இலங்கையில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு எதிராக சிங்கள மக்கள் மேற்கொண்டு வரும் தொடர் போராட்டங்கள் ஒரு மாதத்தை கடந்துள்ள நிலையில், போராட்டக்காரர்களின் எதிர்ப்புக்கு அடிபணிந்து பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே நேற்று பதவி விலகினார்.
ஆனால், அதற்கு முன்பாக கண்டி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து தலைநகர் கொழும்புக்கு வரவழைத்த ராஜபக்சே, அவர்கள் மத்தியில் பிரதமர் பதவி விலகல் குறித்து அறிவித்தார். ஆனால், அவரின் பதவி விலகலுக்கு பின்னணியில், இலங்கையில் தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வரும் மக்களை அடி விரட்டவே தன்னுடைய ஆதரவாளர்களை கொழும்புக்கு அழைத்து வந்தார் ராஜபக்சே என எதிர்க்கட்சியினர் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
அதனை நிரூபிக்கும் வகையிலேயே நேற்று கொழும்பு நகரம் ரத்த காடாக மாறியது. ராஜபக்சே சகோதரர்கள் பதவி விலக வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து தரப்பு மக்களையும் தேடி தேடி மகிந்த ஆதரவாளர்கள் தாக்கினர். ஒருகட்டத்தில் ராஜபக்சே ஆதரவாளர்களுக்கு எதிராக ஒன்றுதிரண்ட போராட்டக்காரர்கள், ராஜபக்சே ஆதவராளர்களை விரட்டி விரட்டி வேட்டையாடியதால் கொழும்பு உள்பட நாடு முழுவதும் வன்முறை வெடித்தது. ஆதரவாளர்கள் பயணித்த வாகனங்களை ஜே.சி.பி இயந்திரம் கொண்டு தாக்கியும், ஏரிகளில் கார் உள்ளிட் டவாகனங்களை தூக்கி எறிந்தும் போராட்டக்காரர்கள் தங்கள் ஆவேசத்தை வெளிப்படுத்தியதை அடுத்து கொழும்பு நகரம் முழுவதும் போர்க்களம் போல காட்சியளித்தது.
போராட்டக்காரர்களின் ஆவேசத்திற்கு முன்பாக இலங்கை போலீஸ் மற்றும் ராணுவம் கை கட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசில் இடம் பெற்றுள்ள ஆளும்கட்சி பிரமுகர்களை தேடி தேடி வேட்டையாடினார்கள்.
நாடு முழுவதும் கலவரம் பரவியதை அடுத்து ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது இலங்கை அரசு. ஆனாலும், அதைப் பற்றி துளியும் கவலைப்படாமல் சாலைகளில் வெள்ளம் போல திரண்ட பெண்கள் உள்ளிட்ட போராட்டக்காரர்கள், ஆளும்கட்சி பிரமுகர்களின் வீடுகளையும் குறி வைத்து தாக்கியதுடன், அவர்களின் வீடுகளையும் தீ வைத்து கொளுத்தினார். இதனால், கொழும்பு உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் பத்துக்கும் மேற்பட்ட வீடுகள் விடிய விடிய எரிந்த காட்சியைக் கண்டு உலக நாடுகளே அதிர்ச்சியடைந்துள்ளன.
போராட்டக்காரர்களால் கடுமையாக தாக்கப்பட்டு படுகாயமடைந்த மேயர் தம்புள்ளவை கைத்தாங்கலாக காவல்துறையினர் தூக்கிச் செல்கின்றனர்…..
அமெரிக்கா கண்காணிப்பு…
இலங்கை நிலவரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க பாதுகாப்புத் துறை, இலங்கையில் நடைபெற்று வரும் நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்து வருவதாக தகவல் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் கவனத்தையே இலங்கை பக்கம் திரும்பி பார்க்க வைக்கும் அளவுக்கு இலங்கையில் ஆளும்கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள், எம்பிக்கள், மேயர்கள் என பலரின் வீடுகள் தீயில் எரிந்து சாம்பலாகின.
சனத் நிஷாந்தவின் வீடுகள், திஸ்ஸ குட்டி ஆராச்சி வீடு, குருணாகல மேயர் இல்லம், ஜோன்ஸ்டனின் வீடு மற்றும் அலுவலகம், மொரட்டுவாவின் மேயர் இல்லம், அனுஷா பாஸ்குவல் வீடு, பிரசன்னா ரணதுங்காவின் வீடு, ரமேஷ் பதிரானா வீடு, புனித பண்டாராவின் வீடு, அவென்ரா கார்டன் ஹோட்டல், அருந்திகாவின் வீடு,கனக ஹேரத்தின் வீடு, காமினி லோகுவின் வீடு, ரமேஷ் பதிரானாவின் வீடு காலேவில் உள்ள மேயர் சமன் லாலின் வீடு, லான்சாவின் (2 வீடுகள்), பந்துல குணவர்த்தனவின் வீடு, அலி சப்ரி ரஹீமின் வீடு, விமல் வீரவன்ச வீடு, மஹிபால ஹேரத் வீடு என எரிந்த வீடுகளின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றன.
நாலக பண்டார கோட்டே கொட வீடு தீக்கரை:
மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாலக பண்டார கோட்டே கொட வீடு எரியூட்ட பட்டுள்ளதாக அவரது முகநூல் தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்அவரது தாய் தந்தை இருவரும் வீட்டில் எரிந்து சாம்பலாகி உள்ளதாகவும் அவர் தனது பதிவில் மேலும் தெரிவித்துள்ளார்
கொழும்பு நகரம் முழுவதும் கொழுந்து விட்டு எரிந்து வரும் நிலையிலும் ஆத்திரம் தீராத போராட்டக்காரர்கள் ராஜபசேவின் பெற்றோரின் கல்லறை மீதும் தாக்குதல் நடத்தி, இருவரின் நினைவுத் தூண்களையும் சேதப்படுத்தி அகற்றியுள்ளனர் போராட்டக்காரர்கள்.
விடிய விடிய கொழும்பு வீதிகளில் ஆவேசத்துடன் அலைந்து கொண்டிருந்த போராட்டக்காரர்கள், மகிந்த ராஜபக்சேவின் பிரதமர் இல்லத்தை நோக்கி படையெடுத்தனர். பிரதமருக்குரிய அதிகாரப் பூர்வ இல்லத்தை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள், சர்வாதிகார ஆட்சியை வீழ்த்தி விட்ட வெற்றியை வெளிப்படுத்தும் விதமாக, ராஜபக்சேவின் அதிகாரப்பூர்வ இல்லத்தின் முன்பாக தரையில் அடுப்பை பற்ற வைத்து பால் சோறு சமைத்து ஆரவாரம் செய்தனர். அதேவேளையில் அங்கு திரண்ட நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள், அலரி மாளிகை எனப்படும் பிரதமர் இல்லத்தின் மீது கற்கள் உள்ளிட்டவற்றை எரிந்து தாக்குதல் நடத்த தொடங்கினர். அதை கண்டு அச்சமுற்ற இலங்கை அரசு உடனடியாக ராணுவப் படையை அங்கு அனுப்பி, போராட்டக்காரர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தியது.
அதனையடுத்து, உயிர் தப்பினால் போதும் என்ற நிலையில், ராஜபக்சே பிரதமர் மாளிகையில் இருந்து குடும்பத்தோடு வெளியேறினார். கொழும்பு நகர் முழுவதும் போராட்டக்காரர்கள் ஆத்திரத்தோடு சுற்றி வருவதால், அவர்களிடம் சிக்கினால் உயிர் கூட மிஞ்சாது என்று பயந்து போயிருக்கும் ராஜபக்சே, வெளிநாட்டிற்கு குடும்பத்தோடு தப்பிச் சென்றிருக்க கூடும் என்று இலங்கை தகவல் தெரிவிக்கின்றன. குடும்பத்துடன் ராஜபக்சே வெளிநாடு தப்பிச் செல்ல திட்டம் தீட்டியிருக்கிறார் என்ற தகவல் வெளியானதையடுத்து, ரத்மலான விமான நிலையத்தைச் சுற்றி போராட்டக்காரர்களும் அரண் அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
7 பேர் பலி – 200 க்கும் மேற்பட்டோர் காயம்
கடந்த 24 மணிநேரத்தில் போராட்டக்காரர்கள் + ராஜபக்ச ஆதரவாளர்கள் இடையே மூண்ட வன்முறையில் ஆளும் கட்சி எம்பி உள்பட 7 பேர் பலியாகியுள்ளனர்.. 200 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்…
2009 ஆம் ஆண்டில் முள்ளிவாய்க்காலில் லட்சக்கணக்கான தமிழர்களை ரசாயண குண்டுகளை வீசி கொன்றும், விடுதலைப் புலிகளை ஒட்டுமொத்த அழித்து, உள்நாட்டு போரில் வெற்றிப் பெற்றுவிட்டதாகவும் கொக்கரித்த மகிந்த ராஜபக்சே, இன்றைக்கு உயிருக்கு பயந்து தலைமறைவாகிவிட்டார் என்று கூறும் புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்கள், ராஜபக்சே குடும்பத்தை தெய்வம் நின்று கொல்கிறது என்று சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.