தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக வெ.இறையன்பு நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். ஆளுநர் மாளிகையில் இன்று காலை முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்ட மு.க.ஸ்டாலின், தேர்தல் பிரசாத்தின்போது அளித்த நான்கு வாக்குறுதிகளை நிறைவேற்றும் விதமாக, அதற்குரிய கோப்புகளில் முதல் கையெழுத்துப் போட்டார். தொடர்ந்து 5 வது கோரிக்கையான தனியார் மருத்துவமனைகளில் வழங்கப்படும் கொரோனோ சிகிச்சைக்குரிய கட்டணத்தை அரசே ஏற்கும் என்ற புதிய உத்தரவிலும் கையெழுத்திட்டார்.
இந்த 5 விதமான உத்தரவுகளிலும் கையெழுத்திட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், அடுத்தடுத்து, நிர்வாக ரீதியிலான மாற்றங்களுக்கும் அனுமதியளித்தார். அதன்பேரில், முதலமைச்சரின் செயலகத்தில் பணியாற்றும் 4 ஐஏஎஸ் அதிகாரிகளின் நியமனத்திற்கு உடனடியாக உத்தரவிட்டார். முதன்மைச் செயலாளர் உதயசந்திரன் உள்பட 4 அதிகாரிகளின் நியமனத்திற்கான பணிகளை நிறைவேற்றியதுடன், நண்பகலில் தலைமைச் செயலாளர் ராஜிவ் ரஞ்சன் விடுவிக்கப்பட்டார்.
ஏற்கெனவே எடுத்த முடிவின் தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக வெ.இறையன்பு ஐஏஎஸ் நியமனம் நடைமுறைக்கு வந்தது.முதல்வராக பதவியேற்பதற்கு முன்பாகவே, தலைமைச் செயலாளராக வெ.இறையன்பு ஐஏஎஸ் நியமனம் செய்வது தொடர்பாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அதனைத்தொடர்ந்து, முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற சில மணிநேரங்களில், வெ.இறையன்பு ஐஏஎஸ்., புதிய தலைமைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டதற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கினார்.
உடனடியாக பதவியேற்றுக் கொண்ட தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, பிற்பகலில் மாவட்ட ஆட்சித்தலைவர்களுடனான காணொலி ஆய்வுக் கூட்டத்திற்கான பணிகளை தொடங்கினார். இந்தக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, கொரோனோ தடுப்பு நடவடிக்கைகளில் முனைப்புடன் ஈடுபட வேண்டும் என்றும் தொற்று பாதிப்பு உள்ளானவர்களுக்கு உடனடியாக சிகிச்சை வழங்க அனைத்து ஏற்பாடுகளையும் தடையின்றி செய்ய வேண்டும் என்று அறிவுரை கூறினார்.
முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றால், தமிழக அரசின் தலைமைப் பொறுப்பில் கூடுதல் தலைமைச் செயலாளராக உள்ள வெ.இறையன்பு உடனடியாக நியமிக்கப்படுவார் என்று நல்லரசு தமிழ் செய்திகளில் ஏப்ரல் 14 ஆம் தேதியே குறிப்பிட்டிருந்தோம். அதன்படி தற்போது நியமனம் நடைபெற்று இருக்கிறது. ஊழலற்ற, நேர்மையான ஆட்சி நடைபெறுவதற்கு வெ.இறையன்பு ஐஏஎஸ்.ஸின் பணி முக்கியமானது. எந்த சூழ்நிலையிலும் சமரசம் செய்து கொள்ளாதவர் என்று பெயரெடுத்துள்ள வெ.இறையன்பு ஐஏஎஸ்., தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட மக்களிடமும் பிரபலமானவர்.
இடைவிடாத எழுத்துப் பணியால், மேடைப் பேச்சால், அச்சு மற்றும் காட்சி ஊடகங்களின் நேர்காணல்களில் இயங்கிக் கொண்டிருந்த பன்முகத் திறமை கொண்ட வெ.இறையன்பு, கடந்த 10 ஆண்டுகளாக முக்கியத்துவம் இல்லாத துறைகளில் பணியமர்த்தி, அவரின் திறமையை வீணடித்துவிட்டது அதிமுக அரசு.
கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்து கொண்ட வெ.இறையன்பு ஐஏஎஸ்.ஸை மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதாதான் தனது ஆட்சிக் காலத்தில் புறக்கணித்தார் என்றால், கடந்த 2017 ஆம் ஆண்டில் முதல்வராக பதவியேற்றுக் கொண்ட எடப்பாடி பழனிசாமியும், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றபோதும், அதே மாவட்டத்தைச் சேர்ந்த வெ.இறையன்பு ஐஏஎஸ்.ஸின் சேவையை பயன்படுத்திக் கொள்ளாமல் புறக்கணித்தது, தமிழக அரசுக்கு, தமிழக மக்களுக்கு ஏற்பட்ட இழப்பு.
புதிய தலைமைச் செயலாளராக பதவியேற்றுக் கொண்ட வெ.இறையன்பு ஐஏஎஸ் வழிகாட்டுதலின்பேரில், விரைவில் அனைத்து துறைகளின் அதிகாரிகளும் மாற்றப்பட்டு, அவரின் வேகத்திற்கு ஈடுகொடுத்து பணியாற்றக் கூடிய புதிய அதிகாரிகள் நியமனம் செய்யப்படுவார்கள். அவரின் நேரடி நிர்வாகத்தின் கீழ் அனைத்து துறைகளிலும் ஊழல் சிறிதும் இன்றி செம்மையான நடைபெறும் என்பதை, வரும் காலங்களில் தமிழக மக்கள் உணர்ந்து கொள்வார்கள்.
,