Sat. May 18th, 2024

மே 2 ஆம் தேதி வரை என்னென்ன தகவல்களை பரப்பி விடுவார்களோ., தெரியவில்லை சாமி. அதிமுக அமைச்சரவையில் இடம் பிடிப்பதற்காக, தற்போதைய அமைச்சர்கள், அதிமுக எம்.எல்.ஏ.க்கள், புதியவர்கள் என பெரும் பட்டாளமே சென்னையில் சுற்றிக் கொண்டிருப்பதாக நம்பதகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.

ஒவ்வொரு தகவலும் பகீர் ரகம்தான் என்றாலும் திண்டுக்கல்லில் இருந்து வரும் தகவல்தான் காமெடி ரகமாக உள்ளது. திண்டுக்கல் என்றாலே அதிமுக.வில் இரண்டு பிரபலங்களின் பெயர்களை அனைவருமே உச்சரிப்பார்கள். அந்த வகையில் திண்டுக்கல்லில் போட்டியிடும் தற்போதைய வனத்துறை அமைச்சரும், திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளருமான சீனிவாசன், ஏப்ரல் 6 க்குப் பிறகு உற்சாகமின்றியே காட்சியளிக்கிறாராம். அவரை எதிர்த்து திமுக கூட்டணி ஆதரவோடு களத்தில் நிற்கும் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட்கட்சி வேட்பாளர் என்.பாண்டி முகத்தில் சந்தோஷ ரேகைகள் படர்ந்திருக்கின்றனவாம்.

இயல்பாகவே அதிமுக.வுக்கு சாதகமான தொகுதியாக இருந்தாலும் கூட, பிரதமர் மன்மோகன்சிங் என்று கூறியதாகட்டும், அரசு தரும் உதவித்தொகை எல்லாம் டாஸ்மாக் மூலம் மீண்டும் அரசு கஜானாவுக்கே வந்துவிடும் என்று திருவாய் மலர்ந்ததாகட்டும் திண்டுக்கல் சீனிவாசனுக்கு நல்ல காமெடியன் என்ற பெயரை தொகுதியில் பெற்று தந்துள்ளது.

அவருக்கு திமுக கூட்டணி கடும் நெருக்கடியை உருவாக்கியுள்ளது ஒருபக்கம் என்றால், பத்து ஆண்டு கால அதிமுக ஆட்சிக்கு எதிரான அதிருப்தியும் சேர்ந்து, திண்டுக்கல் சீனிவாசனின் வெற்றியை இந்த நிமிடம் வரை சந்தேக வளையத்திற்குள்ளேயே வைத்திருக்கிறது.

திண்டுக்கல் அதிமுக.வின் மற்றொரு ஜாம்பவானான நத்தம் விஸ்வநாதன், நத்தம் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து திமுக சிட்டிங் எம்.எல்.ஏ. ஆண்டி அம்பலம் மீண்டும் களத்தில் நிற்கிறார். இருவருக்கும் இடையே கடும் போட்டி இருந்தாலும், மயிரிழையிலாவது நத்தம் விஸ்வநாதன் வெற்றிப் பெற்றுவிடுவார் என்கிறார்கள் அவரது விசுவாசிகள்.

கடந்த 2016 தேர்தலில் தோல்வியை தழுவியதால், அமைச்சராகும் வாய்ப்பை இழந்த நத்தம் விஸ்வநாதன், இந்த முறை எப்படியாவது வெற்றிப் பெற்றுவிட வேண்டும் என பணத்தை வாரி இறைத்தாக கூறுகிறார்கள் நத்தம் அதிமுக நிர்வாகிகள்.

திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளராகவும் நத்தம் விஸ்வநாதன் இருப்பதால், அவருக்கு அமைச்சர் பதவி கிடைத்தால், திண்டுக்கல் மாவட்டத்திற்கு பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் கிடைக்கும் என்று ஆசையோடு கூறுகிறார்கள் அவரின் நலம் விரும்பிகள்.

இப்படி இரண்டு ஜாம்பவான்களும் மே 2 ஆம் தேதியன்று என்ன ரிசல்ட் வருமோ என்ற கவலையோடு காத்திருக்க, நமக்கு வெற்றி உறுதி, இரண்டு ஜாம்பவான்களின் வெற்றி கேள்விக்குறியானால், இந்த முறை அமைச்சர் பதவியை எப்படியும் பெற்றுவிட வேண்டும் என்று துள்ளாட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்களாம் நிலக்கோட்டை சிட்டிங் எம்.எல்.ஏ.வான தேன்மொழியின் விசுவாசக் கூட்டம்.

அவர்களின் ஆர்ப்பாட்டத்திற்கு தடை போட்டிருக்கும் எம்.எல்.ஏ.வின் கணவரும் நிலக்கோட்டை அதிமுக நகரச் செயலாளருமான வி.எஸ்.எஸ். சேகர், மே 2 ஆம் தேதி வரை கொஞ்சம் அடக்கி வாசிங்கப்பா.. அதிமுக அறிவித்த முதல் வேட்பாளர் பட்டியலிலேயே முதல்வர், துணை முதல்வர், மூத்த அமைச்சர்களோடு நம்ம எம்.எல்.ஏ., பெயரும் வந்தது.

நம்ம அம்மா மீது தலைவர்கள் எல்லோரும் பாசமா தான் இருக்காங்க.. இரண்டு மாவட்டச் செயலாளர்களும் வெற்றி பெற முடியாத சூழல் உருவானால் கண்டிப்பா நம்ம அம்மாவுக்குதான் மந்திரி பதவி கிடைக்கும். அதுவரை ஆர்ப்பாட்டம் பண்ணாமல் அமைதியாக இருங்க என்று அடக்கி வைத்திருக்கிறாராம் வி.எஸ்.எஸ். சேகர்.

என்னத்த சொல்ல….