Fri. Nov 22nd, 2024

இலங்கையில் மக்களின் தொடர் போராட்டத்தின் எதிரொலியாக பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகிய பிறகும், தலைநகர் கொழும்பு உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் அமைதி திரும்பவில்லை.

ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினர் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்வதற்காக நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என்ற தகவல் வெளியானதையடுத்து, அவரையும், அவரது குடும்பத்தினரையும் குறி வைத்து போராட்டக்காரர்கள் தேடுதல் வேட்டையில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

திருகோணமலையில் உள்ள கப்பற்படை முகாமில் ராஜபக்சேவும் அவரது குடும்பத்தினரும் தஞ்சமடைந்துள்ளனர். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தப்புவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்பதை அறிந்து, அங்கு திரண்டுள்ள போராட்டக்காரர்கள், ராஜபக்சேவை வெளியே வரும்படி வலியுறுத்தி தொடர் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.

இதனிடையே, மகிந்த ராஜபக்சே, கோத்தபய ராஜபக்சே ஆகியோரின் தந்தையான மறைந்த டி.ஏ.ராஜபாக்ஸவின் முழு உருவச்சிலை தங்கல்லயில் உள்ளது. ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றுள்ள சிங்கள மக்கள், ராஜபக்சே சகோதரர்களின் மீதான கோபத்தை தணித்துக் கொள்ளும் விதமாக அவர்களின் தந்தையின் முழு உருவச்சிலையை சேதப்படுத்தி, பீடத்தை உடைத்து சிலையை குப்புற தள்ளி தூள் தூளாக்கியுள்ளனர்.

கொழும்பு, கண்டி என பல நகரங்களில் போராட்டக்காரர்கள் தொடர்ந்து கோத்தபய அரசுக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்து வருவதால், அந்நாட்டில் அமைதி குலைந்து இயல்பு நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நடைபெற்று வரும் வன்முறைச் சம்பவங்களை அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் உன்னிப்பாக கவனித்து வரும் நிலையில், வன்முறைப் போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வர இலங்கை அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.நா.சபை அறிவுரை வழங்கியுள்ளது.

இதனையடுத்து, இலங்கையில் பொதுச் சொத்துக்கோ, தனியார் உடைமைகளுக்கு சேதம் விளைப்பவர்களை உடனடியாக சுட்டுத் தள்ள வேண்டும் என ராணுவம், கப்பற்படை மற்றும் விமானப்படை ஆகிய முப்படைக்கும் அந்நாட்டு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.

இதன் பிறகும் கூட போராட்டக்காரர்கள் அமைதியடையாமல், அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், இலங்கை முழுவதும் பதற்றம் நிலவி வருகிறது.