தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க கூடாது என்று பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது தொடர்பாக கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில், வணிகர்கள் உள்பட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு, ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்க கூடாது என முழக்கமிட்டனர்.
ஒருகட்டத்தில் ஆட்சியர் இருக்கைக்கு முன்பாக மக்கள் கூடி, முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மக்களின் ஒருமித்த எதிர்ப்பின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது.
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், ஸ்டெர்லைட் ஆலையை இயக்க நிச்சயமாக தமிழக அரசு அனுமதிக்காது என்று தெரிவித்தார்.
முன்னதாக, ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது தொடர்பாக தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கருத்துக் கேட்பு கூட்டத்தில் பங்கேற்பதற்கு, அரசியல் கட்சியினருக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. ஒரு கட்சி சார்பில் ஒருவர் மட்டுமே அனுமதி என்று காவல்துறை விதித்த கட்டுப்பாட்டிற்கு எதிர்ப்பு தெவித்த அரசியல் கட்சியினர், காவல்துறையினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்திலும் ஈடுபட்டனர். அவர்களுடன் காவல்துறையின் சார்பில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை சுற்றி 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். .