கொரோனோ தொற்று தொடங்கிய காலத்தில் இருந்து இன்று வரை ஏழை பாழைகள் வயிற்றைக் கட்டி வாயைக் கட்டி ஒவ்வொரு நாளையும் கடத்திக் கொண்டிருக்கிறார்கள். கடந்த 12 மாதங்களுக்கு மேலாக நிரந்தர வருமானம் இன்றி நடுத்தர வர்க்கம் எதிர்காலத்தை நினைத்து ரத்தக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கின்றன.
ஆனால், அரசு துறை ஊழியர்கள், கொரோனோ காலத்திலும் சுகபோகமாக வாழ்ந்தார்கள் என்று விளிம்பு நிலை மக்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்திய நிலையில், கொரோனோவை காரணம் காட்டி அமைச்சர்களும், சுகாதாரத்துறையைச் சேர்ந்த உயரதிகாரிகளும் கோடி கோடியாக ஊழல் செய்தார்கள் என்று பொதுமக்களே வெளிப்படையாக பேசினார்கள்.
அந்தளவுக்கு கொரோனோ தொற்று பரவலை காரணம் காட்டி, மாநில அரசு பணத்தை மட்டுமல்ல, மத்திய அரசு வழங்கிய நிதியிலும் பெருமளவில் ஊழல் நடைபெற்றுள்ளது என்று பீதியை கிளப்புகிறார்கள், சுகாதாரத்துறையில் உள்ள நேர்மையான அதிகாரிகள்.
சளி பரிசோதனைக்காக சீனாவில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட ரேபிட் டெஸ்ட் சாதனத்திலேயே பல கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளது என்று கடந்தாண்டே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டினார். அதில் தற்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கருக்கும் தொடர்பு உள்ளதாகவும் புகார் கூறப்பட்டது.
தேர்தல் நன்னடத்தை அமலில் இருக்கும் இந்த நேரத்தில் அமைச்சர்களையே தூக்கி சாப்பிடும் அளவுக்கு, தேர்தல் வாக்குப்பதிவின் போது பல நூறு கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாக பகீர் குற்றச்சாட்டுகளை கூறுகிறார்கள் சுகாதாரத்துறையில் பணியாற்றும் கீழ்மட்ட ஊழியர்கள்.
வாக்குப்பதிவின் போது வாக்குச்சாவடி மையங்களுக்கு வந்த பொதுமக்களை பரிசோதிப்பதற்காக தெர்மா மீட்டர் வாங்கியதில் இருந்து சானிடைசர், ஒரு கைக்கு போடப்பட்ட பிளாஸ்டிக் கையுறை, கொரோனோ தொற்று உள்ளவர்கள் வாக்களிக்க வந்தபோது, பாதுகாப்பாக இருக்க வாக்குச்சாவடி ஊழியர்கள் பயன்பாட்டிற்காக வாங்கப்பட்ட பாதுகாப்பு உடை உள்ளிட்ட பொருள்களை கொள்முதல் செய்ததில் பல கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளது என்றும், இந்த ஊழலுக்கு முக்கிய மூளையாக இருந்தவர் தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்தின் நிர்வாக இயக்குனர் உமாநாத் ஐஏஎஸ் என்றும் நேரடியாகவே குற்றம் சாட்டுகிறார்கள்.
அதைவிட கொடுமையாக, வாக்குப்பதிவின் போது பொதுமக்கள் ஒருமுறை பயன்படுத்திவிட்டு கழற்றி வீசிய பிளாஸ்டிக் கையுறைகளை சேகரித்து பாதுகாப்பாக எடுத்துச் சென்று அழிப்பதற்காக தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கியதாகவும், ஒரு கிலோ பிளாஸ்டிக் கையுறைகளை அப்புறப்படுத்த 75 ரூபாய் வீதம் அரசு தரப்பில் கட்டணமாக வழங்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாடடுகிறார்கள்.
ஒரு வாக்குப்பதிவு மையத்தில் ஆயிரம் பேர் வாக்களித்திருந்தாலும் கூட அவர்கள் பயன்படுத்திய கையுறைகள் 3 அல்லது 4 கிலோ எடை கொண்டதாகத்தான் இருக்கும். ஆனால், தனியார் நிறுவனம் வழங்கிய பொய்யான தகவலின் அடிப்படையில் ஒரு வாக்குப்பதிவு மையத்தில் 6 கிலோ 7 கிலோ கையுறைகள் பயன்படுத்தப்பட்டதாக கூறி, 7 கிலோவுக்கு தலா 75 ரூபாய் வரை கட்டணம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில், பல கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாகவும் குற்றம் சாட்டுகிறார்கள், அந்த தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள்.
வாக்களித்தவர்களில் பெரும்பான்மையானோர், அந்த கையுறையோடுதான் வாக்குப் பதிவு மையத்தை விட்டு வெளியே சென்றதாகவும், ஒரு கிலோ அளவுக்குக் கூட வாக்குச்சாவடி மையங்களில் பிளாஸ்டிக் கையுறைகளை சேகரித்து அழித்து இருக்க முடியாது என்று வாக்குச்சாவடிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட காவல் துறை அதிகாரி ஒருவர் வேறு ஒரு கோணத்தில் குண்டை தூக்கிப் போடுகிறார்.
பிரபல தனியார் மருத்துவமனைகள் கூட, இதுபோன்ற மருத்துவக் கழிகளை அப்புறப்படுத்துவதற்கு கிலோ ஒன்றுக்கு 50 ரூபாய் வீதம்தான் செலவழிக்கின்றன. ஆனால், அரசு அதிகாரிகள், அதை விட அதிகமாக கட்டணம் கொடுத்து கமிஷன் பார்த்திருக்கிறார்கள் என்றால், அரசியல்வாதிகளான அமைச்சர்களை விட மோசமான அதிகாரிகளைதான் தமிழகம் பெற்று இருக்கிறதா? என்று நொந்து கொள்கிறார் சமூக ஆர்வலர் ஒருவர்.
ஒட்டுமொத்த ஊழல் குற்றச்சாட்டுகளும் உமாநாத் ஐஏஎஸ்.ஸுக்கு எதிராகதான் சொல்லப்படுகிறது. இந்த குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை என்றால் வாக்குப்பதிவின் போது என்னென்ன பொருட்கள் வாங்கப்பட்டன. அதன் விலை என்ன, தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட தொகை எவ்வளவு போன்ற அனைத்து விவரங்களையும் வெள்ளை அறிக்கையாக உமாநாத் ஐஏஎஸ் வெளியிட தயாரா? என்றும் அந்த சமூக ஆர்வலர் கேள்வி எழுப்புகிறார்.
சமூக ஆர்வலர்கள், நேர்மையான சுகாதார துறை அதிகாரிகள் வழங்கிய தகவல்களை அடிப்படையாக வைத்துதான் இந்தக் கட்டுரை வெளியிடப்படுகிறது. இந்த செய்தியில் உண்மையில்லை என்று உமாநாத் ஐஏஎஸ் விளக்கம் அனுப்பி வைத்தால், அதனை பிரசுரிப்பதற்கு தயாராக இருக்கிறோம்.
குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என்பதை நமக்கு நன்கு அறிமுகமான மருந்து தயாரிப்பு நிறுவன அதிகாரிகளிடம் உறுதி செய்த பிறகு, செய்தியில் உண்மையில்லை என்றால் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவும் தயங்காது நல்லரசு தமிழ் செய்திகள்..