Thu. Apr 25th, 2024

தாரை இளமதி, சிறப்புச் செய்தியாளர் …

மறைந்த முதல்வர் கலைஞர் மு. கருணாநிதியின் அன்பை பெற்றவர், விருப்ப ஓய்வுப் பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம்.. முதன்முதலில் அவரின் ஆட்சித் திறனை மட்டுமல்ல, தமிழ்ப் புலமையையும் கண்டு வியந்ததோடு, அவரின் தமிழ் புலமையை அரசு விழா மேடையிலும் பாராட்டிப் பேசியவர், கலைஞர் மு.கருணாநிதிதான்.

1999 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் இருந்த போது, அப்போதைய முதல்வர் கலைஞர் மு-கருணாநிதி, மகத்தான திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தினார். சாதியுணர்வை மறந்து அனைவரும் தமிழர்கள் என்ற உணர்வோடு வாழும் வகையில், சமத்துவபுரத்தை உருவாக்கி, அதுவும் தமிழனத்திற்கு பகுத்தறிவை ஊட்டி வளர்த்த தந்தை பெரியாரின் பெயரில் அந்த திட்டத்தை தொடங்கினார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சமத்துவபுரம் திறப்பு விழா நடைபெற்றது. அப்போது அந்த மாவட்டத்தின் ஆட்சித்தலைவராக இருந்தவர் இறையன்பு ஐஏஎஸ். மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றியவர் சகாயம். ( அப்போது அவருக்கு ஐ.ஏ.எஸ். அந்தஸ்து வழங்கப்படவில்லை) அந்த மாவட்டத்தின் திட்ட அதிகாரியாக இருந்தவர் மருத்துவர் மணிவாசகம், ஐஏஎஸ். (தற்போதைய பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர்) மூவர் கூட்டணியில் உருவாக்கப்பட்ட அழகான சமத்துவபுரத்தை திறந்து வைத்து விழா பேரூரையாற்றினார் அப்போதைய முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி. அதற்கு முன்பாக நன்றியுரை ஆற்றியவர் சகாயம்.

ஆழ்ந்த பொருள் பதித்த கருத்துகளுடன், இலக்கியங்களை மேற்கோள் காட்டி துல்லிய உச்சரிப்புடன் சகாயம் ஆற்றிய நன்றியுரையை கலைஞர் மு.கருணாநிதி வியந்து பார்த்தார். தனது உரையின் போது, அவரின் தமிழ் உணர்வை, இலக்கிய நயத்தை நினைவுக் கூர்ந்து பாராட்டினார்.

அடுத்து 2006 – 2011 திமுக ஆட்சியில்தான் சகாயத்திற்கு ஐஏஎஸ். அந்தஸ்தும் கிடைத்தது. அதையும் கூட போராடிதான் பெற்றார் அவர். ஐஏஎஸ் பதவி உயர்வு உரிய காலத்தில் வழங்கப்படவில்லை, காலதாமதமாகத்தான் வழங்கப்படுகிறது என்ற தனது மனக்குமறலை ஒரு நீண்ட கடிதமாக எழுதி, அப்போதைய முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியிடம் ஒப்படைத்தார். ஐஏஸ் அந்தஸ்து வழங்கப்பட்டது மட்டுமின்றி, திமுக ஆட்சியில்தான் நாமக்கல் ஆட்சியராகவும் சகாயம் நியமிக்கப்பட்டார்.

அந்த மாவட்டத்தில் சிறப்பான ஆட்சி புரிந்த அவர், முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியிடமும் பாராட்டுகளை பெற்றவர். தொடர்ந்து திமுக ஆட்சியில் பல்வேறு பதவிகளை வகித்து வந்த அவர், அடுத்து வந்த அதிமுக ஆட்சியில், மதுரை ஆட்சியராக நியமிக்கப்பட்டார். அங்கு பணியாற்றிய காலத்தில்தான், அதிமுக அமைச்சர்களின் ஆதரவோடு சட்டவிரோதமாக இயங்கிய கிரானைட் குவாரிகளை கண்டுப்பிடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

அவரின் அதிரடியால் ஆடிப்போன அப்போது அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், பி.ஆர்.பி கிரானைட் உரிமையாளர் பழனிச்சாமியை சட்ட நடவடிக்கைகளில் இருந்து காப்பாற்றும் வகையில் செயல்பட்டு மதுரையில் இருந்து சகாயம் ஐஏஎஸ்.ஸை தூக்கியடித்தார்.

இருப்பினும் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் கிரானைட் குவாரி முறைகேடுகளையும், அதனால் அரசுக்கு ஏற்பட்ட பல்லாயிரம் கோடி ரூபாய் இழப்பையும் அறிக்கையாக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அன்றைக்கு அதிமுக ஆட்சிக்கே சிம்மசொப்பனமாக இருந்தவர் சகாயம் ஐஏஎஸ்.

கடந்த பத்தாண்டுகளிலும் அதிமுக அரசால் பழிவாங்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளில் சகாயம் ஐஏஎஸ் போல் பெருந்துயரை அனுபவித்தவர்கள் ஒருவர் கூட இருக்கமாட்டார்கள். 2011 -16 அதிமுக ஆட்சிக்காலத்தில் கோ ஆப்டெக்ஸ் இயக்குனராக சகாயம் ஐஏஎஸ் பணியாற்றிய போது, நஷ்டத்தில் இயங்கிய அந்த துறையை லாபத்தில் கொண்டு வந்ததுடன், கைத்தறி நெசவாளர்களின் துயரை போக்கி பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணும் வகையில் வேட்டி அணியும் பழக்கத்தை, மாநிலம் முழுவதும் இயக்கமாக முன்னெடுத்தவரும் அவரே.

அப்போது அந்த துறையின் அமைச்சராக இருந்த கோகுல இந்திரா, எழும்பூரில் உள்ள கோ ஆப்டெக்ஸ் தலைமை அலுவலகத்தில் தனக்கு தனியாக ஒரு அறை வேண்டும் என்றும் பல லட்சம் ரூபாய் செலவில் ஆடம்பர கார் ஒன்று வாங்க வேண்டும் என்றும் அதற்காக கோ ஆப்டெக்ஸ் நிதியில் இருந்து பணம் ஒதுக்க வேண்டும் என்றும் சகாயம் ஐஏஎஸ்.ஸை மிரட்ட, அதற்கு அடிபணிய மறுத்துவிட்டார், அவர்.

அந்த கோபத்தில் அவரை அங்கிருந்து பணிமாற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொண்டார் கோகுல இந்திரா. ஐஏஎஸ் அதிகாரி வேலையாற்றுவதற்கு தகுதியே இல்லாத தமிழ்நாடு அறிவியல் நகர துணைத் தலைவர் பதவியில் சகாயம் நியமிக்கப்பட்டார். அங்கு 7 ஆண்டுகள் பணியாற்றிய அவர், தனது திறமைக்கு ஏற்ப ஒரு பணியை ஒதுக்க கேட்டு போராடி பார்த்தும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு செவி சாய்க்காததால், இந்த ஆண்டு தொடக்கத்தில் அரசுப் பணியில் இருந்து விருப்பு ஓய்வு பெற்றுவிட்டார்.

அண்மையில் நடைபெற்ற தேர்தலில் அவர் ஆர்வம் காட்டினாலும், அதிமுக அரசின் ஊழல் குறித்தும் அதிகார துஷ்பிரயோகங்கள் குறித்தும் அளித்த விரிவான, உணர்ச்சி மிகுந்த பேட்டி, வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வைரலாக பரவி திமுக வெற்றிக்கு ஒருவகையில் சாதகமாக அமைந்தது.

இதேகாலகட்டத்தில் உங்கள் தொகுதியில் மு.க.ஸ்டாலின் என்று தேர்தல் பரப்புரையாற்றிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மாநிலம் முழுவதும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அந்த மனுக்களின் மீது 100 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும்.அப்படி தீர்வு காணப்படவில்லை என்றால் கோட்டைக்கே வந்து முதல்வரான தன்னிடம் கேள்வி கேட்கலாம் என்றும் உறுதியளித்தார்.

இப்படி அவர் நடத்திய உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்வு மூலம் பல லட்சம் கோரிக்கை மனுக்கள் கிடைத்துள்ளன. அந்த மனுக்கள் மீது உரிய முறையில் விசாரணை நடத்தி, 100 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும் என்றால், மக்களின் மனநிலையில் நின்று அர்ப்பணிப்புடன் பணியாற்ற பொறுப்பான ஒரு அதிகாரி வேண்டும்.

தற்போது பதவியில் இருக்கும் அதிகாரிகளை விட, அந்தப் பணிக்கு சகாயம் ஐஏஎஸ். சரியான தேர்வாக இருப்பார் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மருமகனிடம் திமுக ஆதரவு நிலையில் உள்ள ஓய்வுப் பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் சிலர் ஆலோசனை கூறியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியனுக்கு ஆட்சியில் ஒரு பங்களிப்பு வழங்க வேண்டும் என்பதற்காகவே தமிழக அரசின் திட்டக்குழு உறுப்பினராக மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி நியமனம் செய்ததைப் போல, சகாயம் ஐஏஎஸ் ஸையும் 100 நாள் கோரிக்கை மனு மீது தீர்வு காணும் துறைக்கு தலைவராக நியமிக்கலாம் என்று தங்களது எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளனர் அந்த திமுக ஆதரவு அதிகாரிகள்.

முதல் அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றவுடன், இந்த விவகாரம் குறித்து விரிவாக விவாதித்து நல்ல பதிலை கூறுவதாக சபரிசன் உறுதியளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த பத்தாண்டு அதிமுக ஆட்சியில் காயப்படுத்தப்பட்ட சகாயம் ஐஏஎஸ்.ஸுக்கு மன ஆறுதல் வழங்கும் வகையில் மக்களுக்கு சேவையாற்றும் பணி வழங்கப்பட்டால், தமிழக மக்களும் பலனடைவார்கள். திமுக ஆட்சிக்கும் நல்ல பெயர் கிடைக்கும் என்கிறார்கள் சகாயம் ஐஏஎஸ்.ஸின் சமகால ஐஏஎஸ் அதிகாரிகள்…