பிறப்பை கூட அறிந்து கொள்ள முடியும். ஆனால், இறப்பு குறித்து யாராலும் அறிந்து கொள்ள முடியாது என்று கூறிக் கொண்டிருந்தோம் கொரோனோ எனும் கொடிய தொற்று அறிமுகம் ஆவதற்கு முன்பு.
கடந்தாண்டு கொரோனோ கொடிய தொற்று அறிமுகமான நாளில் இருந்து, அதன் பாதிப்பால் உயிர் துறந்தவர்களின் துயரம், ஓராண்டு கடந்த பிறகும் உறவுகள், தோழமைகளின் மனதில் ஆறாத வலியை ஏற்படுத்தி இருக்கிறது.
கொரோனோ மரணங்களில் மிகப்பெரிய கொடுமை என்னவென்றால், முன்களப் பணியாளர்களாக உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள், அதே கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் துயரமான காலம்தான்.
கடந்தாண்டு முழுவதும் துயரமான பல நிகழ்வுகளை கேட்டு கேட்டு இதயம் மரத்துப் போனது. அதே துயரத்தை இப்போதும் ஏற்படுத்தும் வகையில்தான், கடந்த ஒருவாரமாக வெளியாகும் தகவல்கள் இதயத்தை ரணமாக்குகின்றன.
மும்பையில், மகாராஷ்டிராவில் டாக்டர் மனிஷா ஜாதவின் பெயரை உச்சரிக்காதவர்கள் ஒருவர் கூட இல்லை என்று சொல்லி விடலாம்.
51 வயதான, சிறப்பு நிபுனத்துவம் பெற்ற மனிஷா ஜாதவ் எண்ணற்ற உயிர்களை காப்பாற்றியவர். கொரோனோ தொற்றால் மரணத்திதன் விளிம்புக்கு சென்றவர்களை கூட காப்பாற்றி, உறவுகளின் கண்களில் ஆனந்த கண்ணீர் பெருக்கெடுக்க கடவுளைப் போல காட்சியளித்தவர்.
முன்களப் பணியாளர்களுக்கு ஏற்படும் ஆபத்தைப் போல, டாக்டர் மணிஷா ஜாதவும், கொரோனோ தொற்றால் தாக்கப்பட்டார். தான் பணிபுரிந்த மருத்துவமனையிலேயே சிகிச்சைப் பெற்றார்.
மிகுந்த மனவுறுதிக் கொண்ட மணிஷா, கொரோனோவை வென்று விரைவாக பணிக்கு திரும்புவார் என்று சக மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் நாள்தோறும் பிரார்த்தனையில் ஈடுபட்டு வந்தனர். ஆனால், தனது உயிரை கொஞ்சம் கொஞ்சமாக கொரோனோ உயிர்க்கொல்லி குடித்துக் கொண்டிருப்பதை உணர்ந்த மணிஷா, கடந்த ஞாயிற்றுக் கிழமை தனது முகநூல் பக்கத்தில், இதுதான் நான் சொல்லும் கடைசி காலை வணக்கமாக இருக்கும். இதே தளததில் மீண்டும் உங்களை சந்திக்க முடியாமல் கூட போகலாம். உடலுக்கு வேண்டுமானால் மரணம் ஏற்படும். ஆத்மாவுக்கு அல்ல என்று மிகுந்த தத்துவார்த்தமாக பதிவு செய்துள்ளார்.
தெளிவான சிந்தனை, நோயை எதிர்கொள்வதற்கான அனைத்து முன்னெச்சரிகை நடவடிக்கைகள், தடுப்பு அம்சங்கள் அனைத்தும் மேற்கொண்டிருந்த போதும், ஞாயிற்றுக் கிழமை காலையில் இருந்து 36 மணிநேரம் கடப்பதற்கு முன்பாகவே மணிஷா, உயிரோடு இல்லை. அவரின் மரணச் செய்தி கேட்டு, அவர் பணிபுரிந்து மருத்துவமனையின் ஊழியர்கள் ஒட்டுமொத்தமாக நிலைகுலைந்து போனார்கள்.
அவரின் மரணத்தை மறக்க முடியாமல், கடந்த இரண்டு நாட்களாக கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கிறார்கள். எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லையே.. உதவி செய்யும் நிலையில் நாங்கள் இல்லையே…இதுபோன துயரமான நிகழ்வு இனிமேல் ஏற்பட்டு விடக்கூடாது என்று உடைந்து போய் கதலோடு பேசும் சக பெண் மருத்துவரின் வார்த்தைகளில் உள்ள பயத்தை விட அவரின் கண்களில் பிரதிபலிக்கும் அச்சம், பார்ப்போரை எல்லாம் பீதியடைய வைக்கிறது.
2 வது அலைக்கு மும்பையில் பலியான முதல் மருத்துவர் டாக்டர் மணிஷா ஜாதவ்…
2 வது அலைக்கு எதிராக மகாராஷ்டிராவில் 18,000 மருத்துவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்…மணிஷா ஜாதவின் மரணம், அவர்களின் நம்பிக்கையை ஆட்டம் காண செய்திருக்கிறது என்கிறார்கள் மகாராஷ்டிரா மருத்துவ துறை வல்லுநர்கள்..