கொரோனோ 2 வது அலை மாதிரி, சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து வரும் தற்போதைய தகவல்களும் தலையை கிர்ர்டடிக்குது. ஏப்ரல் 6 ஆம் தேதிக்குப் பிறகு இரண்டொரு நாள் கழித்துதான் ஏப்ரல் 9, 10 ஆம் தேதிகளில்தான் மாவட்டங்களில் உள்ள மக்கள், யாருக்கு வாக்களித்தோம் என்பது குறித்து வெளிப்படையாக பேச தொடங்கினார்கள்.
தேர்தல் முடிந்த கையோடு மனம் திறந்து பேச தொடங்கிய சிறிய அளவிலான வியாபாரம் செய்பவர்கள், பெரிய தொழில் முனைவோர்கள், மாவட்ட அளவிலான அரசு அதிகாரிகள், ஊடகவியலாளர்கள் என அனைத்துத் தரப்பினருமே திமுக தான் ஆட்சிக்கு வரும் என்று ஆருடம் சொன்னார்கள். அப்போது, அவர்களின் குரலில் அழுத்தமும் அதிகமாக இருந்தது.
அடுத்தடுத்த நாட்களிலும் திமுக.வுக்கு ஆதரவாகவே அதிகளவிலான குரல்கள் எதிரொலித்தன. ஆனால், சித்திரரை ஒன்றாம் தேதிக்குப் பிறகு (ஏப்ரல் 14 ) இல்லை, இல்லை திமுக ஆட்சிக்கு வருவதற்கு வாய்ப்பு இல்லை. அதிமுக.தான் மீண்டும் ஆட்சி அமைக்கும். முதல்வராக இ.பி.எஸ்.ஸே மீண்டும் பதவி ஏற்பார்கள் என்று பேச தொடங்கிவிட்டனர். இதற்கு ஆதரவாக பல தரப்பினரும் பேச தொடங்க, கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த மூத்த ஊடகவியலாளர் ஒருவர் அதிர்ச்சி கலந்த குரலுடன் பேசினார்.
எப்படி சார் இது. ஏப்ரல் 10 ம் தேதி வாக்கில் திமுகதான் ஜெயிக்கும் என்று சொன்னார்கள். ஒரு வாரம் கூட ஆகவில்லை. இப்போது அதிமுக.தான் ஆட்சிக்கு வரும் என்கிறார்கள். பொதுமக்களிடையே இந்த பேச்சு பரவலாக இருக்கிறது. செல்லும் இடங்களில் எல்லாம் இதேபோன்ற தகவல்கள் வருவதால், அதிர்ச்சியாக இருக்கிறது.
மே 2 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வந்தால்தான் யார் ஆட்சி அமைப்பார்கள் என்பது உறுதியாகும்.ஆனால், அதற்கு முன்பாக மாறி மாறி பொதுவெளியில் கருத்துப் பரிமாற்றம் எப்படி நடக்கிறது என்று கேட்டார் அந்த ஊடகவியலாளர்.
அதற்கு காரணமாக அவர் சொல்லியவற்றில் முக்கியமான ஒரு தகவல் என்னவென்றால் , மாவட்ட அளவிலான அரசு அதிகாரிகள், அமைதியாகவே இருக்கிறார்கள். அவர்களுக்கு தேர்தல் முடிவுகள் முன்கூட்டியே தெரிந்திருக்கும். இருந்தாலும் கூட மிகவும் மவுனமாக இருக்கிறார்கள். அவர்களின் விருப்பத்திற்கு மாறாக அதிமுக மீண்டும் ஆட்சி அமைந்துவிடும் சூழல்தான் நிலவுகிறதா? திமுக ஆட்சி அமையப் போகிறது என்று அவர்கள் உறுதியாக நம்பினால், அவர்களுடையே பேச்சும், நடவடிக்கைகளும் வித்தியாசமாக இருக்கும். ஆனால், அவர்களும் வாக்களித்த மக்களைப் போலவே, ஆழ்ந்த மௌனம் சாதிக்கிறார்கள்.
அவர்களைப் போலவே, மாவட்ட அளவில் உள்ள அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள்,வேட்பாளர்கள், தொண்டர்கள் ஆகியோரிடமும் உற்சாகம் இல்லை. இரண்டு கழகங்களைச் சேர்ந்த நிர்வாகிகளும், வேட்பாளர்களும் கூட பேயறைந்த மாதிரிதான் காட்சியளிக்கிறார்கள். தாங்கள் வெற்றிப் பெற்றுவிடுவோம் என்ற நம்பிக்கையோடு அவர்கள் பேசவில்லை. அவர்களின் நடவடிக்கைகளும் அந்தளவுக்கு மகிழ்ச்சியை வெளிப்படுத்துவாக இல்லை.
அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று எப்படி சொல்கிறீர்கள் என்று ஒரு சிலரிடம் கேட்டால், சோதிடத்தை முன் வைத்து பேசுகிறார்கள். புதிய வருடப் பிறப்புக்குப் பிறகு அதிமுக.வுக்குதான் கால சூழ்நிலை சாதகமாக இருக்கிறது. திமுக.வுக்கு நட்சத்திரங்களின் ஆதிக்கம் பாதகமாக இருக்கிறது என்று பேசுகிறார்கள்.
அதிமுக தலைமைக்கு ஆதரவான ஊடகவியலாளர்களிடம் கேட்டால் திமுக.தான் ஆட்சி அமைக்கும் என்று உறுதிபட கூறுகிறார்கள். அதேசமயம், திமுக சார்பு ஊடகவியலாளர்களிடம் பேசினால், அதிமுக ஆட்சி அமைப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள். ஆனாலும் கூட்டணி கட்சிகளின் ஆதரவோடுதான் ஆட்சி அமைக்கும். அதிமுக மோசமான தோல்வியை சந்திக்காது என்கிறார்கள்.
ஊர், ஊராக இதே பேச்சாகதான் இருக்கிறது.நாம் அமைதியாக இருந்தாலும் கூட நம்மை தேடி வந்து ஏதாவது ஒரு தகவலைச் சொல்லி குழப்பி விடுகிறார்கள். எப்போது மே 2 ஆம்தேதி வரும் என்று காத்திருக்கிறோம். அரசியல்வாதிகளை விட, தேர்தல் முடிவு பற்றிய குழப்பமான தகவல்களால், நமது மூளைதான் சூடாகிறது என்று சோர்வான குரலில் பேசினார், கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த மூத்த ஊடகவியலாளர் ஒருவர்.
மாவட்டங்களில் மட்டுமல்ல, சென்னை தலைமைச் செயலகத்திலும் அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று உறுதியான குரலில் பேசுபவர்கள் நிறைய பேர் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களில் உயரதிகாரிகளும் அடக்கம் என்பதுதான் அதிர்ச்சியான விஷயமாக இருக்கிறது.
2020 ஆம் ஆண்டு அமோகமாக இருக்கும் என்று சோதிடர்கள் குழுவாக அமர்ந்து பேசிய காமெடிகளை எல்லாம் தமிழகம் கண்டிருக்கிறது. மே 2 ஆம் தேதி முடிவுப் பற்றி இவர்கள் சொல்லும் காமெடி கதைகள் எல்லாம் வாக்குகள் எண்ணப்படும் அன்று வெளிச்சத்திற்கு வந்துவிடப் போகிறது. ஆனால், என்ன கொடுமை என்னவென்றால், அதற்கு இன்னும் 12 நாட்கள் காத்திருக்க வேண்டும் என்பதுதான்….
[…] […]