மதுரையில் கர்ப்பிணி மருத்துவர் சண்முகப்பிரியா, கொரோனோவுக்கு பலியான சோகமே மருத்துவர்களிடம் இருந்து இன்னும் நீங்காத நிலையில், மற்றொரு கர்ப்பிணி மருத்துவர் கொரோனோ தொற்றால் உயிரிழந்திருப்பது மருத்துவத்துறையை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக பெண் மருத்துவர்கள், அடுத்தடுத்து நேரிட்டு வரும் கொரோனோ மரணங்களால் மிகுந்த மனஉளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர்.
கொரோனோ தொற்று பரவலால் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுணர்வுடன் இருக்க வேண்டும் என தமிழக அரசு தொடர்ந்து எச்சரித்து வருகிறது. இருப்பினும், குடும்ப விழாக்களை நடத்துவதில் ஆர்வம் காட்டும் மக்கள், கொரோனோ நெறிமுறைகளை முறையாக பின்பற்றாமல் அலட்சியம் காட்டி வருவதால், அப்பாவி மக்கள் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூரைச் சேர்ந்தவர் மருத்துவர் ராமலிங்கம் மணியம்மாளின் செல்ல மகள் கார்த்திகா. 28 வயதான இவர், மருத்துவர். இவரது கணவரும் மருத்துவர். திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். கர்ப்பிணியான கார்த்திகாவிற்கு கடந்த வாரம் போளூரில் வளைகாப்பு நிகழ்வு நடைபெற்றுள்ளது. இதில், உறவினர்களின் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது.
இந்த நிகழ்வுக்குப் பிறகு கார்த்திகாவின் தந்தை ராமலிங்கம், தாய் மணியம்மாள் ஆகியோர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுள்ளனர். அதனைத்தொடர்ந்து கார்த்திகாவுக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட, உடனடியாக அவர், திருவண்ணாமலையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மேற்கொள்ள மருத்துவப் பரிசோதனையில், கொரோனோ தொற்று தாக்கியுள்ளது தெரியவந்தது. இதனையடுத்து, அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனால், அங்கு அவரின் உடல்நிலை மோசமடைய, உடனடியாக அங்கிருந்து வானரகத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அங்கு ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை கிடைக்காததால், அங்கிருந்து சென்னை அண்ணா சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் கார்த்திகா அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் பலனில்லாமல் இன்று காலை பரிதாபமாக கார்த்திகா உயிரிழந்துள்ளார். கர்ப்பிணியான கார்த்திகாவின் மரணம், உறவுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.