மே 2 ஆம் தேதிக்குப் பிறகு திமுக ஆட்சிக்கு வந்துவிடுமோ என்ற பயம், ஜார்ஜ் கோட்டையான தலைமைச் செயலகத்தில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகளை ஆட்டிப் படைப்பதை போல,, சென்னை மாநகராட்சியில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகளையும் வதைத்துக் கொண்டிருப்பதாக, அங்கு பணியாற்றும் நேர்மையான அதிகாரிகள் கிண்டலாக கூறுகிறார்கள்.
என்ன விஷயம் என விசாரித்தோம். உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் கடைசி நேர ருத்ர தாண்டவத்தை விலாவாரியாக எடுத்துரைத்தார். கடந்த 7 ஆண்டுகளாக, சென்னை மாநகராட்சி மூலம் நிறைவேற்றப்பட்ட திட்டங்களில், எந்தெந்த திட்டங்களில் ஊழல் நடைபெற்றுள்ளதாக கூறி அறப்போர் இயக்கம் உள்ளிட்ட அமைப்புகள் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையிடம் வழங்கியுள்ள புகார்கள் குறித்து, துறை ரீதியான விசாரணை மேற்கொண்டதாக கூறி, பைல்களை முடிக்கச் சொல்லி, ஐஏஎஸ் அதிகாரிகளை கடந்த சில நாட்களாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மிரட்டி வருகிறார்.
அவரின் மிரட்டலுக்குப் பயந்து போய் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகள், மே 2 ஆம் தேதி ஆட்சி மாறி திமுக ஆட்சிக்கு வந்துவிட்டால் நம்ம தலைக்கு கத்தி விழுந்து விடும் என நடுங்கிக் கொண்டு இருக்கின்றனர். விடுமுறையில் சென்று விடலாமா என்று அதிகாரிகள் யோசித்துக் கொண்டிருந்தாலும் கொரோனோ தொற்று பரவலால் விடுமுறை கிடைப்பதற்கும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.
அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக அறப்போர் இயக்கம் கொடுத்த ஊழல்களிலேயே முக்கியமானது, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் 2000 கோடி ரூபாய் அளவில் சாலை அமைத்ததில் முறைகேடு நடைபெற்றுள்ளது என்ற புகார்தான். அந்த புகாரில் அமைச்சர், மாநகராட்சி ஆணையருக்கு அடுத்து தலைமை பொறியாளர் நந்தகுமார் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் மீது துறை ரீதியான விசாரணையை விரைந்து முடிக்குமாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ்.ஸை மிரட்டியிருக்கிறார்.
அவரோ, கொரோனோ தொற்றுப் பணிகளை காரணம் காட்டி ஒதுங்கிக் கொள்ள, சென்னை மாநகராட்சிப் பணிகள் துணை ஆணையர் மேகநாத் ரெட்டி ஐஏஎஸ்,, அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் மாட்டிக் கொண்டார். அவர் 2000 கோடி ரூபாய் ஊழல் புகார் தொடர்பான கோப்பை ஆய்வு செய்தபோது, தற்போதைய கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன் ஐஏஎஸ், கடந்தாண்டு செப்டம்பர் மாதத்திற்கு முன்பாக சென்னை மாநகராட்சியில் பணியாற்றிய போது, 2000 கோடி ஊழல் புகாரை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்வதற்காக தனது கீழே பணியாற்றிய காளிமுத்து உள்ளிட்ட அதிகாரிகளை விசாரணை அதிகாரியாக நியமித்திருக்கிறார்.
கடந்த 5 மாதங்களாக கிடப்பில் இருந்த அந்த கோப்பைதான் தூசு தட்டி எடுத்து, 2000 கோடி ரூபாய் ஊழல் புகாரில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் தலைமை பொறியாளர் நந்தகுமார் ஆகியோருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்று எழுதி, அந்த கோப்பையே முடிக்கச் சொல்லி நெருக்கடி கொடுக்கிறார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. அவரின் பேச்சுக்கு மறுபேச்சு பேச முடியாத மேகநாத ரெட்டி ஐஏஎஸ், மாநகராட்சி அதிகாரி காளிமுத்து உள்ளிட்ட விசாரணை அதிகாரிகளுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார்.
மே 2 ஆம் தேதிக்குப் பிறகு திமுக ஆட்சிக்கு வந்துவிட்டால், தங்களது வேலைக்கே ஆபத்து என்று பயப்படும் காளிமுத்து உள்ளிட்ட அதிகாரிகள் தங்களது மேலதிகாரியான மேகநாத ரெட்டி ஐஏஎஸ்.ஸிடம், மே 2 ம் தேதி வரை அவகாசம் கேட்டுள்ளனர்..ஆனால் அவரோ உடனடியாக செய்ய வேண்டும் என்கிறார்..இதனால் சார் நீங்கள் என்ன வேண்டுமானாலும் எழுதிக் கொடுங்கள், நாங்கள் கையெழுத்து மட்டும் போடுகிறோம் என்று பிடி கொடுக்காமல் பேசி வருகிறார்கள்
இந்த நேரத்தில் விசாரணை குழுவில் இடம் பெற்றுள்ள அதிகாரி காளிமுத்து, கொரோனோ தொற்று பாதிப்பால் வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனைக்ககே கோப்பை அனுப்பி காளிமுத்துவிடம் கையெழுத்து வாங்கி வரும்படி மேகநாத ரெட்டி ஐஏஎஸ்.ஸுக்கு நெருக்கடி கொடுக்கிறாராம் நந்தகுமார்.
விசாரணை அதிகாரிகளை எப்படியாவது மிரட்டி கையெழுத்து வாங்கிவிடுங்கள் என்று தலைமை பொறியாளரான நந்தகுமார், ஐஏஎஸ் அதிகாரியான மேகநாத ரெட்டியையே மிரட்டி வரும் செய்தி மாநகராட்சி முழுவதும் தீயாக பரவிக் கிடக்கிறது. மேலும் தான் சொல்கிறபடி செய்யாமல் ஐஏஎஸ் அதிகாரி தயக்கம் காட்டினால், அதை அடுத்த நொடியே அமைச்சர் வேலுமணியிடம் போட்டு கொடுத்துவிடுகிறார் நந்தகுமார்.
மே 2 ஆம் தேதிக்குப் பிறகும் அதிமுக தான் ஆட்சியில் இருக்கும். திமுக எல்லாம் ஆட்சிக்கு வராது. அப்படியே திமுக ஆட்சிக்கு வந்தாலும் அந்த கட்சியின் தலைவர்களை எப்படி சரிகட்ட வேண்டும் என்ற வித்தையெல்லாம் எனக்கு அத்துபடி என்று கூறி மேகநாத ரெட்டி ஐஏஎஸ்.ஸையே தங்களது முறைகேட்டிற்கு உடந்தையாக மாற்றும் முயற்சியில் தலைமை பொறியாளர் நந்தகுமார் தீவிரமாக இருக்கிறார் என்றார் அந்த நேர்மையான அதிகாரி.
தலைமை பொறியாளர் நந்தகுமார் அந்தளவுக்கு செல்வாக்கு மிக்கவரா என்று அப்பாவியாக கேட்டோம். நந்தகுமாரின் தங்கையை தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சித் தலைவர் பொன் குமார் திருமணம் செய்துள்ளார். அவர் மூலமாக துறைமுகம் திமுக வேட்பாளர் சேகர்பாபு, பெரம்பூர் தொகுதி திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகருக்கு நந்தகுமார் தேர்தல் நிதியாக பெரும்தொகை கொடுத்துள்ளார். அதனால், திமுக ஆட்சிக்கு வந்தாலும் தனது தலைக்கு ஆபத்து வராது என்ற தைரியத்தில்தான், சென்னை மாநகராட்சி அதிகாரிகளை எல்லாம் மிரட்டிக் கொண்டிருக்கிறார் நந்தகுமார்.
அமைச்சர் எஸ்.பி.வேலுமணியையும் காப்பாற்றுவதற்காக கடந்த ஒருமாதமாக,, அமைச்சரை சிக்கலில் மாட்டிவிட வாய்ப்புள்ள கான்ட்ராக்ட் ஒப்பந்தகளை எல்லாம் தேடியெடுத்து அழிக்கும் பணியில் ஜரூராக இருக்கிறார் நந்தகுமார். அவருடைய கம்ப்யூட்டரில் மட்டுமல்ல, ஆணையர் அலுவலகத்தில் உள்ள கம்ப்யூட்டர் தகவல்களையும் அழிக்கும் பணியில் திருட்டுத்தனமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார் நந்தகுமார்.
அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் ஆதரவு இருப்பதால் நந்தகுமாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சென்னை மாநகராட்சி ஆணையர், நகராட்சிகள் நிர்வாக ஆணையரும் தயங்கிக் கொண்டிருக்கிறார்கள். தேர்தல் முடிவு வெளியாக இன்னும் இரண்டு நாட்கள்தான் இருக்கிறது. அதற்குள் முறைகேடு, ஊழல் தொடர்பான அனைத்து கோப்புகளையும் அழித்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு வேலைப் பார்த்து வருகிறார் நந்தகுமார். அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை கைக்குள் போட்டுக் கொண்டு நந்தகுமார் அடித்துள்ள கொள்ளை குறித்து தகுந்த ஆதாரங்களோடு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடமே மே 2 ஆம் தேதிக்குப் பிறக நேரில் கொடுக்க ஒரு கூட்டம் தயாராகதான் இருக்கிறது. மே 2 ஆம் தேதிக்குப் பிறகு சென்னை மாநகராட்சியே நடுநடுங்கும் அளவுக்கு நிறைய சம்பவங்கள் நடக்கும் என்ற பரவலான பேச்சு, சென்னை மாநகராட்சி கட்டட வளாகத்திற்குள்ளாகவே பரவலாக கேட்க முடிகிறது என்றார் அந்த நேர்மையான அதிகாரி.
வல்லவனுக்கு வல்லவனும் ஒருத்தன் இருப்பான் என்பதை தலைமைப் பொறியாளர் நந்தகுமார் மே 2 ஆம் தேதிக்குப் பிறகு உணர்ந்துகொள்வார்…