Thu. Mar 28th, 2024

இலங்கை அதிபர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ள எதிர்க்கட்சிகள் ராஜபக்சேவுக்கு ஒரு வாரம் கெடு விதித்துள்ளன.


இலங்கையில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில், அந்நாட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் கடுமையாக உயர்ந்துள்ளதால், ஒரு மாதத்திற்கு மேலாக மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து நடுரோட்டிற்கு வந்து போராடும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோரின் தவறான நிர்வாகத்தின் காரணமாகதான் இலங்கை கடும் நெருக்கடியில் சிக்கியிருப்பதாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் ஆவேமாக முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். மேலும், அதிபரும், பிரதமரும் உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி கொழும்பு உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் சிங்களர்கள், தமிழர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தன்னெழுச்சியாக அனைத்து தரப்பு மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், அவர்களுக்கு ஆதரவாக அனைத்து எதிர்க்கட்சிகளும் களத்தில் நிற்கின்றன. இதனால், இலங்கையில் அரசு நிர்வாகமே முடங்கியுள்ளது.
மக்களின் தொடர் போராட்டங்களால் கடும் நெருக்கடிக்கு அதிபரும், பிரதமரும் உள்ளாகியுள்ள நிலையில், தற்போதைய அரசைக் கலைந்துவிட்டு இடைக்கால அரசு உருவாக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. அந்த கோரிக்கை ஏற்றுக் கொள்வதற்கு கோத்தபய ராஜபக்சே முன்வந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, ராஜபக்சேக்கள் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர எம்பிக்களின் ஆதரவுகளைத் திரட்டி வந்த ஐக்கிய மக்கள் சக்தி கட்சி, அந்த முயற்சியில் வெற்றிப் பெற்றுள்ளது. 120 எம்பிக்கள் ராஜபக்சே அரசுக்கு எதிராக வாக்களிக்க முன்வந்துள்ளனர்.
இதனையடுத்து, அதிபர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே ஒரு வார காலத்திற்குள் பதவி விலக வேண்டும் எனஎதிர்க்கட்சிகள் நிபந்தனை விதித்துள்ள நிலையில், அதிபரின் அதிகாரங்களை ரத்து செய்யும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி மேற்கொண்டுள்ள முயற்சிகளின் காரணமாக ராஜபக்சேக்களின் ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விடும் என்று இலங்கை அரசியல்வாதிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.