Thu. May 2nd, 2024

சிங்கப்பூரில் மீண்டும் கொரோனோ தொற்று தாக்குதல் தொடங்கியுள்ளதையடுத்து வரும் புதன்கிழமை முதல் அங்குள்ள பள்ளிகள் மூடப்படவுள்ளன. இந்தியாவில் கண்டறியப்பட்ட புதுவகையான கொரோனோ கிருமி, சிங்கப்பூரிலும் பரவியுள்ளது பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதத்தில் தொற்று தாக்குதல் இல்லாமல் இருந்த நிலையில், புதிதாக பாதிக்கப்படுவோர் பற்றி தகவல் கிடைத்துள்ளதால், பல்வேறு கட்டுப்பாடுகளை கண்டிப்புடன் அமல்படுத்த சிங்கப்பூர் அரசாங்கம் முடிவெடுத்துள்ளது.

காணொலி வாயிலாக செய்தியாளர்களைச் சந்தித்த சிங்கப்பூர் அரசு துறை அதிகாரிகள், தொடக்க நிலை, இடைநிலை மற்றும் ஜுனியர் கல்லூரி ஆகியவை வரும் புதன்கிழமை முதல் மூடப்படும் என தெரிவித்தனர். இல்லத்தில் இருந்தே காணொலி வாயிலாக மாணவர்கள் பாடம் கற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இதே நிலை மே 28 ஆம் தேதி வரை நீடிக்கும் என்றும் அதிகாரிகள் கூறினர்.

ஞாயிறு அன்று 38 பேர் கொரோனோ தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த எட்டு மாதங்களில் ஒருநாள் அதிகபட்ச தொற்று பாதிப்பு இதுதான் என்றும் குழந்தைகள்தான் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் முக்கியமாக டியூசன் வகுப்புகள்தான் கொரோனோ தொற்று பரவல் மையமாக திகழ்ந்திருக்கிறது என்றும் சிங்கப்பூர் அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

B.1.617 என்ற புதிய வகையான கொரோனோ தொற்று தான் குழந்தைகளை தாக்கியுள்ளதாகவும், அச்சப்படும் அளவிற்கு குழந்தைகளுக்கு கடுமையான பாதிப்பு இல்லை என்றும் சிங்கப்பூர் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 16 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக சிங்கப்பூர் அரசு ஆலோசித்து வருவதாக, சுகாதாரத்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.