Sat. Nov 23rd, 2024

சிங்கப்பூரில் இருந்து உருமாறிய கொரோனோ கிருமி இந்தியாவில் பரவியுள்ளதாகவும், அதனால் குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படும் சூழல் உள்ளதாகவும் கடந்த 17 ஆம் தேதி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார். அவரின் சர்ச்சைக்குரிய கருத்து, இந்தியா சிங்கப்பூர் ஆகிய இருநாடுகளின் நட்புறவை பாதிக்கும் வகையில் இருப்பதாக சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் கருத்து தெரிவித்திருந்தது.

உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்ட இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கர், அரவிந்த் கெஜ்ரிவால் இந்தியாவிற்காக பேசவில்லை. அதனால் அவரின் கருத்தை இந்தியாவின் கருத்தாக எடுத்து கொள்ள வேண்டாம் என்று விளக்கம் அளித்தார். அதேபோல, சிங்கப்பூருக்கான இந்திய தூதர் பி.குமரனும், சிங்கப்பூர் மீது குற்றம் சொல்லும் வகையில் கெஜ்ரிவால் உள்நோக்கத்துடன் பேசவில்லை என்றும் விளக்கம் அளித்தார்.

இதனையடுத்து, இந்தியாவுக்கான சிங்கப்பூர் தூதர் சிமான் வாங், இந்தியா அளித்துள்ள விளக்கம் திருப்தியளிப்பதாகவும் துரதிர்ஷ்டவசமாக கூறப்பட்டுவிட்ட கருத்துப் பற்றி மேலும் விவாதிக்காமல், இரண்டு நாடுகளும் இணைந்து கொரோனோ தொற்றில் இருந்து மக்களை காக்கும் நடவடிக்கைகளில் தொடர்ந்து கவனத்தை செலுத்துவோம் என்று கூறியுள்ளார்.