Thu. May 2nd, 2024

புதிய கல்விக் கொள்கை தொடர்பான மத்திய கல்வித்துறை மந்திரி தலைமையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தை தமிழக அரசு புறக்கணித்துள்ளது.

இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழு வடிவமைத்த “கல்விக் கொள்கை-2020” -க்கு மத்திய அரசு கடந்த ஆண்டு ஒப்புதல் வழங்கியது. புதிய கல்விக் கொள்கை அனைவருக்கும் சென்று சேரும் வகையில், மத்திய அரசு அதனை பல்வேறு மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட்டு இருந்தது.

2021-ம் ஆண்டுக்குள் கல்விகொள்கையை அமல்படுத்த அறிவுறுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து, புதிய கல்விக்கொள்கையை அமல் செய்வது குறித்து மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்த மத்திய அரசு முடிவு செய்து அனைத்து மாநில கல்வித்துறை செயலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, நேற்று தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மத்திய கல்வித்துறை மந்திரி ரமேஷ் பொக்ரியாலுக்கு எழுதிய கடிதத்தில், புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக மாநில செயலாளர்களுடன் ஆலோசனை நடத்துவதற்கு மாறாக, மாநில அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. தமிழக அரசு எழுதிய இந்த கடிதத்திற்கு மத்திய அரசு எந்தவித பதிலும் வழங்கவில்லை.

இந்நிலையில், புதிய கல்விக் கொள்கை தொடர்பான மத்திய கல்வித்துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால் தலைமையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தை தமிழக அரசு புறக்கணித்துள்ளது. இதன்படி தமிழகத்தின் சார்பில் அதிகாரிகள் யாரும் அந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, புதிய கல்விக் கொள்கையின் மூலம் குலக்கல்வியை கொண்டு வர மத்திய அரசு முயற்சிப்பதாகவும், தமிழகம் கடைப்பிடித்து வரும் இருமொழிக் கொள்கைக்க வேட்டு வைக்கும் வகையில் மும்மொழி திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசின் முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.