சிறப்புச் செய்தியாளர் …
தடுப்பூசி தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடிகர் விவேக் பேசியதும், அவரின் மீது அன்பு காட்டிய மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் திருமதி விவேக் பேசியதும் மனதின் ஆழத்தில் இருந்து வந்த சத்தியமான வார்த்தைகள்.
ஊடகங்களின் முன்பாக நடைபெற்ற இந்த இரண்டு நிகழ்வுகளும், உண்மையின், அறத்தின் வெளிப்பாடாகவே தோன்றுகின்றன. டப்பிங் வசனம் போல இல்லாமல் உண்மையான மனதின் குரலாகவே ஒலித்தது.
தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அக்கறை நடிகர் விவேக்கிற்கு ஏன் வந்தது? திரையுலகில் அவரை விட அபரிதமான மக்கள் செல்வாக்குப் படைத்த உச்சபட்ச நடிகர்கள், நடிகைகள் இருக்கிறார்களே? அவர்களுக்கு இல்லாத அக்கறை நடிகர் விவேக்கிற்கு எதற்கு? உயிர் மேல் பயம் இல்லையா அவருக்கு ? அவருடன் ஆத்மார்த்தமாக பழகியவர்கள் வெளிப்படுத்துகிற வார்த்தைகளில் அப்படி தெரியவில்லையே?
பின்பு எதற்காக அவர் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள முன்வந்தார்? அதுவும் அரசு மருத்துவமனையை தேடி ஏன் வந்தார்? அரசின் அழைப்பை நம்பி வந்தவர் நடிகர் விவேக். அவர் சொன்னால் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு தடுப்பூசி மீது நம்பிக்கை வரும் என்று அரசு அதிகாரிகள் சொல்லிய வார்த்தைகளை நம்பியதுதான் காரணம். தடுப்பூசியை செலுத்திக் கொண்டால் ஆபத்தில்லை என்ற மருத்துவர்களின் வார்த்தையை தெய்வ வாக்காக நம்பினார்.
தடுப்பூசி செலுத்திக் கொண்டால் தனக்கு மரணம் நேரிடலாம் என்று ஒரு நொடி கூட அவர் அச்சம் கொண்டிருக்கவில்லை என்பதை, அவர் அளித்த பேட்டியின் மூலம் உணர முடியும். தடுப்பூசி செலுத்திக் கொண்ட பின்பு அவர் பேசிய ஒவ்வொரு வார்த்தையும், அரசாங்கத்தின் மீதும், அரசு மருத்துவமனையின் மீதும், அரசு மருத்துவர்கள் மீதும் அவர் எவ்வளவு நம்பிக்கை கொண்டிருந்தார் என்பதை வெளிப்படுத்தும் விதமாகவே அமைந்திருந்தன.
சத்தியத்தை பேசுவதாக, அவர் மனதார உணர்ந்ததால்தான், தெளிந்த மனதோடு மக்களுக்கு சொன்ன அறிவுரைகள் அறத்தின் பாற்பட்டதாக உயிர்ப்போடு இருக்கிறது. நல்லது செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள், யாருடனும் கலந்து ஆலோசிக்க மாட்டார்கள். அதனை செயல்படுத்த துணைக்கு ஆள் தேடமாட்டார்கள். நினைத்த மாத்திரத்திலே செயல்படுத்த துணிந்து விடுவார்கள். அவர்களுக்கு உயிர் மேல் பயமும் இருக்காது. ஆழ்ந்த பற்றும் இருக்காது. அப்படிபட்டவர்களால் மற்றவர்களுக்கு தொந்தரவும் இருக்காது. அழிவும் இருக்காது.
சமூகத்தின் மீது பற்றுக் கொள்பவர்கள் முதல்நபராக தங்களை வருத்திக் கொள்பவர்களாகதான் இருப்பார்கள். அப்படிபட்டவர்கள், சுதந்திர காலத்திற்கு முன்பு அதிகமாக இருந்தார்கள். சுதந்திரமடைந்த பிறகு அரிதாக இருக்கிறார்கள். அப்படிபட்டவர்களில் நடிகர் விவேக்கும் ஒருவர்.
சமுதாயத்தில் புரட்சியை உருவாக்க, படையை திரட்டாதவர் நடிகர் விவேக். பொது வாழ்வின் மீதான ஈடுபட்டால், தனது மனதில் இருந்த சோகத்தை எல்லாம் தள்ளி வைத்துவிட்டு, முதல் நபராக அவரே களத்தில் நின்றார். சமுதாய சேவைக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.
உச்ச நடிகர்கள் போல 50 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குபவராகஇல்லாத போதும், அவர்களுக்கு மேலாக பொதுச் சேவையில் ஆர்வம் காட்டியிருக்கிறார் நடிகர் விவேக் . மகனை இழந்த சோகத்தில் துவண்ட போதும் , பெண் குழந்தைகளுக்கு திருமணம் நடத்தி வைக்க வேண்டிய பொறுப்பும் இருக்கிறது என்பதை உணர்ந்தவராகதான் வாழ்ந்திருக்கிறார் நடிகர் விவேக்.
குடும்பத் தலைவனுக்குரிய பொறுப்பையும், கடமையையும் உணர்ந்து செயல்பட்ட போதும், அதை விட பெரிதாக சமுதாய தொண்டை மதித்தவர் நடிகர் விவேக் என்பதற்கான அங்கீகாரமாகதான், ஊரெங்கும் அவர் நட்ட மரத்தின் முன்பு நடைபெற்ற அஞ்சலி கூட்ட நிகழ்வுகள் சாட்சியாக உள்ளன.
தமிழ் மண்ணிற்காக உயிரைக் கொடுப்பேன் என்று வீர வசனம் பேசாதவர் நடிகர் விவேக். தன்னை வளர்த்து ஆளாக்கிய மக்களுக்காக விழிப்புணர்வை ஊட்டியவாறே உயிரைக் கொடுத்திருக்கிறார். அவருக்கு 100 படைத் தளபதிகள் எல்லாம் தேவைப்படவில்லை. 234 தொகுதிகளிலும் போர்ப் பரணி பாடுவேன் என்று கர்ஜிக்க வேண்டிய அழுத்தம் ஏற்படவில்லை.
இப்ப விட்டால் எப்போதும் மாற்றம் வராது என்று பஞ்ச் டைலாக் பேசியவரும் கிடையாது. அவருக்கு தெரிந்தது எல்லாம் ஒன்றுதான். மரம் நட்டால் பூமி தழைக்கும் என்பதும், நல்ல வார்த்தைகளை விதைத்தால் மனித மனங்கள் பூக்கும் என்பதையும் அவர் உணர்ந்திருந்தார். பிறப்பால் வந்த நற்குணம் இது.
இந்த நேரத்தில், மூன்றாண்டுகளுக்கு முன்பு, 2017 டிசம்பர் 31ல் நடிகர் ரஜினிகாந்த் வீராவேசமாக முழங்கியதெல்லாம் நினைவுக்கு வந்து தொலைக்கிறது. .
அரசியல் கெட்டுப் போயிருக்கு. ஜனநாயகம் தலை குனிஞ்சு போயிருக்கு. பணத்திற்காக பதவிக்காக நான் அரசியலுக்கு வரவில்லை. ஆனால் தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக நடக்கும் நிகழ்வுகளை பார்த்து மற்ற மாநிலத்தினர் சிரிக்கிறாங்க. இந்த நேரத்தில் நான் எதுவும் செய்யலைன்னா, நன்றி மறந்தவன் ஆகிவிடுவேன் நான் எல்லாவற்றுக்கும் தயாராயிட்டேன். இனி அம்பு விடுவதுதான் பாக்கி.
ஹைதராபாத்தில் நடிகை நயன்தாராவுடன் டூயட் ஆடிக் கொண்டிருக்கிறது அம்பு…
போர்க்களம் புக வேண்டும் என்றால் உயிருக்கு உத்தரவாதம் கொடுத்தால்தான் செல்வேன் என்று செல்லுபவர் உண்மையான போராளியாக ஒருகாலும் இருக்க முடியாது….
உண்மையான போராளிகளை வரலாறு என்றுமே கொண்டாடிக் கொண்டு இருக்கும்…