Fri. Nov 22nd, 2024

சேலம் அருகே உள்ள திருமலைகிரி ஈஸ்வரன் கோயிலில் ஆயிரம் ஆண்டுக்குப் பிறகு தாழ்த்தப்பட்ட குடும்ப திருமண விழா நடைபெற்றுள்ளதை சமூக ஆர்வலர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

திருமலைகிரியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ சைல கிரீஸ்வரர் மற்றும் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் குடமுழுக்கு விழா தொடர்பாக இரு தரப்பினரிடையே எழுந்த மோதல் காரணமாக சேலம் மாவட்ட ஆட்சியர் 144 தடையுத்தரவு பிறப்பித்திருந்தார். இதனால், வேடுகதாம்பட்டி உட்பட 21 கிராமங்களில் முழு கட்டுப்பாடு கடைபிடிக்கப்பட்டது. கடந்த 2015 மார்ச் மாதம் 2ம் தேதி பிறப்பிக்கப்பட்ட இந்த தடையுத்தரவு 2019 ஆம் ஆண்டு வரை தொடந்து பலமுறை நீட்டிக்கப்பட்டு வந்தது.

இதனிடையே கோவிலை நிர்மானித்தவர்கள் தரப்பில், கோவில் தங்களுக்கு மட்டுமே சொந்தம் என்று அறிவிக்க கோரி சேலம் முதன்மை கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்தில் கடந்த 2015 ஏப்ரல் மாதம் வழக்கு தொடரப்பட்டது. இதற்கு தாழ்த்தப்பட்டோர் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. கடந்த 6 மாதங்களாக நடைபெற்று வந்த விசாரணையில் அண்மையில் தீர்ப்பு வெளியானது.

வழக்கை விசாரித்து வந்த நீதிபதி, பாக்கியம், பொதுமக்களின் வழிபாட்டிற்காக நிர்மானிக்கப்படும் கோயிலை, தனி நபர்கள் யாரும் தங்களுக்கு தான் உரிமை என கொண்டாடுவது என்பது இயற்கை நீதிக்கு புறம்பானது எனக்கூறி, இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும் கோவில் கட்டிய தரப்பினர் கும்பாபிஷேக விழாவை நடத்தி சுவாமி தரிசனம் செய்யலாம் என்றும் அன்று மதியம் தாழ்த்தப்பட்டவர்கள் தங்களது குடும்பத்தினருடன் சென்று ஸ்ரீ சைல கிரீஸ்வரர் மற்றும் ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தலாம் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த தீர்ப்பால் உற்சாகமாக தாழ்த்தப்பட்ட மக்கள், தங்களுக்கு கிடைத்த நீதி என்று மகிழ்ச்சி பொங்க தெரிவித்தனர். மேலும், வழக்கறிஞர்களும் பொதுமக்களும் இனிப்புகளை வழங்கி ஒருவருக்கு ஒருவர் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

இதன் மற்றொரு கொண்டாட்டமாக, இன்று தாழ்த்தப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த இணையர்களுக்கு திருமண விழா விமர்சையாக நடைபெற்றது. ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற இந்த திருமண விழாவில் உள்ளூர் மட்டுமின்றி சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்களும் திரளாக கலந்துகொண்டனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொண்டர் அணி மாநில செயலாளரும் சேலத்தைச் சேர்ந்த பிரபல வழக்கறிஞருமான இமயவரம்பன் முயற்சியால், கோயிலில் வழிபடும் உரிமை கிடைத்தால், அவரது தலைமையில் திருமண விழா நடைபெற்றது.

சேலம் திருமலைகிரி காலனி பகுதியை சேர்ந்த பிரபாகரன் மற்றும் தர்மபுரி மாவட்டம் அரூர் சேர்ந்த கவிப்பிரியா ஆகியோரின் திருமணம், இரண்டு தரப்பு உறவினர்களும் வாழ்த்துகள் சொல்ல, எழுச்சியுடன் நடைபெற்றது.

இமயவரம்பன், துணை செயலாளர் பால்ராஜ், உட்பட கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி அம்பேத்கரின் திருவுருவப்படத்தை பரிசாக வழங்கினர். இதனையடுத்து திருமலைகிரி ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்த மணமக்கள் உட்பட தலித் சமுதாய மக்கள் அனைவரும் திருமலைகிரி காலனியில் உள்ள மாப்பிள்ளை வீட்டிற்கு புறப்பட்டு சென்றனர்.

திருமண விழாவிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொண்டர் அணி மாநில செயலாளரும் வழக்கறிஞருமான இமயவரம்பன், தலைவர் தொல் திருமாவளவனின் வழிகாட்டுதலின் படி பல கட்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு கோவில் வழிபாடு உரிமை தலித் சமுதாய மக்களுக்கு கிடைத்துள்ளது. இந்த கோயிலில் ஏற்படுத்தப்பட்ட தடைபோல, சேலம் மாவட்டத்தில் உள்ள பல கோயில்களில் தலித் சமுதாயத்தினர் செல்ல முடியாத சூழல் இருந்து வருகிறது. அங்கேயும் போராட்டத்தை முன்னெடுத்து, தாழ்த்தப்பட்ட மக்களுக்கான உரிய நீதியை பெற்று தரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். மேலும், தமிழகம் முழுவதும் உள்ள நிலையை மாற்றி அனைத்து தரப்பு மக்களும் அனைத்து கோவில்களுக்கும் சென்று வழிபாடு மேற்கொள்ளும் வகையில் முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.