Fri. Nov 22nd, 2024

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தின் முதல் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். தொடர்ந்து, அமைச்சர்களுக்கும் பதவி பிரமாணம் செய்து வைத்தார் தமிழக ஆளுநர்…

முன்னதாக நேற்று அமைச்சரவை பட்டியல் வெளியான போது வெளிப்படுத்தப்பட்ட கருத்துகள் விரிவாக எழுதப்பட்டன. அதன் விவரம் இதோ…

திமுக வரலாற்றிலேயே இல்லாத வகையில், நீண்ட நெடிய போராட்டத்திற்குப் பிறகு தமிழகத்தின் முதல் அமைச்சராக மு.க.ஸ்டாலின் நாளை ( மே 7 )பதவியேற்கிறார். 10 ஆண்டுகளுக்கு மேலாக அவரை முதல் அமைச்சர் பதவியில் அமர்த்தி பார்க்க வேண்டும் என ஆசைப்பட்ட முன்னணி தலைவர்கள், அவரது தலைமையில் பதவியேற்கவுள்ள அமைச்சரவை சகாக்கள் பட்டியலைப் பார்த்து கடும் அதிருப்தியில் உள்ளனர்.

திமுக எம்.எல்.ஏ.க்களிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றவர் மூத்த தலைவர் ஐ. பெரியசாமி. திமுக தலைமை மற்றும் மாவட்ட அளவில் கட்சி நிர்வாகிகளிடையே நிலவும் கோஷ்டிப் பூசலை தீர்த்து வைப்பதற்காக முதல் நபராக அழைக்கப்படுவர் ஐ.பி. என்று திமுக முன்னணி தலைவர்களால் அன்புடன் அழைக்கப்படும் ஐ.பெரியசாமிதான்.

காதும் காதும் வைத்த மாதிரி, கட்சி கோஷ்டிப் பூசல்களை தீர்ப்பதுடன், பொருளாதார ரீதியாக பாதிக்கப்படும் கட்சி முன்னணி நிர்வாகிகளுக்கும் தாராளமாக பண உதவி செய்பவர் என்ற புகழுக்கும் உரியவர் அவர். அவரின் சீனியார்ட்டியை கருத்தில் கொள்ளாமல், அவருக்கு கூட்டுறவுத்துறை வழங்கப்பட்டுள்ளது.

அவர் சார்ந்த திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மற்றொரு எம்.எல்.ஏ.வான சக்கரபாணி, ஐ.பி. அளவுக்கு சீனியர் இல்லை என்றாலும் கூட, முக்கியமானவர் என்ற அடிப்படையில் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருப்பதை வரவேற்கும் திண்டுக்கல் மாவட்ட திமுக நிர்வாகிகள், கூட்டுறவு துறையை விட கூடுதலான செல்வாக்குப் பெற்றது உணவுத்துறை என்பதால், ஐ.பெரியசாமியை திமுக தலைமை திட்டமிட்டு அவமானப்படுத்துகிறதா? என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

இதேபோல, முன்னணி தலைவர்களின் புகழுக்கு இழுக்கு ஏற்படும் வகையில் துறைகள் ஒதுக்கப்பட்டிருப்பது ஒருபுறம் என்றால், அதிமுக.வில் இருந்து திமுக.வில் இணைந்த நிர்வாகிகள் பலருக்கு, அதிக செல்வாக்கு கொண்ட (பவர் ஃபுல்) துறைகள் ஒதுக்கப்பட்டிருப்பதுதான், திமுக முன்னணி நிர்வாகிகளை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

அதிமுக.வில் இருந்து விலகி அண்மையில்தான் திமுக.வில் இணைந்தார் செந்தில்பாலாஜி. அவருக்கு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்த துறையை முந்தைய திமுக ஆட்சியின் போது வைத்திருந்தவர் மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதியின் பேரன்பிற்கு பாத்திரமான முதுபெரும் தலைவர் ஆற்காடு வீரசாமி.

ஐ.பி.க்கு இணையாக திமுக.வில் கொண்டாடப்பட்டு வருபவர் கே.என்.நேரு..அவரின் கட்சி விசுவாசத்திற்கும், திமுக.வின் வளர்ச்சிக்கும் உயிரைக் கொடுத்தவர். நிறைய நிகழ்வுகளை உதாரணமாக காட்டலாம் என்றாலும் தேர்தலுக்கு முன்பாக நடத்திய திருச்சி பிரசார பொதுக்கூட்டம், உலகளவில் புகழ் பெற்றது. கோவை உள்ளிட்ட கொங்கு மண்டல திமுக.வில் பிரச்னை என்றால் ஓடோடி செல்பவர் கே.என்.நேரு. அவருக்கு நகராட்சித்துறை ஒதுக்கப்பட்டது.

கடந்த அதிமுக ஆட்சியிலும் அதற்கு முந்தைய திமுக ஆட்சியிலும் ஊரக வளர்ச்சி மற்றும் நகராட்சித்துறை இணைத்தேதான் வழங்கப்பட்டு வந்திருக்கிறது. ஆனால், தற்போது, அதில் ஒரு துறையை தனியாக பிரித்துவிட்டு (ஊரக வளர்ச்சி) வெறும் நகராட்சித்துறை மட்டுமே கே.என்.நேருவுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அதே மாவட்டத்தைச் சேர்ந்த மகேஷ் அன்பில் பொய்யாமொழிக்கு பள்ளிக்கல்வித்துறை வழங்கப்பட்டுள்ளது. முதல்முறையாக இப்போதுதான் மகேஷ், முதல் முறையாக அமைச்சராக பொறுப்பு ஏற்கிறார்.

இதைவிட கொடுமையாக, முந்தைய திமுக ஆட்சியில் கே.என்.நேரு வசம் இருந்த போக்குவரத்து துறை ராஜகண்ணப்பனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு பசையுள்ள துறைகளை பார்த்து பார்த்து வழங்கப்பட்டுள்ளது. எ.வ.வேலுக்கு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறையும், ராஜகண்ணப்பனுக்கு போக்குவரத்து துறையும், சு. முத்துசாமிக்கு வீட்டு வசதித்துறையும், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரனுக்கு வருவாய் துறையும், எஸ். ரகுபதிக்கு சட்டத்துறையும், அனிதா ஆர் ராதாகிருஷ்ணனுக்கு மீன்வளத்துறையும் மற்றும் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. பி.கே.சேகர் பாபுக்கு இந்து சமய அறநிலையத்துறையும் வழங்கப்பட்டுள்ளது.

பாரம்பரியமாக திமுக குடும்ப பின்னணி கொண்ட செல்வாக்குமிக்க தலைவர்களுக்கு, பைசா பிரயோசனம் இல்லாத துறைகளும், அதிமுக.வில் இருந்து திமுக.வுக்கு வந்த முன்னாள் அமைச்சர்களுக்கு செல்வாக்கு மிக்க துறைகளும் ஒதுக்கப்பட்டிருப்பது, எந்த வகையில் நியாயம் என்று கேள்வி எழுப்புகிறார்கள் திமுக முன்னணி நிர்வாகிகள்.

கோவை மாவட்டமோ, சேலம் மாவட்டமோ, திருநெல்வேலி மாவட்டமோ..இப்படி எந்த மாவட்டத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகிகளாக இருந்தாலும் தங்கள் கோரிக்கை தொடர்பாக திமுக முன்னணி தலைவர்களான ஐ.பெரியசாமி, கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தங்கம் தென்னரசு உள்ளிட்ட அமைச்சர்களை எளிதாக அணுகி காரியங்களை நிறைவேற்றிக் கொள்ள முடியும். அதேபோல, தாங்கள் சார்ந்த ஊர் அல்லது மாவட்டத்திற்கு தேவையான கோரிக்கைகள் குறித்தும் முறையிட்டு தீர்வு காண முடியும்.

ஆனால், திமுக நிர்வாகிகளின் பிரச்னைகளை காது கொடுத்து கேட்டு தீர்வு கண்டு நிறைவேற்றி வைக்கும் முன்னணி நிர்வாகிகளை டம்மியான துறைகளில் அமர வைத்தால், மனதளவில் அவர்கள் சோர்ந்து போவார்கள். அதனால், திமுக.வின் அடிமட்ட தொண்டர்கள்தான் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

மறைந்த திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி உயிரோடு இருந்திருந்தால் இதுபோன்ற ஒரு அமைச்சரவையை அமைக்கவே அவர் சம்மதித்து இருக்கவே மாட்டார். அவர் வழியில் கட்சியை வழிநடத்தும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் முழு சம்மதத்துடன்தான் இந்த அமைச்சரவை பட்டியல் தயாரானதா? என்ற சந்தேகம் எழ அனுமதிக்கலாமா? அமைச்சர்கள் தான் ஆட்சியின் முகம். அதுவும் முதல் முறையாக முதல்வராக பதவியேற்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் எந்த குற்றமும் குறையும் காணாத வகையில்தானே இருக்க வேண்டும்.

தமிழக அரசின் சாதனைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் துறையான செய்தி மக்கள் தொடர்பு துறை அமைச்சராக வெள்ளக்கோவில் சாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் முந்தைய திமுக ஆட்சியில் நெடுஞ்சாலை துறை அமைச்சராக இருந்தபோது செய்தியாளர்களை சந்திப்பதையே தவிர்த்து வந்தார் என்ற வருத்தமும் ஊடகவியலாளர்களுக்கு உண்டு..அவருக்கு செய்தி மக்கள் தொடர்பு துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

இன்றைக்கு ஊடகத்துறை விஸ்வரூபம் எடுத்து இருக்கும் நிலையில், ஊடகவியலாளர்களை அவர் எப்படி சமாளிப்பார் என்று நினைத்தாலே பகீர் என்று இருக்கிறது.

சென்னை முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் ஊடகத்துறையோடு மிகவும் சிநேகமாக இருப்பவர். அவரை கவனத்தில் கொண்டிருக்கலாம்.

அதை தவிர்த்து, அவருக்கு சுகாதாரத்துறை வழங்கப்பட்டுள்ளது. இன்றைக்கு கொரோனோ உச்சக்கட்டத்தில் இருக்கும் போது, மருத்துவத் துறையில் நுண்ணிய அறிவு கொண்ட மருத்துவரை அந்த துறைக்கு நியமித்து இருக்கலாம். மா.சுப்பிரமணியத்தின் அர்ப்பணிப்பை சாதாரணமாக எடை போட்டு விட முடியாது. ஆனால், இன்றைய காலத்தில் சுகாதாரத்துறை என்பது முக்கியமானது அல்லவா என்று கேள்வி எழுப்பும் சென்னை திமுக நிர்வாகி ஒருவர், தற்போது சுகாதாரத்துறை செயலாளராக இருக்கும் டாக்டர் ராதாகிருஷ்ணன், மருத்துவப் பட்டப்படிப்பு படிக்காதவர். கால்நடை மருத்துவம் படித்தவர். அவரையே சில நேரங்களில், அரசு மருத்துவர்கள், சுகாதாரத்துறையில் மருத்துவர்களாக உள்ள உயரதிகாரிகள் கிண்டலடிப்பதாக கேள்விபட்டிருக்கிறோம்.

பத்தாண்டுகளுக்குப் பிறகு திமுக ஆட்சிக்கு வந்திருக்கிறது. தலைவர் மு.க.ஸ்டாலினின் ஒவ்வொரு செயலலையும் அனைத்து தரப்பினரும், குறிப்பாக சமூக ஊடகங்களில் தீயாக வேலைப் பார்ப்பவர்கள் கண்காணித்துக் கொண்டே இருக்கிறார்கள். அமைச்சரவை தயாரிப்பில் இன்னும் கொஞ்சம் கூடுதலாக கவனம் செலுத்தியிருக்கலாம். முதல் கோணல் முற்றிலும் கோணல் போல ஆகிவிடுமோ என்ற பயமே பெரிதாக நிற்கிறது என்று மூச்சு விடாமல் புலம்பிக் கொண்டே இருக்கிறார்கள் திமுக முன்னணி நிர்வாகிகள் பலர்.

சேலம் மாவட்டம் முதலமைச்சர் மாவட்டமாக இருந்தது. அந்த மாவட்டத்தில் அத்தி பூத்தார் போல ஒரே ஒரு எம்.எல்.ஏ., வெற்றிப் பெற்றிருக்கிறார். அவருக்கு அமைச்சர் பதவியே வழங்கப்படவில்லை. சேலம் மாவட்டத்தையே ஒட்டுமொத்தமாக புறக்கணித்திருக்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்…

சாதிப் பிரதிநித்துவமும் முறையாக கடைப்பிடிக்கப் பட்டிருக்கிறது? என்ற சந்தேகமும் எழுவதை தவிர்க்க முடியவில்லை.. திமுக தொடங்கப்பட்ட காலத்தில் முதலியார் கட்சி என்று கூறப்பட்டு வந்த நிலையில் இன்றைக்கு அந்த சமுதாயத்தில் 2 நிர்வாகிகள் அமைச்சர்களாக இருக்கிறார்கள்.. தா. மோ. அன்பரசனுக்கு ஊரக தொழில் வழங்கப்பட்டு இருக்கிறது.. இதற்கு பதிலாக அவர் கடந்த முறை வகித்த தொழிலாளர் நலத்துறையே வழங்கியிருக்கலாம்..

மற்றொரு நிர்வாகியான மதுரை முன்னாள் பேரவைத் தலைவர் பி டி ஆர். ரின் புதல்வர் பி டி ஆர் தியாகராஜனுக்கு தொழில் துறை வழங்கப்பட்டுள்ளது.. மாநில வளர்ச்சிக்கு இரவு பகல் பாராமல் உழைப்பால.. அதில் சந்தேகம் இல்லை.. ஆனால் அவருக்கு வாக்களித்த தொகுதி மக்களுக்கு என்ன நன்மை கிடைத்திடும்? இதேபோல் டெல்டா மாவட்டங்களுக்கும் முக்கியத்துவம் இல்லை..

உண்மையிலேயே மு.க.ஸ்டாலின் அறிவுரையின் பேரில்தான் திமுக அமைச்சரவைப் பட்டியல் தயாரிக்கப்பட்டதா? என்ற கேள்வி எழுவதற்கு இதுபோன்று நிறைய அம்சங்கள் அமைச்சரவைப் பட்டியலில் மறைந்து கிடக்கிறது என்று கொந்தளிக்கிறார்கள் திமுக முன்னணி தலைவர்கள்.