Fri. Apr 19th, 2024

செய்தி -தஞ்சை இனியன்

அவரிடத்தில் நான் நெருங்கிப் பழகியதில்லை. ஆனாலும் அவர்பற்றி ஊர்பேசுவதை அறிவேன். அவரை நிலக்கிழார் என்பார் சிலர். அவரை அரசியல் அதிசயம் என்பார் சிலர். கல்விக் காவலர் என்பார் சிலர். நெறிபிசகா நேர்மையாளர் என்பார் சிலர். பலரும் எங்கள் குடும்பத்தின் குலச்சாமி என்பார்கள். அத்தனைப் புகழ்மொழிகளுக்கும் பொருத்தமானவர்தான் அவர்.ஆனாலும் தஞ்சை மண்ணின் பெருமை என்று சொல்கிற அளவுக்கு அவர் ஒரு தனித்த ஆளுமை.

செல்வம் அவரிடத்தில் இருந்தது. ஆனால் கல்வியையே செல்வமெனக் கருதி அதை எல்லோருக்கும் கொடுக்கச் செய்தார். நிலபுலன்கள் கிடந்தன நிறைய.. ஆனால் அவரோ தன் ஐம்புலன்களின் ஒழுக்கத்தையே ஆராதித்தார். தனிமனித ஒழுக்கமே அவரது தவமாக இருந்தது. தானும் தன்னைச் சுற்றி இருப்பவர்களும் அக ஆழம் வரை தூய்மையாக இருக்கவேண்டும் என விரும்பி வாழ்ந்தவர் அவர்.

கி. துளசி அய்யா வாண்டையார்.

ஒருமுறை பூண்டி கல்லூரியில் பொறியியல் படிப்பும் துவங்குவதற்காக அனுமதிகேட்டு விண்ணப்பிக்கச் சொல்லியிருக்கிறார் அய்யா. மேலிடத்திலிருந்து வந்த அதிகாரிகள் இடம், துறைகள் பற்றியெல்லாம் ஆய்வுசெய்துவிட்டு “எல்லாம் சிறப்பாக இருக்கிறது” என்று சொல்லிவிட்டு மெதுவாக பேரத்தைத் தொடங்கியிருக்கிறார்கள். செய்தி அய்யாவின் காதுக்குப் போயிருக்கிறது. தனது அலுவலர்களை அழைத்த அய்யா, அந்தக் கோப்புகளை ஓரமாக வைத்துவிட்டு, அதிகாரிகளை நன்கு விருந்தோம்பி அனுப்பி வைக்குமாறு சொல்லியிருக்கிறார். அதுதான் அவர் நேர்மை அறம்.

இன்றளவும் பூண்டி புட்பம் கல்லூரி கலைக்கல்லூரியாகத்தான் இருக்கிறது. இளங்கலைகள் வேண்டாம் என்று பொறியியலைத் தேடி ஓடிய மாணவ உலகம்தான் மீண்டும் BA, B.Sc., B.Com என புட்பம் கல்லூரியைத் தேடிவந்து கொண்டிருக்கிறது.

சில நிகழ்ச்சிகளுக்காக அவர் சென்னை வருவார். அவர் தங்கும் சாலிக்கிராமம் இல்லத்தின் அருகேதான் என் அறையும் இருந்தது. இரண்டுமுறை அவரை அங்கே போய்ப் பார்த்திருக்கிறேன். ஆன்மீகம் பற்றிப் பேசுவார். பகவத்கீதையை இன்றைய நடைமுறைக்கு ஏற்றவாறு விளக்குவார். தினமும் யோகாசனங்கள் செய்யச் சொன்னார். இருபது ஆண்டுகளுக்கு முன்பு நண்பர் உடையார்கோயில் குணா அவர்கள் அய்யாவைப் பற்றி ஒரு நூல் வெளியிட்டார்கள்.

அதன் வெளியீட்டு விழா வலம்புரி ஜான், கு.ஞானசம்பந்தம், ம.நடராசன், மரபின் மைந்தன் முத்தையா, சன் டி.வி. வீரபாண்டியன் என களைகட்டியிருந்தது. தன்னைப் பற்றிய விழா என்பதனால் அய்யா அந்த விழாவிற்கு வரவில்லை. அந்த நிகழ்ச்சிக்குத் தொகுப்புரை நான்தான்… அன்று அவருக்காக எழுதிய கவிதைகளில் சிலவற்றை இன்று அஞ்சலிப் பூக்களாய் வைக்கிறேன்:

அவர் ஒருகதர்ச்சட்டை அணிந்த கலைவாணி!

களையெடுக்க மட்டுமே தெரிந்தஒரு சமுதாயத்தைத்தலையெடுக்க வைத்தவர் அவர்!

Agri யை மட்டுமே அறிந்தவர்களாகநாங்கள் இருந்தோம்!

அவர்தான்எங்கள் பெயர்களுக்குப் பின்னால்Degree களைக் கொண்டுவந்து சேர்த்தார்கள்!

படி எடுத்துநெல்லை அளப்போம் நாங்கள்!

எங்களைப் படிக்கவைத்துமண்ணையும் விண்ணையும்அளக்கவைத்தவர் அவர்!

விதைக்கிற பட்டம் தெரியும் எங்களுக்கு!படித்துப் பட்டம் வாங்கச் செய்து எங்களையே விளைய வைத்தவர் அவர்!

தனது கௌரவத்தைக்கர்ப்பகிரகத்தைப் போல வைத்திருக்கிறவர்!

ஆண்டவனைத் தவிரஅடுத்தவர்முன் நிற்காதவர்!

தனது தனிமனித வாழ்வுமட்டுமல்ல!தன் தலைவகிடும்கோணலாகிவிடக்கூடாதுஎன்பதில் குறியாக இருக்கிறவர்!

அரசியல் வாழ்வில் தனதுதரத்தையும் நிறத்தையும்எப்போதும் மாற்றிக் கொள்ளாதவர்!

அவரை அறியாதவர்கள்சொல்கிறார்கள்:”அரசியலில் அவர் இன்னும் இறங்கி வரவேண்டும்”என்று!

ஒன்று புரிந்துகொள்ளுங்கள்அவர் வானத்து நீலம்!

ஒருபோதும் சொட்டுநீலம் ஆகமுடியாது!

அந்த வானத்து நீலம் இன்று வானத்தோடு கலந்துவிட்டது..

செய்தியின் தலைப்பு சுந்தரபுத்தன்…