Sat. Nov 23rd, 2024

மே 2 ஆம் தேதிக்கு இன்னும் 70 மணி நேரம் எஞ்சியிருக்கும் நிலையில், அதிமுக, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எப்படி அமையுமோ என்ற கலக்கத்திலேயே இருந்து வருகின்றனர். திமுக.வில் தலைவர் முதல் தொண்டர்கள் வரை பட்டாசுகளை பல ஆயிரம் ரூபாய் செலவழித்து வாங்கி தயாராக வைத்திருக்கும் நிலையில், அதிமுக.வில் முதல்வர் இ.பி.எஸ். மற்றும் ஒன்றிரண்டு அமைச்சர்களைத் தவிர பெரும்பான்மையான நிர்வாகிகளுக்கு திக்.திக். மனநிலைதான்.

தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த அரசியல் கட்சித் தலைவர்களும் ஒருவிதமான பதற்றத்தோடு தேர்தல் முடிவுகளை எதிர்நோக்கியிருக்க, வடமாவட்ட அதிமுக.வில் தேர்தல் முடிவுகளைப் பின்னுக்கு தள்ளிவிட்டு, வன்னியர் அதிமுக.வில் செல்வாக்குப் படைத்த தலைவர் யார் என்ற ரகசிய கணக்கெடுப்பு துவங்கியுள்ளதுதான், அந்த மாவட்ட அதிமுக நிர்வாகிகளிடம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது என்ற ரகசிய தகவல் கிடைத்தது.

விசாரணையை தொடங்கியபோது, அதிமுக.வில் உள்ள வன்னியர் சமுதாயத்தில் செல்வாக்கு மிக்க தலைவராக உருவெடுக்க முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி மற்றும் தற்போதை அமைச்சர் சி.வி.சண்முகத்தின் விசுவாசிகளும் தனித்தனியாக படைத் திரட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்ற ரகசியத்தை போட்டு உடைத்தார், வடமாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக முக்கிய நிர்வாகி. அதனுள் மறைந்துள்ள சூட்சமத்தையும் அவரே விளக்கினார்.

முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருக்கும் வரை, சாதி பின்புலத்திற்கு எல்லாம் பெரிய மதிப்பில்லை. எந்த சமுதாயமாக இருந்தாலும் செல்வாக்குப் படைத்தவர்களை ஒருநாளில் கிள்ளுக்கீரையாக மாற்றுவார். தெருவோர காகிதத்தை கோபுரத்தின் உச்சியில் வைத்து அங்கீகாரம் கொடுப்பார். அதனால், அரசியலில் மூத்த தலைவர்களாக இருந்தாலும், அவர்களுக்கு சாதி பின்புலம் பெரிதாக தேவைப்படவில்லை.

ஆனால், அவரின் மறைவுக்குப் பிறகு அதிமுக.வில் சாதி பின்புலம் மாபெரும் சக்தியாக உருவெடுத்து நிற்கிறது. கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்கள் அதிமுக தலைமையை கைப்பற்றிய பிறகு, அசைக்க முடியாத சக்தியாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விஸ்வரூபம் எடுத்து நிற்கிறார்.

அவரது வழியிலேயே அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, பி.தங்கமணி ஆகியோரும் இரண்டு, மூன்றாம் இடங்களை எட்டியிருக்கிறார்கள். 3 வது மனிதருக்கு முதல் இடத்தை நோக்கி முன்னேற வேண்டும் என்ற ஆசை உள்மனதில் இருந்தாலும் எடப்பாடியை பின்னுக்கு தள்ள அவரது மனம் தயங்குகிறது. ஆனால், இரண்டாம் இடத்தில் இருப்பவர், அமைதிப்படை சத்யராஜ் மனநிலையோடுதான் இருக்கிறார்.

அதேபோல, மறைந்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் காலத்தில் தேவர் கட்சி அதிமுக என்ற முத்திரை குத்தப்பட்டு இருந்த காலத்தில், அந்த சமுதாயத்தின் முன்னணி தலைவர்களாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்தியலிங்கம் ஆகியோரை மறைந்த முதல்வர் ஜெயலலிதாவே அடையாளம் காட்டியிருந்தார்.

அவரின் மறைவுக்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வத்தின் செல்வாக்கு படிப்படியாக சரிந்துவிட்டது. அதே நிலையில்தான் மற்ற இரண்டு தலைவர்களும் உள்ளனர். மூன்று பேரின் செல்வாக்கும் சரிந்ததால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்ப, அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வெகு வேகமாக காய் நகர்த்தி வருகிறார்.

இப்படி பெரும்பான்மையான இரண்டு சமுதாயத்தினரும் அதிமுக செல்வாக்கை விட சாதி செல்வாக்கை முழுமையாக நம்பியிருப்பதைப் போல, வன்னியர் அதிமுக நிர்வாகிகளும், தங்கள் சமுதாயத்தில் செல்வாக்கை அபரிதமாக பெருக்கி கொள்ள காய் நகர்த்தி வருகின்றனர்.

வன்னியர் சமுதாயத்தில் செல்வாக்கு மிக்க அதிமுக நிர்வாகிகள் என்றால், முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, அமைச்சர்கள் சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன், எம்.சி. சம்பத், கே.சி வீரமணி ஆகியோர்தான், பிரபலமடைந்தவர்கள் பட்டியலில் உள்ளனர்.

அமைச்சர்களாக இருப்பவர்களை விட கே.பி.முனுசாமிக்கு கூடுதலாக வன்னியர் சமுதாயத்தில் ஆதரவுக்கூட்டம் இருக்கிறது. தற்போதைய அமைச்சர்களை விட, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டு, அங்கீகாரமும் கிடைக்கப் பெற்றவர். அவரின் மறைவுக்குப் பிறகு அதிமுக, வி.கே.சசிகலா குடும்பத்தின் கைக்கு சென்று விடக் கூடாது என்று ஆண்மையோடு குரல் கொடுத்த முதல் அதிமுக நிர்வாகி என்ற பெருமைக்கு சொந்தக்காரரும் கே.பி.முனுசாமிதான்.

அந்த வகையில் அவரின் மனவுறுதியைக் கண்டு, பெரும்பான்மையான வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள், கே..பி.முனுசாமியின் வார்த்தைக்கு இன்றைக்கு முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், அவரிடம் உள்ள பெரும்குறையால்தான், அவரை பின்னுக்குத் தள்ளிவிட்டு அமைச்சர் சி.வி.சண்முகம், முதல் இடத்தை நோக்கி முன்னேறுவதைப் போல ஒரு தோற்றம் உருவாகியிருக்கிறது என்றவர், இளைப்பாற தொடங்கினார்.

சில நிமிடங்களுக்குப் பிறகு அவரே மீண்டும் தொடர்ந்தார்.

அதிமுக நிர்வாகிகளை அரவணைத்துக் செல்லும் குணம் கே.பி.முனுசாமிக்கு கிடையாது. எடுத்தேன், கவிழ்த்தேன் என்று பேசுவார். திடீர் திடீரென்று வரும் கோபத்தை பார்த்து அவரது ஆதரவாளர்களே அவருடன் நெருங்கிப் பழக பயப்படுவார்கள். அதற்கு முற்றிலும் மாறுபட்ட குணம் படைத்தவர் சி.வி.சண்முகம். பழைய நிர்வாகிகளைப் பார்த்தவுடனேயே அடையாளம் கண்டு ஆதரவாக பேசுவார். நலம் விசாரிப்பார். தேவையான உதவிகளை தாராளமாக செய்வார்.

அவருக்கு எதிரி யாரென்றால், அவரது அண்ணார் ராதாகிருஷ்ணன்தான். அதற்கு மேலாகவும் சி.வி.சண்முகத்திடம் நிலையான கொள்கை கிடையாது. வி..கே.சசிகலாவை இப்போது எதிர்ப்பதை போல, நாளைக்கும் எதிர்பாரா? நிச்சயம் கிடையாது. அந்த வகையில், கே.பி.முனுசாமியே மீண்டும் முன்னணிக்கு வருகிறார்.

அதிமுக.வில் இப்போது முன்னணியில் இருக்கும் தலைவர்களில் திராவிட சித்தாந்தத்தை முழுமையாக உள்வாங்கியிருப்பவர் கே.பி.முனுசாமி. எவ்வளவு நெருக்கடிகள் எதிர்கொண்டாலும் அதிமுக.வின் கொள்கைகளை விட்டுத் தராதவர். இன்றைய நிலையிலும் பாஜக.வை கடுமையாக எதிர்ப்பவர். பாஜக எதிர்ப்பு நிலை, வி.கே.சசிகலா எதிர்ப்பு நிலை என்ற இரண்டு அம்சத்திலும் உறுதியாக இருப்பவர் பின்னால் அணிவகுப்பதுதான், எதிர்காலத்திற்கு நல்லது என்று கருதி அவரது தலைமையை ஏற்று பின்தொடரலாம் என்ற பிரசாரம் மறைமுகமாக வன்னியர் அதிமுக நிர்வாகிகளிடம் வேகமெடுத்துள்ளது.

அதிமுக.வில் தங்கள் செல்வாக்கை உயர்த்திக் கொள்ள கே.பி.முனுசாமியும், சி.வி.சண்முகமும் தங்களுக்கே உரிய குணாதிசயங்களோடு காய் நகர்த்தி வருவதை வேடிக்கைப் பார்த்து விரக்தியில் இருக்கின்றனர், மற்ற அதிமுக அமைச்சர்கள். கே.பி.அன்பழகனுக்கு உடல்நிலை ஒத்துழைக்கவில்லை. கே.சி.வீரமணிக்கும், எம்.சி.சம்பத்திற்கும் அவரவர் மாவட்டத்தில் உள்ள வன்னிய அதிமுக நிர்வாகிகளே ஜென்ம எதிரிகளாக நிற்கிறார்கள்.

இவர்களுடன் ஒப்பிட முடியாவிட்டாலும் முன்னாள் எம்.பி. அருண்மொழித்தேவன் உள்ளிட்ட சிலரும், வன்னிய அதிமுக.வில் செல்வாக்குப் பெற, ஆதரவாளர்கள் கூட்டத்தைப் பெருக்கிக் கொள்ள எல்லாவிதமான முஸ்தீபுகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால், நல்லதோ, கெட்டதோ, கே.பி.முனுசாமியை வன்னியர் அதிமுக தலைவராக அடையாளப்படுத்துவதற்கும், அங்கீகரிப்பதற்கும் ஒரு கூட்டம் தீயாக வேலை செய்து கொண்டிருக்கிறது. தேர்தல் முடிவுகள் வெளியானவுடன், இந்த விவகாரம் பகிரங்கமாக வெடிக்கும் என்றார் அந்த வடமாவட்ட அதிமுக நிர்வாகி மூச்சு வாங்க…

எல்லாம் சரி..நீங்கள் எந்த அணி என்று கேட்டோம்..பலமாக சிரித்தார். பதில் சொல்லுங்கள் என்றோம்.

அதிமுக ஆட்சியில் இருந்தாலும் சரி, திமுக ஆட்சியில் இருந்தாலும் சரி.. வடமாவட்டங்களைச் சேர்ந்த எந்தக் கட்சி அரசியல்வாதியாக இருந்தாலும், அவர்களுக்கு இரண்டு பேர்தான் எப்போதும் நிரந்தர தலைவர்கள் என்று கூறிவிட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசும் போது, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கண்ணடித்து பார்த்தைப் போல நம்மை பார்த்தார் அந்த அதிமுக நிர்வாகி.

புரியவில்லை என்றோம். வடமாவட்டங்களைச் சேர்ந்த வன்னியர் சமுதாய அரசியல்வாதிகளுக்கு எல்லைக் கடவுள்கள் போல இருப்பவர்கள், திமுக மூத்த தலைவர் துரைமுருகனும், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸும்தான்.

இவருவரிடமும் பொருளாதார ரீதியான உதவி எப்போதும் கிடைக்காது. ஆனால், அரசு வேலை, இடமாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளோடு போனால், வெற்றியோடு திரும்பலாம்.. அதனால், அதிமுக.வில் யார் செல்வாக்குப் படைத்தவர்கள் என்பதை பற்றியெல்லாம் நான் பெரிதாக கவலைப்படுவதே இல்லை என்று கூறி முடித்தார் அந்த வடமாவட்ட வன்னியர் சமுதாய அதிமுக நிர்வாகி.

அரசியலில் இதெல்லாம் சகஜம்ப்பா…