Sat. Nov 23rd, 2024

தடுப்பூசியே கொரோனோவை வெல்லும் ஆயுதம் என்றும் அதனால், அனைத்துத்தரப்பினரும் தயக்கமின்றி தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தி.மு.கழகத்தின் சார்பில் நிவாரண உதவிகளை வழங்கினார்.

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வார்டு 69-இல் உள்ள திரு.வி.க.நகர் மண்டலம் 6-இல் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு தி.மு.க. சார்பில் தினந்தோறும் உணவு வழங்கும் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்து, அங்குப் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவுகளை வழங்கினார்.

பின்னர், கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், தி.மு.க. சார்பில், ஊரடங்குக் காரணமாகத் தவிக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும் வகையில், அரிசி, எண்ணெய், பருப்பு, உள்ளிட்ட நிவாரணப் பொருட்களையும் சானிடைசர், முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்புப் பொருட்களையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இதேபோல, தமிழகம் முழுவதும் திமுக சார்பில் ஒன்றிணைவோம் வா நிகழ்வு மூலம் விளிம்பு நிலை மக்களுக்கு உணவுப்பொருள்கள் உள்ளிட்ட பல்வேறு உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.