Wed. May 1st, 2024

மதுரையில் கொரோனோ தொற்று வேகமாக பரவி வருவதையடுத்து, தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மருத்துவக் கட்டமைப்புகளை மேம்படுத்துவது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வுக் கொண்டார்.

அதன் பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன். அப்போது அவர் கூறியதாவது:

மதுரையில் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த தடுப்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக மருத்துவச் சிகிச்சை வழங்குவதற்கு தேவையான மருத்துவ கட்டமைப்பு வசதிகள் அமைக்கப்படும்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 1,681 படுக்கைகள் உள்ள நிலையில் 1,176 படுக்கைகள் மட்டுமே ஆக்சிஜன் வசதி கொண்டவையாக உள்ளன. உள்ளூர் மட்டுமின்றி தென் மாவட்டங்களில் நோய் தொற்றால் பாதிக்கப்படுபவர்களும் இங்குதான் வருகிறார்கள்.

அதனால், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அதிக நெருக்கடி ஏற்படுகிறது. இருப்பினும் நோயாளிகளை காக்க வைக்காமல் உடனடியாக உள்நோயாளியாக அனுமதித்து சிகிச்சை வழங்கும் முறை துவங்கப்பட்டுள்ளது.

மருத்துவமனைக்கு நோயாளிகள் வந்தவுடனே அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை வழங்க 150 ஆக்ஸிஜன் படுக்கை வசதிகள் தனியாக உருவாக்கப்பட்டுள்ளன.

சென்னையில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்த ரெம்டெசிவிர் மருந்து விற்பனை தற்போது கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் விற்பனை மையங்கள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் சிரமம் இன்றி பெற்றுச் செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னையை அடுத்து மதுரையில்தான் நோயாளிகள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் கூடுதலாக ரெம்டெசிவிர் மருந்துகள் தேவை என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஒன்றிரண்டு நாட்களில் கூடுதலாக ரெம்டெசிவிர் வழங்குவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. தமிகத்திற்கு 7 ஆயிரம் என்ற அளவில்தான் மத்திய அரசு ரெம்டெசிவிர் மருந்தை வழங்குகிறது. ஆனால், தமிழகத்தின் தேவையோ 20,000 மாக உள்ளது.

தோப்பூர் காசநோய் மருத்துவமனையில் கூடுதல் படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை குறித்து விரைந்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

தோப்பூர் மட்டுமில்லாது எங்கெங்கு காலியிடங்கள் இருக்கிறதோ அங்கெல்லாம் கூடுதலாக 500 ஆக்ஸிஜன் படுக்கை வசதிகள் ஏற்படுத்தி ஒருவாரத்திற்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஆக்சிஜன் இல்லாததால் உயிரிழப்பு என்ற நிலையை மாற்ற தேவைக்கேற்ப ஆக்சிஜன் பெறும் முயற்சி விரைவுப்படுத்தப்பட்டுள்ளது. நேற்றிரவு ரூர்கேலாவில் இருந்து 80 மெட்ரிக் டன் தமிழகத்திற்கு வந்துள்ளது. அதைப்பிரித்து மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. ரூர் கேலாவில் இருந்து தொடர்ந்து ஆக்சிஜன் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முழுஊரடங்கு வெற்றிகரமாக நடக்கிறது. கொரோனோ குறித்த அச்சம் பொதுமக்களுக்கே வந்துவிட்டது. ரெம்டெசிவர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்பனை செய்பவர்கள் மீது

அவர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்தார்.

முன்னதாக, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவது தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில், அமைச்சர் மா.சுப்பிரமணியம் கலந்து கொண்டு, மதுரை நிலவரம் குறித்து விரிவான ஆய்வு நடத்தினார்.

அமைச்சர்கள் பி.மூர்த்தி, பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன், எம்பி. சு.வெங்கடேசன், ஆட்சியர் வேலுமணி, மாநகராட்சி ஆணையாளர் விசாகன் ஆகியோர் மாவட்டத்தில் உள்ள மருத்துவ வசதிகள், தேவையான முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியத்திற்கு விளக்கி கூறினார்கள்.
ஆய்வுக் கூட்டத்தை நிறைவு செய்த பிறகு ராஜாஜி அரசு மருத்வமனைக்கு சென்று அமைச்சர் ஆய்வு செய்தார்.