Tue. May 7th, 2024

கொரோனோவின் 2 வது அலையின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சென்னைப் போன்ற பெருநகரங்களில் மட்டுமின்றி கோவை,சேலம், மதுரை உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் பல்வேறு தரப்பினரின் அவலக்குரல் அதிமாகவே ஒலிக்கத் தொடங்கிவிட்டது.

கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் 108 ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர ஊர்தி ஓட்டுனர்கள் 20 மணிநேரத்திற்கு மேலாக உழைத்து வருகின்றனர். நேரத்திற்கு நேரம் சரியாக சாப்பிட முடியாததாலும், மூன்று, நான்கு மணிநேரம் கூட தூங்குவதற்கு நேரம் ஒதுக்க முடியாததாலும், மிகுந்த மனஉளைச்சலுக்கு உள்ளாகி நடைப்பிணம் போல நடமாடிக் கொண்டிருக்கின்றனர்.

இவர்களைப் போலவே, வீதி வீதியாகச் சென்று காய்ச்சல் அறிகுறி உள்ளதா, கொரோனோ தொற்று உள்ளதா என்பதை கண்டறிவதற்காக பணியமர்த்தப்பட்டுள்ள சுகாதார பணியாளர்களும், சொல்ல முடியாத துயரங்களை அனுபவித்து வருகின்றனர். மாநிலம் முழுவதும் இதே நிலை நிலவி வந்தாலும் மதுரையில் உள்ள சுகாதாரப் பணியாளர்களின் துயரம், வார்த்தைகளில் விவரிக்க முடியாத வகையில் உள்ளது.

திருநகர், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் முன்களப் பணியாளர்களுக்கு நாள்தோறும் 200 பேரை பரிசோதனை செய்ய வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. காலையில் 6 மணிக்கே பணியை தொடங்கும் சுகாதாரப் பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று மக்களை சந்தித்து காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் இருக்கிறதா என ஆய்வு செய்து, அவர்களைப் பற்றிய விவரங்களை பதிவு செய்து வருகிறார்கள்.

காலை நேரத்தில் வீதி வீதியாக அலைவதால், காலை உணவு எடுப்பது தாமதம் ஆவதுடன் பல நேரங்களில் சாப்பிடுவதற்கே நேரமின்றி இலக்கை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறார்கள். பகல் 2 மணியளவில் 150 பேருக்கு பரிசோதனை செய்வதே பெரும் சிரமமாக இருப்பதாக கூறும் சுகாதாரப் பணியாளர்கள், பொதுமக்கள் முழுமையாக ஒத்துழைக்க மறுப்பதால், ஒவ்வொருவராக விளக்கம் சொல்லி பரிசோதனை செய்வதே பெரும் போராட்டமாக இருக்கிறது என்கிறார்கள்.

மதியம் 3 மணியளவில்தான் பொட்டலம் வடிவில் மதிய உணவு கிடைப்பதாகவும், அதையும் ஆற அமர்ந்து சாப்பிட முடியவில்லை என்று கூறும சுகாதாரப் பணியாளர்கள், மீதி 50 நபர்களை தேடிச் சென்று பரிசோதனை செய்வதற்குள் இருள் சூழ்ந்து விடுவதாக கூறுகிறார்கள்.

ஊரடங்கு காலத்தில் தெரு தெருவாக திரிந்து 200 பேரை பரிசோதனை செய்வதென்பது ஒவ்வொரு நாளும் பெரும் போராட்டமாக இருப்பதாக கூறும் அவர்கள், இலக்கை நிறைவு செய்து முடித்தாலும் கூட இரவு நேரத்தில் வீடு திரும்புவதற்கு சரியான வாகன வசதி கிடைப்பதில்லை என்கிறார்கள்.

நாள்தோறும் 200 பேரை பரிசோதனை செய்வது மிகக் கடினமாக இருக்கிறது என்று சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் விளக்கி கூறினாலும், அவர்களின் உயரதிகாரிகள் கொடுக்கும் நெருக்கடிகளில் இருந்து தப்பிக்கவே, தங்களை விரட்டி விரட்டி வேலை வாங்குவதாக விரக்தியுடன் தெரிவிக்கிறார்கள் மதுரையில் பணியாற்றிக் கொண்டிருக்கும் முன்கள பணியாளர்கள்.

கொரோனோ எனும் உயிர்க்கொல்லி நோயின் அச்சுறுத்தலுக்குப் பயப்படாமல் களப் பணியாற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு சரியான நேரத்தில் உணவும், பரிசோதனைகளை முடித்த பிறகு வீடு திரும்ப தேவையான வாகன வசதிகளையும் மதுரை மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்கள் செய்து தர வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக இருக்கிறது.