சட்டப்பேரவையின் 16 வது பேரவைத் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட அப்பாவு, இன்று அவருக்குரிய இருக்கையில் அமர்ந்தார். சட்டப்பேரவையின் மரபுபடி, ஆளும்கட்சியைச் சேர்ந்த அவை முன்னவரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் மற்றும் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும், சட்டப்பேரவை இருக்கை உள்ள இடத்திற்கு அப்பாவுவை அழைத்துச் சென்று அமர வைத்தனர்.
இதேபோல, துணைப் பேரவைத் தலைவர் கு.பிச்சாண்டியும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து, இன்று அவர் பொறுப்பு ஏற்றுக் கொண்டர். தொடர்ந்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பேரவைத் தலைவர், துணை தலைவர் ஆகியோரை வாழ்த்தி, முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பிறகட்சிகளின் தலைவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.
நிறைவாக நன்றி தெரிவித்து உரையாற்றிய பேரவைத் தலைவர் அப்பாவு, ஆளும்கட்சி ஒரு கண் என்றால், எதிர்க்கட்சி ஒரு கண்ணாக பாவித்து, அனைத்து உறுப்பினர்களுக்கும் பேச வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் மக்கள் பிரச்னைகளை அவையில் எழுப்ப அனைத்து உறுப்பினர்களும் முக்கியத்துவம் தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.