சிறப்புச் செய்தியாளர் …
நல்லரசு தமிழ் செய்திகள் இணையத்தளத்திற்கு நான் வழங்கும் அரசியல் தொடர்பான செய்திகளை ஆழ்ந்த யோசனைக்குப் பிறகே வழங்குகிறேன். ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் என்ற கொள்கையுடையவன்தான் நான். 2011 முதல் 2016 வரை ஜெயா டிவியில் பணிபுரிந்த காலத்தில் அதிமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், ஏன் ஒரு கவுன்சிலரிடம் கூட தேநீர் வாங்கி பருகியது கிடையாது.
யார் வீட்டு வாசலிலும் நின்றதும் கிடையாது. தனிப்பட்ட நட்பில் ஒன்றிரண்டு பேருடன்தான் நான் பழகி வருகிறேன். தற்போதைய ஆட்சிக்கு எதிரான மனநிலையை நான் கொண்டிருப்பதற்கு ஒரே காரணம், 40 சதவிகித கமிஷன்தான்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி வசம் உள்ள துறையில் மிகப்பெரிய ஒப்பந்தத்தை எடுத்துள்ள ஒப்பந்ததாரருடன் எனக்கு தனிப்பட்ட முறையில் சிநேகம் இருக்கிறது. அவர் சொல்வதெல்லாம் ரத்தக் கண்ணீர் வடிக்கும் கதை. நட்பு ரீதியாக பகிர்ந்துகொண்டதை பொதுவெளியில் சொல்வதே கிடையாது.
செய்திக்கு தேவையான தகவல்கள் கிடைத்தவுடன், ஓரிரு நண்பர்களுடன் ஆலோசிப்பது உண்டு. அந்த வகையில், சித்திரைக்கு முன், சித்திரைக்குப் பின் என்ற செய்தியை 19 ஆம் தேதி இரவு 10 மணிக்கு மேல் பதிவு செய்தேன். அதை வாட்ஸ் அப்பிற்கு அனுப்பி வைக்கவும் இல்லை. மறுநாள் (நேற்று காலை) வடமாவட்டத்தில் பணியாற்றி வரும் மூத்த ஊடகவியலாளரிடம் பேசும்போது, அதிமுக ஆட்சிக்கு வரும் என்று ஒரு பேச்சு இருப்பதாக கூறுகிறார்கள் என்று கூறி, சாமியார் வீடியோ ஒன்றை அனுப்பி வைத்தார்.
ஒரு செய்தியை உருவாக்க இவ்வளவு மெனக் கெட வேண்டியிருக்கிறது. அந்த செய்திக்கு நானே சொந்தம் கொண்டாட தயங்கிய வேளையில், வணக்கம் இந்தியாவில், அந்த செய்தி அப்படியே முதல் பக்கத்தில் பிரசுரமாகியுள்ளது.
தலைப்புக்கு வருகிறேன்.. திமுக அமைச்சரவைப் பட்டியல் பற்றி கிட்டதட்ட அனைத்துவிதமான ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகிவிட்டது. நூற்றுக்கணக்காக பரவிய அந்த பட்டியலில் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த திமுக.வினரின் பெயரே இடம் பெறவில்லை என்ற கோபம் அந்த மாவட்டத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகிகளிடம் கனன்று கொண்டிருக்கிறது. நல்லரசு தமிழ் செய்தியிலும் கூட நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த திமுக பிரபலங்களின் பெயர் இடம் பெறவில்லை.
ஊடகங்களில் பெயர் வெளியாகவில்லை என்றாலும், நாமக்கல் மாவட்ட திமுக.வில் யாருக்கு அமைச்சராகும் அதிர்ஷ்டம் இருக்கிறது என்ற பேச்சு பரவலாகவே கேட்க முடிகிறது என்கிறார் நாமக்கல்லில் உள்ள மூத்த ஊடகவியலாளர் நண்பர்.
அவரின் வாக்குமூலத்தின்படி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் திமுக 5 தொகுதிகளில் போட்டியிடுகிறது. திருச்செங்கோட்டில் திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் போட்டியிடுகிறார். நாமக்கல்லில் 24 வருடங்களுக்குப் பிறகு திமுக போட்டியிடுகிறது. 2011 மற்றும் 2016 ல் வெற்றிப் பெற்ற அதிமுக வேட்பாளர் பாஸ்கரை எதிர்த்து திமுக வேட்பாளரும் பிரபல தொழிலதிபரான ராமலிங்கமும் போட்டியிடுகிறார்.
முதல்முறையாக தேர்தல் களம் கண்டிருக்கும் ராமலிங்கத்திற்குதான் திமுக அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்று ஒட்டுமொத்த நாமக்கல் மாவட்ட திமுக.வினரும் குரல் கொடுக்கின்றனர். காரணம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலினின் ஆசி பெற்றவர் ராமலிங்கம் என்கிறார்கள்.
பி.ராமலிங்கத்திற்கு எம்.எல்.ஏ. சீட் கிடைத்ததே பெரிய அதிர்ஷ்டம். அதற்கு மேல் அமைச்சர் பதவியும் கிடைக்கிறது என்றால், நேரம் கூடி வந்தால், கொடுக்கிற தெய்வம் கூரையைப் பியத்துக் கொடுக்கும் என்ற கதைதான் என்கிறார்கள் திமுக நிர்வாகிகள்.
அமைச்சராவதற்கு எல்லா தகுதிகளும் கொண்டவர்தான் பி.ராமலிங்கம் என்கிறார்கள் நாமக்கல் திமுக முன்னணி நிர்வாகிகள். அமைதியானவர், அன்பானவர், அதிர்ந்து பேசாதவர், அரவணைத்துச் செல்லக் கூடியவர் என்றெல்லாம் புகழும் அவர்கள், திமுக.வுக்கான பரம்பரை வியாதியான கோஷ்டி சேர்க்கும் கலையை துளியும் அறியாதவர் அவர் என்கிறார்கள்.
நாமக்கல் தொகுதியை குறி வைத்தவர்கள் இரண்டு பேர். ஒருவர், மு.க.ஸ்டாலினின் நெருங்கிய நட்பு வட்டாரத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த நிர்வாகியுமான செ.காந்திச்செல்வன். மற்றொருவர் தற்போதைய கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், நாமககல் திமுக.வில் இளையவருமான கே.ஆர்.என்.ராஜேஷ்குமார். இவர்கள் இருவரும் (?) நல்ல நண்பர்கள்.
ஒருவருக்கு பதவி இல்லையென்றால் மற்றொருவர் உயிரையே விட்டுக் கூடிய வகையில் பண்பாளர்கள். அதனால், இருவருக்கும் இடையே மோதலை உருவாக்க வேண்டாம் என்ற நல்லெண்ணத்தில், இருவருக்கும் பொதுவான கிழக்கு மாவட்ட திமுக துணைச் செயலாளரான பி. ராமலிங்கத்தை வேட்பாளராக அறிவித்து விட்டது திமுக தலைமை.
பத்தாண்டுகளாக அதிமுக எம்.எல்.ஏ.வாக இருக்கும் கே.பி.பி.பாஸ்கரை, பி.ராமலிங்கம் வீழ்த்தி வெற்றிப் பெற்றால், திமுக அமைச்சர்களில் அவரும் ஒருவராக நிச்சயம் இருப்பார் என்ற பேச்சும்தான் இப்போது ஹைலைட்டாக இருக்கிறது. அப்படி அமைச்சர் பதவி கிடைத்தால், அது நாமக்கல் மாவட்டத்தைப் பொறுத்தவரை வரலாற்று சாதனைதான்.
திமுக அமைச்சரவையில் இதுவரை நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர்கூட இருந்தது இல்லை என்பதுதான் கடந்த கால வரலாறு. நாமக்கல்லின் திமுக முகமாக இருந்தவர்கள் கே.பி.ராமலிங்கம், வி.பி.துரைசாமி. இருவருமே இப்போது திமுக.வில் இல்லை.
நாமக்கல் திமுக வேட்பாளர் பி.ராமலிங்கத்திற்கு அடுத்து சிட்டிங் எம்.எல்.ஏ.வாக இருக்கும் பரமத்தி வேலூர் திமுக வேட்பாளர் கே.எஸ்.மூர்த்தி பெயரும் அடிபடுகிறது. அது சிறுபான்மையினரின் குரலாகவே கேட்கிறது. அமைச்சரவையில் தனக்கும் வாய்ப்பு இருக்கிறது என்று பரவும் தகவலை கேட்டு சந்தோஷப்படும் நிலையில் கூட கே.எஸ்.மூர்த்தி தற்போது இல்லை என்கிறார்கள் அவரது விசுவாசிகள்.
கொரோனோ தொற்றை வென்று விரைவாக அரசியல் களத்திற்கு வர வேண்டும் என்ற துடிப்போடு இருக்கிறார் கே.எஸ். மூர்த்தி என்கிறார்கள் அவரது நலம் விரும்பிகள்….வரும் நாட்களில் திமுக அமைச்சரவைப் பற்றி பட்டியல் போடும் ஊடகவியலாளர்கள், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த யாரவாது ஒருவருக்கு பதவி கொடுங்கப்பா.. நாமக்கல் மாவட்ட திமுக.வினரின் சாபத்தில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்….