அதிமுக அமைச்சர்களிலேயே அதிக ஆட்டம் போட்டவர், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. கோவை மாவட்டத்தில் மட்டுமல்ல, மாநிலம் முழுவதும் அதிமுக.முன்னணி நிர்வாகிகளிடம் அதிருப்தியை சம்பாதித்துக் கொண்டவர். அதற்கு ஒரு படி மேலாக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளையும், அமைச்சர் எனும் அதிகாரம் தந்த போதையில் அவமரியாதையாக நடந்தியதால் அதிகார வர்க்கமும் அவருக்கு எதிராக அனலை கக்கிக் கொண்டிருக்கிறது.
அமைச்சரான நாளில் இருந்து கடந்த 7 ஆண்டுகளாக கோவை மாவட்டத்தில் உள்ள ஆயிரக்கணக்கான தொழிலதிபர்களை மிரட்டி, பல ஆயிரம் கோடி ரூபாய் சுருட்டியவர் எஸ்.பி.வேலுமணி. பள்ளி நண்பர்கள் முதல் கல்லூரி நண்பர்கள் வரை அனைவரையும் புரோக்கர்களாக மாற்றி தனது சட்டவிரோத தொழிலுக்கு கச்சிதமாக பயன்படுத்தி வந்த எஸ்.பி.வேலுமணி, ஒட்டுமொத்த கோவை மாவட்டத்தையே சட்டவிரோத கூடராமாக மாற்றி வைத்திருந்தவர்.
மீண்டும் அதிமுகதான் ஆட்சி அமைக்கும் என்ற அதீத நம்பிக்கையில், உள்ளாட்சி மற்றும் நகராட்சித் துறையில் அவர் அடித்த கொள்ளைகளுக்கு அளவே கிடையாது. கிட்டதட்ட ஒரு லட்சம் கோடி அளவுக்கு எஸ்.பி.வேலுமணி கொள்ளையடித்திருப்பார் என்று கூறப்பட்டாலும், அதில் பாதியளவுக்காகவது ஊழல் செய்திருப்பார் என்று சத்தியம் செய்யாத அளவுக்கு ஆவேசமாக கூறுகிறார்கள் அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள்.
எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையில் கொடுக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான ஊழல் புகார்களை விசாரிக்க புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள திமுக உத்தரவு பிறப்பித்தாலே போதும், ஆயுள் முழுவதுக்கும் எஸ்.பி.வேலுமணி சிறைச் சாலையில்தான் இருக்க வேண்டும் என்று பொங்குகிறார்கள், அவரால் பழிவாங்கப்பட்ட உள்ளாட்சித்துறை அதிகாரிகள்.
எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக கைது நடவடிக்கை எடுக்கப்பட்டால், அப்ரூவராக மாற பல உள்ளாட்சித்துறை உயரதிகாரிகள் ஆர்வமாக இருக்கிறார்கள். அதேஅளவுக்கு கோவை மாவட்டத்தில் இருந்து கடந்த 7 ஆண்டுகளில் இடம்மாற்றம் செய்யப்பட்ட காவல்துறை அதிகாரிகளும், எஸ்.பி.வேலுமணியை ரவுண்ட் கட்டுவதற்காகவே, கோவை மாவட்டத்தில் மீண்டும் பணியாற்ற ஒரு வாய்ப்பு கிடைக்குமா என்று நேற்று முதலே தீவிரமாக முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதேஅளவுக்கு கோவை மாவட்டத்தில் தற்போதும் பணியாற்றிக் கொண்டிருக்கும் காவல்துறை அதிகாரிகள், கடந்த பல ஆண்டுகளாக எஸ்..பி.வேலுமணிக்கு எதிராக கொடுத்த புகார்களை எல்லாம் தூசு தட்டி எடுத்து தயாராக வைத்திருக்கின்றனர். அதிலும் குறிப்பாக, புறநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எஸ். செல்வநாகரத்தினம் ஐபிஎஸ் மிகவும் தீவிரமாக இருக்கிறார் என்கிறார்கள் கோவையில் பணியாற்றி வரும் நேர்மையான காவல்துறை அதிகாரிகள்.
தேர்தலுக்கு முன்பாக அரசு எந்திரங்கள் தனக்கு எதிராக திரும்பியதை அறிந்து அதிர்ச்சியில் உறைந்து போன எஸ்.பி.வேலுமணி, தேர்தல் முடிவுகள் வெளியான அன்று கோயம்புத்தூர் உள்பட கொங்கு மண்டலத்தில் அதிமுக அமோக வெற்றிப் பெற்ற போதும், திமுகதான் ஆட்சி அமைக்கப் போகிறது என்பது உறுதியானவுடனே கலங்கிப் போய்விட்டாராம். நேற்று முன்தினம் இரவு வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருந்து வீட்டிற்கு திரும்பிய போதே எஸ்.பி.வேலுமணி மனம் உடைந்து போய் கண்ணீர் விட்டு கதறிவிட்டார் என்கிறார்கள் அவரது விசுவாசிகள்.
நேற்று முழுவதும் வீட்டிலேயே முடங்கிக் கிடந்த எஸ்.பி.வேலுமணி, கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் வெற்றிப் பெற்ற அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் வந்து ஆசி பெறுவதற்கு தயாராக இருந்தபோது, யாரையும் வர வேண்டாம் என்று கூறிவிட்டாராம் எஸ்.பி.வேலுமணி.
தேர்தல் தோல்வி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் தேர்வு ஆகிய விவகாரங்கள் குறித்து விவாதிப்பதற்காக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து அழைப்பு வந்தபோதும்கூட, எஸ்.பி.வேலுமணி வீடடை விட்டு வெளியேறவே இல்லை.. அதிமுக.வில் தொடர்ந்து நீடித்தால் வழக்கு சிக்கல்களில் இருந்து விடுபட முடியாது என்று யோசித்து வருவதாகவும், அதனால் ஜக்கி வாசுதேவ், கோவை தெற்கு எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் மூலம் பாஜக மேலிட தலைவர்களை சந்தித்து, கைது உள்ளிட்ட நடவடிக்கைகளில் இருந்து தன்னை காப்பாற்ற வேண்டும் என முறையிடவும், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரிடம் சரணாகதி அடையவும் தயாராகி வருகிறார். இந்த வார இறுதியில் டெல்லிச் சென்று அங்கேயே தங்கியிருந்து பாஜக மேலிட தலைவர்களை தாஜா செய்யவும் தயாராகி வருகிறார் எஸ்.பி.வேலுமணி என்கிறார்கள் அவரது விசுவாசிகள்.
ஆலமரமே ஆட்டம் கண்டுள்ளதால், அவருக்கு ஏவல் ஆளாக கூக்குரல் கொடுத்து வந்த அவரது சகோதரர் அன்பரசன் உள்ளிட்ட தொண்டரடியார்கள் நூற்றுக்கணக்கானோர் தலைமறைவு வாழ்க்கைக்கு தயாராகி விட்டதாகவும் அழாத குறையாக மனம் நொந்து கூறுகிறார் எஸ்.பி.வேலுமணியின் நிழல் போல சுற்றி வந்த அதிமுக நிர்வாகி ஒருவர்.