Fri. Apr 26th, 2024

இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றுக் கொண்ட ரணில் விக்ரமசிங்கே, கொழும்பு நகரில் ஒன்று திரண்டு போராடி வரும் மக்களை தொந்தரவு செய்யும் எந்த நடவடிக்கைகளிலும் காவல்துறை ஈடுபடாது என்று அறிவித்துள்ளார்.

இலங்கை நாடாளுமன்றத்தில் போதிய ஆதரவு இல்லாத நிலையில் எப்படி பிரதமர் பதவியை தக்க வைத்துக் கொள்வீர்கள் என்று பிரிட்டிஷ் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு 1963 ஆம் ஆண்டில் 4 எம்பிகளின் ஆதரவோடு பதவியேற்ற சர்ச்சில் எப்படி ஆட்சியில் நீடித்தார், அதைப்போலே தானும் செயல்படுவேன் என்று பதிலளித்துள்ளார்.

கடுயைமான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில், உணவுப் பொருட்களுக்கு வரலாறு காணாத வகையில் தட்டுப்பாடு எழுந்ததையடுத்து, அந்நாட்டு மக்கள் கடந்த ஒரு மாத காலத்திற்கு மேலாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மஹிந்த ராஜபக்சே ஆகியோரின் தவறான ஆட்சியால்தான் இலங்கை படு வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்று குற்றம்சாட்டி வரும் அந்நாட்டு மக்கள், இருவரையும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நாள்தோறும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

அந்த போராட்டத்தின் புதிய எழுச்சியாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கொழும்பு, கண்டி உள்ளிட்ட நகரங்களில் வரலாறு காணாத கலவரம் மூன்டது. அமைதியான முறையில் போராடி வந்த மக்களை, மஹிந்த ராஜபக்சே ஆதரவாளர்கள் விரட்டி விரட்டி தாக்குதல்தான், இலங்கையில் ஏற்பட்ட கலவரத்திற்கு காரணம் என பிரதான எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் குற்றம் சாட்டின. அனைத்து தரப்பு மக்களின் ஆவேசத்திற்கு பணிந்த, மஹிந்த ராஜபக்சே தனது பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.

அவரது வீடு உள்பட பல அமைச்சர்கள், ஆளும்கட்சி எம்பிக்கள், மேயர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரமுகர்களின் வீடுகளை போராட்டக்காரர்கள் தீ வைத்து கொளுத்தினர். அவர்களை ஒடுக்க அந்நாட்டு அரசு எடுத்த நடவடிக்கையால் ஒரு எம்பி உள்பட 8 பேர் பலியாகினர். 200க்கும் மேற்பட்ட மக்கள் படுகாயமடைந்தனர்.

இலங்கையே கலவரப் பூமியாக மாறியிருக்கும் இந்த நேரத்தில், போராட்டக்காரர்களை கண்டவுடன் துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்ட அந்நாட்டு அரசு, உள்நாட்டில் அமைதியை திரும்ப கொண்டு வரும் நடவடிக்கைகளில் முனைப்பு காட்டியது. அதன் ஒரு நடவடிக்கையாக, பிரதமர் பதவியில் யாரை நியமிப்பது என அதிபர் கோத்தபய ராஜபக்சே தீவிர ஆலோசனை மேற்கொண்டார்.

அந்நாட்டின் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமே தாசாவை பிரதமராக தேர்வு செய்வதற்கான வாய்ப்புகள் நெருங்கி வந்த நேரத்தில், பிரதமர் பதவியை தான் ஏற்க வேண்டும் என்றால், அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சே ஒருவாரத்தில் விலக வேண்டும் என்று நிபந்தனை விதித்தார்.

இந்த நிபந்தனையை ஏற்க மறுத்த கோத்தபய ராஜபக்சே, சஜித்திற்கு மாற்றாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை புதிய பிரதமராக பதவியேற்க வருமாறு அழைத்து, நேற்றிரவு அவருடன் ஆலோசனை நடத்தினார்.

கடந்த 24 மணிநேரத்திற்கு மேலாக பிரதமர் பதவியில் யார் அமரப் போகிறார்கள் என்று சூடான விவாதம் நடந்து வந்த நேரத்தில், இன்று மாலை இலங்கையின் புதிய பிரதமராக ரணில் நியமனம் செய்யப்படுகிறார் என்று கோத்தபய அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இதனையடுத்து நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ரணில் விக்ரமசிங்கே இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். 225 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் ஒரே ஒரு உறுப்பினரை மட்டும் கொண்ட ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரான ரணில், ஆளும்கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவு மற்றும் எதிர்க்கட்சியில் ஒரு பிரிவினரின் ஒத்துழைப்போடு பிரதமர் பதவியை தக்க வைத்துக் கொள்ள முயற்சிப்பார் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். ஆறாவது முறையாக அந்நாட்டின் பிரதமராகியுள்ளார் ரணில்.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்த பிறகே அமைச்சரவை விரிவாக்கம் குறித்து முடிவெடுக்கப்படும் என்று ரணில் முடிவெடுத்துள்ளதாக இலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், இலங்கையில் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான அரசு ஒரு மாதம் கூட நீடிக்காது என ஜே.வி.பி. கட்சி விமர்சனம் செய்துள்ளது.

பிரதமராக பதவியேற்றுள்ள ரணிலுக்கு முதல் நாளிலேயே எதிர்ப்பு எழுந்துள்ளதால், ரணில் விக்ரமசிங்கே, பிரதமர் பதவியில் நீண்ட காலம் நீடிக்க முடியுமா? ராஜபக்சே சகோதரர்களுக்கு எதிராக கொந்தளிப்பான மனநிலையில் உள்ள பொதுமக்களை சாந்தப்படுத்தி, வீழ்ச்சியை நோக்கி வெகு வேகமாக சென்றுக் கொண்டிருக்கும் இலங்கையை விரைவாக மீட்க முடியுமா என்று பல்வேறு கேள்விகளை அந்நாட்டு ஊடகவியலாளர்கள் எழுப்பி வருகின்றனர்.