Sun. May 19th, 2024

நெஞ்சம் கனக்கிறது !
இந்த உலகம் ஒரு மாபெரும் கலைஞனை இழந்துவிட்டது .
இரண்டு கல்லூரிகளில் விவேக் எனக்கு ஓராண்டு ஜூனியர் .
மதுரை அமெரிக்கன் கல்லூரி மற்றும் கவிதாலயா என்ற மாபெரும் நடிப்பு கல்லூரி .
எங்கள் சந்திப்பு அமெரிக்கன் கல்லுரியில் ஒரு தகராறில் ஆரம்பித்தது .
” டேய் உன்னை நக்கல் பண்ணி ஒரு ஜூனியர் , ஆடிட்டோரியம்லே ட்ராமா போட்டுக்கிட்டு இருக்கானாம் . ஒரே கைதட்டாம் . வா மச்ச்சான் பொய் சாத்தலாம் னு சில பசங்க வந்து என்னை கூப்ட்டானுங்க . “
ஒரு மாசத்துக்கு முன்னால் தான் நான் கல்லுரியில் ஒரு மாபெரும் கராத்தே டெமோ போட்டு அது பெரிய டாக் . அந்த கராத்தே டெமோவை உல்டா பண்ணி , கேலி நாடகம் போட்டு கை தட்டு வாங்கிக்கொண்டிருந்தவனை தேடி நானும் என் நண்பர்களும் கிளம்பினோம் . பெரிய தகராறு நடக்க இருப்பதை உணர்ந்த கல்லூரி பேராசிரியர்கள் வழியில் எங்களை தடுத்து நிறுத்தினர் . நாடகம் பாதியில் நிறுத்தப்பட்டது .
அந்த ஜூனியர் சமாதானம் பேச அழைக்கப்பட்டார் . அங்கிருந்த பேசிரியர்களை தள்ளிவிட்டு அந்த பையன் சட்டையை புடித்தேன் .
என்னை நேராக பார்த்த அந்த பையன் ” சார் என்னை அடிக்கணும்னா அடிங்க . உங்க டெமோ எனக்கு பெரிய இன்ஸ்பிரேஷன். என்னாலே உங்களை மாதிரி ஓடு , செங்கல் உடைக்க முடியாது .. அதனாலே அப்பளம் வைத்து உடைச்சேன் ! அவ்வளவுதான் அண்ணா ! “
சட்டையை விட்டு பலமாக சிரிச்சேன் .
நாடகம் மீண்டும் தொடர்ந்தது …..
நானும் அதை பார்த்து அனைவரோடு பலமான கைதட்டினேன் .
அந்த பையன் தான் சில ஆண்டுக்கு பின்னால் , உலகம் போற்றிய ‘ நடிகர் விவேக் !’
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் விவேக் பெரிய ஹிட் . இவர் காமெடி நாடகம் என்றாலே மாணவர்களும் , ஆசிரியர்களும் மிஸ் பண்ண மாட்டார்கள் . கல்லுரியில் யாரையும் விட்டு வைக்க மாட்டார் . இவர் கதாகாலச்சேபம் ரொம்ப பாப்புலர் . எல்லோரையம் மிமிகிரி , கிண்டல் பண்ணுவார் .
அணைத்து கல்லூரி தமிழ் நாடக போட்டி என்றால் இவரை அனுப்புவார்கள் . ஆங்கில போட்டிகளுக்கு நானும் என் குழுவும் செல்லும் . எப்போதுமே நாங்கள்தான் பரிசுகளை அள்ளி செல்லுவோம் .
இவர் நாடகத்தை நான் மிஸ் பண்ண மாட்டேன் . என் நாடகங்கள் அனைத்துக்கும் விவேக் வருவார் .
மிக நல்ல நண்பர்கள் ஆனோம் . கல்லூரி எதிரே உள்ள ஹோட்டலில் டீ சமோசா சாப்பிட்டு மணிக்கணக்கில் கதைகளை விவாதிப்போம் . சினிமாவில் கே பாலச்சந்தர் மூலமாக மட்டுமே அறிமுகமாக வேண்டும் என்று கூட்டு கனவு காண்போம் .
1987 ல் ‘ புன்னகை மன்னன் ‘ படம் மூலம் பாலச்சந்தர் சார் என்னை அறிமுகப்டுத்தியபோது என்னை பாராட்டிய முதல் நபர் விவேக் தான் .
அதே ஆண்டு எனக்கு அடுத்ததாய் விவேக்கை பாலசந்தர் சார் ‘ மனத்தில் உறுதி வேண்டும் ‘ படம் மூலம் அறிமுகப்படுத்தினார் .
பல ஆண்டுகள் … பல சந்திப்புகள் ….
அவரோடு இணைத்து நான் நடித்த முதல் மற்றும் கடைசி படம் , விஜய் நடித்த ‘பத்ரி !’
விவேக் தமிழ் பட உலகத்தின் ஈடு இணையிலா மாபெரும் நகைசுவை நடிகர் , சமூக போராளி ….. படைப்பாளி .
அவரது மரணம் ….. மாபெரும் இழப்பு .
எனக்கும் …. திரை உலகத்துக்கும் .
ஐந்தாண்டுகளுக்கு முன்னாள் மகன் பிரசன்னாவை இழந்து இப்போது விவேக்கை இழந்து தவிக்கும் சகோதரி ‘ அருள்செல்வி விவேக்குக்கு ‘ ஆழ்ந்த இரங்கல்கள் .
விவேக் பாஸ் …. வில் மிஸ் யூ பாஸ் !

  • ஷிஹான் ஹுசைனி