தையும் குற்றவாளிகள் கூண்டில் ஏற்ற வேண்டும் என்கிறார்கள் கொரோனோவில் உறவுகளை பலி கொடுத்த அப்பாவி மக்கள்.

மே 7 ஆம் தேதி திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற நாளில் இருந்து இன்று காலை வரை 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனோவுக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு ஒரு வாரம் கடந்த பிறகும் தினசரி பாதிப்பு 30,000த்துக்கு கீழே குறையவில்லை. கடந்த 13 நாட்களில் மருத்துவக் கட்டமைப்பை பெருக்கும் நடவடிக்கையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும், மருத்துவ வசதி கிடைக்காமல் அவதியுறும் மக்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் இருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி சொன்ன இரண்டு கோரிக்கைகளில் ஒன்றை நிறைவேற்றியுள்ளார், முதல்வர் மு.க.ஸ்டாலின். வெளிநாட்டில் மருத்துவம் படித்த மருத்துவர்கள் 500 பேர், தமிழகத்தில் மருத்துவம் பார்க்க அனுமதித்துள்ளார்.கடந்த 4 ஆண்டுகளில் எடப்பாடி பழனிசாமி செய்யாத சாதனை இது..

இரண்டவதாக, அமைப்புச்சாரா தொழிலாளர்களுக்கு நிதியுதவி என்பது.அதையும் அரசு பரிசீலிக்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு செயல்படும் அரசாக இருக்கிறது. முந்தைய அதிமுக அரசைப் போல, அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் நடித்தார். அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் நடிப்பில் வெளுத்து கட்டினார்.

எல்லாவற்றையும்விட, கொரோனோவை காரணம் காட்டி ஊழலில் திளைத்தனர், முந்தைய ஆட்சியாளர்கள். கொரோனோ தடுப்பு தகரம் அடித்ததற்கே 20 ஆயிரம் ரூபாய் பில் போட்டவர்கள் அதிமுக ஆட்சியாளர்கள். அதுபோன்ற முறைகேடுகள் குறித்த செய்திகள், திமுக.வின் கடந்த 13 நாள் ஆட்சியில் இல்லை என்பது கொரோனோ தொற்றின் அச்சத்திற்கு இடையே கிடைக்கும் சிறிய அளவிலான நிம்மதி…

பொதுமக்களுக்கு பொறுப்பு வரவில்லை என்றால், தமிழகத்தில் மரண ஓலம் ஒலிப்பது இப்போதைக்கு நிற்கவே நிற்காது.