முதலமைச்சராக இருந்த போதெல்லாம் எடப்பாடி பழனிசாமி மாதத்திற்கு ஒருமுறையோ அல்லது பலமுறையோ சேலத்திற்கு பயணம் மேற்கொள்வார். அப்போதெல்லாம் தவறாமல் தனது சொந்த தொகுதியான எடப்பாடிக்கு செல்வது உண்டு. சேலத்தில் இருந்து எடப்பாடிக்கு செல்வது என்பது அவருக்கு மிகவும் பிடித்தமான பயணமாகும்.
முதலமைச்சர் அந்தஸ்தோடு சேலத்தில் இருந்து எடப்பாடிக்கு பயணமாகும்போது இடைப்பட்ட தூரமான சுமார் 45 கிலோ மீட்டர் தூரத்திற்கு வழியெங்கும் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள்.
முதல்வருக்கு உரிய கார் அணிவகுப்பில் அவரின் காருக்கு முன்பும் பின்பும் என 10 முதல் 15 கார்கள் பறந்து செல்லும். ஊர் மக்களே வாய் பிளந்து வியந்து பார்க்கும் வகையில் முதல் அமைச்சரின் கார் பவனி, அல்லுசில்லு பறக்கும் விதமாக இருக்கும். கடந்த நான்காண்டுகளில் ஒவ்வொரு முறையும் தனது எடப்பாடி தொகுதிக்கு செல்லும் போது இ.பி.எஸ். பூரித்து போவார். அதுவும் முதல் அமைச்சராக அவர் பதவியேற்றவுடன் எடப்பாடிக்கு வந்தபோது ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்றார் இ.பி.எஸ். அந்த நாளை இன்றைக்கும் நினைவுக்கூர்ந்து பேசிய அதிமுக நிர்வாகியின் கண்களில் ஆயிரம் வாட்ஸ் பிரகாசம்..
சேலத்தில் இருந்து புறப்பட்டு காக்காபாளையம், கொங்கனாபுரம் வழியாக எடப்பாடி ஊர் எல்லைக்குள் நுழையும் போது வெல்லாண்டிவலசு என்ற ஊர் வரும். அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை எடப்பாடி நகரின் நுழைவுப்பகுதி உள்ளதால், போலீஸ் அதிகாரிகள், அரசு உயர் அதிகாரிகள் புடை சூழ கம்பீரமாக நடந்து சென்றவர் எடப்பாடி பழனிசாமி. அவரைச் சுற்றி நூற்றுக்கணக்கான அதிமுக தொண்டர்கள் நடந்து சென்றார்கள். அவர்களின் ஆரவாரம் அன்றைக்கு தூள் கிளப்பியது. .
ராஜ ராஜ சோழன் திரைப்படத்தில் அரண்மனை தர்பாரில் நடிகர்திலகம் சிவாஜி கணேசன் கம்பீரமாக நடந்து செல்வாரே, அந்த திரைக்காட்சியை, நிகழ்காலத்தில் நிஜத்தில் பார்த்தது போல இருந்தது இ.பி.எஸ். ஸின் கம்பீர நடை என்றார் அவரது விசுவாசி. இப்படி ஆர்ப்பாட்டமாகவும், தொண்டர்கள் ஆர்ப்பரிக்கவும் எடப்பாடி நகரில் கடந்த நான்காண்டுகளாக கெத்து காட்டியவர் இ.பி.எஸ்…ஆனால், இன்றைக்கு அவரின் நிலையோ பரிதாபமாகிவிட்டது என்கிறார்கள் எடப்பாடி அதிமுக நிர்வாகிகள்.
முதல்வர் மு.க.ஸ்டாலினின் சேலம் பயணத்தை முன்னிட்டு, எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, சேலத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து எடப்பாடி அருகே உள்ள தனது சொந்த கிராமமான சிலுவம்பாளையத்திற்கு சத்தமே இல்லாமல் சென்று தங்கிவிட்டார்.
முதலமைச்சராக பதவி வகித்த போது சேலத்தில் இருந்து காக்காபாளையம், கொங்கணாபுரம் வெல்லாண்டிவலசு ஆகிய ஊர்கள் வழியாக கார் அணிவகுப்பில் ஆர்ப்பாட்டமாக சென்ற எடப்பாடி பழனிசாமி, முதமைச்சருக்கான கார் அணிவகுப்பு இல்லாத இன்றைய சூழலில், வெல்லாண்டிவலசு, எடப்பாடி நகரம் வழியாக தனது சிலுவம்பாளையம் கிராமத்திற்கு செல்லாமல், கொங்கணாபுரத்தில் இருந்து புறவழிச்சாலை வழியாக தனது சிலுவம்பாளையம் கிராமத்திற்கு சத்தமில்லாமல் சென்று விட்டார் எடப்பாடி பழனிசாமி. அவர் வந்ததே எடப்பாடி அதிமுக.வினர் அதிகம் பேருக்கு தெரியாது என்கிறார்கள் அதிமுக முன்னணி நிர்வாகிகள்.
சேலத்தில் உள்ள 11 தொகுதிகளில் அதிமுக.வும் அதன் கூட்டணியும் 10 தொகுதிகளில் வெற்றிப் பெற்றிருந்தாலும் கூட, செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் திமுக கொடி பறப்பதால், வரும் ஐந்தாண்டுகள் சேலத்தில் எடப்பாடி பழனிசாமியின் கொடி தலை தொங்கியதைப் போல தாழ்ந்துதான் பறக்க வேண்டும் என்று நெஞ்சை நிமர்த்துகிறார்கள் எடப்பாடியில் உள்ள திமுக முன்னணி நிர்வாகிகள்…
ஆடாதடா ஆடாதடா மனிதா.. பாட்டுச் சத்தம் எங்கேயே மெல்லிய குரலில் கேட்டுக் கொண்டே இருக்கிறது…