என்னடா இது, எடப்பாடிக்கு வந்த சோதனை என்று கேட்கும் வகையில்தான் இருக்கிறது சென்னை கோட்டையில் இருந்து கசியும் தகவல்கள்…நான்காம் ஆண்டை கடந்து 5 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள முதல்வர் பழனிசாமியையே கண்காணிக்க தொடங்கிவிட்டது தமிழக உளவுத்துறை என்ற அதிர்ச்சி தகவல்தான், முதலமைச்சருக்கு நெருக்கமான அதிமுக முன்னணி அமைச்சர்களையே ஆட்டம் காண செய்திருக்கிறது.
சூடான தகவல் கிடைத்தவுடன், கொங்கு மண்டலத்தில் உள்ள 3 ஆம் நிலை உளவுத்துறை அதிகாரி ஒருவரிடம் பேசினோம். அவரே அதிர்ச்சியாகி, இதெல்லாம் மேல் மட்ட அளவில் ரொம்ப கான்ஃபிடன்ஷியலான விஷயம். நீங்கள் எப்படி ஸ்மெல் செய்தீர்கள் என்று கேட்டுவிட்டு, ஒன்றிரண்டு தகவல்களை மட்டுமே உதிர்த்தார்.
கடந்த 10 நாட்களாக முதல்வரின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கண்காணிக்க சொல்லி மேலிடத்தில் இருந்து வாய்மொழி உத்தரவு வந்திருக்கிறது. ஏப்ரல் 6 க்கு முன்பு, முதல்வரின் செயல்பாடுகளை மேற்பார்வையிடுவது மாதிரிதான் நடந்து கொள்வோம். ஆனால், இப்போது முதல்வருடான பிறரின் சந்திப்பு, அதன் நோக்கம், முதல்வரின் பயணம் உள்ளிட்டவற்றை குறித்து ரகசிய குறிப்புகளாக மேலிடத்திற்கு அனுப்பி வைக்க சொல்லியிருக்கிறார்கள். அதன்படி, கடந்த பத்துநாளாக அனுப்பி வைத்துக் கொண்டிருக்கிறோம்.
ஏப்ரல் 6 ஆம் தேதிக்குப் பிறகு சேலத்தில் உள்ள தனது இல்லத்தில் தான் பெரும்பான்மையான நாட்கள் முதல்வர் தங்கியிருந்தார். ஒன்றிரண்டு நாட்கள் அவரது சொந்த கிராமமான எடப்பாடி அருகில் உள்ள சிலுவம்பாளையத்திற்குச் சென்றார். சேலம் மற்றும் அவரது கிராமத்தில் முதல்வரை சந்தித்தவர்களின் பட்டியலை அனுப்பி வைத்தோம். அதேபோல, கடந்த வாரத்தில் அந்தியூர் சென்றார். அங்குள்ள அதிமுக ஒன்றிய செயலாளர் வீட்டில் அவரை அதிமுக முன்னணி நிர்வாகிகள் சிலர் சந்தித்தனர்.
அந்தியூர் பயணத்தின் போது, தேர்தலுக்கு வழங்கப்பட்ட பணம் தொடர்பாக, விசாரணை நடைபெற்றதாக தகவல் கிடைத்தது. அதனையும் தலைமைக்கு அனுப்பினோம். இதேபோல, அவரின் ஓமலூர் பயணத்திலும், பணம் சம்பந்தப்பட்ட பஞ்சாயத்தே நடந்துள்ளது.
முதல்வரின் அன்றாட நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனிக்க தொடங்கியுள்ளோம். மீண்டும் முதல்வர் பதவியில் அமர வேண்டும் என்பதற்காக சேலம் மாவட்டத்தில் உள்ள பிரபல கோயில்களில் யாக பூஜையும் நடைபெறுகிறது. முதல்வருடன் எப்போதும் நிழல் போல் இருப்பவர் இந்த யாக பூஜையை மேற்பார்வையிட்டு வருகிறார்.
ஏப்ரல் 26 ஆம் தேதி வரை சேலத்திலேயே தங்கியிருப்பதாகதான் முதல்வரின் நிகழ்ச்சி நிரலில் குறிப்பிட்டிருந்தார்கள். ஆனால், திடீரென்று கடந்த 18 ஆம் தேதி காலை அவர் சென்னை புறப்பட்டார். அன்று தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய நிலையில், ஊரடங்கு தொடர்பான அறிவிப்பு அன்றிரவே வெளியானது. டெல்லியில் இருந்து வந்த அறிவுறுத்தலின்படியே அவர் சென்னை புறப்பட்டுச் சென்றதாகவும் தகவல் இருக்கிறது.
முதல்வரின் பயணத்தையும், அவரின் அன்றாட நடவடிக்கைகளையும் தொடர்ந்து கண்காணித்து அறிக்கை அனுப்ப வேண்டும் என்று தகவல் கூறிய சென்னை உயரதிகாரியின் குரலில் வழக்கத்திற்கு மாறான கடுமை இருந்தது. கடந்த ஒரு வாரத்தில் சென்னை தலைமையிடத்தில் என்ன மாற்றம் நடந்திருக்கிறது என்றே புரியவில்லை. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் நடவடிக்கைகளை கண்காணித்து வந்த உளவுத்துறை அதிகாரிகள், அந்தப் பணியில் இருந்து விடுவிக்கப்படடுள்ளதாகவும் தகவல் சொல்கிறார்கள்.
மே 2 ஆம் தேதி வரை காத்திருக்காமல், இப்போதே திமுக தலைவருக்கு விசுவாசம் காட்ட தொடங்கிவிட்டார்கள் உளவுத்துறையில் உள்ள உயரதிகாரிகள் என்பதை மட்டும் புரிந்து கொள்ள முடிகிறது. தனது நடவடிக்கைகளை உளவுததுறை கண்காணிக்க தொடங்கிவிட்டது என்ற சந்தேகமும் முதல்வருக்கும் வந்துவிட்டது. அதனால், அவரும் மனதளவில் சோர்ந்து போய்தான் இருக்கிறார் என்றார், கொங்கு மண்டல உளவுத்துறை அதிகாரி.
சேலத்தில் உள்ள அதிமுக முன்னணி நிர்வாகி ஒருவரிடம், முதல்வர் பெயரில் யாக பூஜை நடக்கிறதா ? என்று கேட்டோம்.
நண்பரே, அதெல்லாம் பெரிய விஷயமே இல்லை. அம்மா (செல்வி ஜெயலலிதா) உயிரோடு இருந்த காலத்திலேயே (2014) சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று அவர் சிறையில் இருந்தபோது, முதல்வர் பதவியில் தான் அமர வேண்டும் என்று சிறப்பு யாக பூஜை நடத்தியவர் நம்ம முதல்வர். அப்படிபட்டவர், நான்காண்டு காலம் முதல்வர் பதவியை அனுபவித்து சுகம் கண்டுவிட்டார். அதை வேறு யாருக்காவது விட்டுக் கொடுக்க மனம் வருமா என்ன. அதனால், முதல்வரின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், யாக வேள்வி, சிறப்பு பூஜை என தூள் கிளப்பி கொண்டிருக்கிறார்கள் அவரது விசுவாசிகள் என்றார் சிரிப்பு கலந்த குரலில்…
தலை சுத்துதே…