நடிகர் விவேக் நேற்று காலை தனது வீட்டில் குடும்பத்தினருடன் பேசிக் கொண்டிருந்த போது திடீரென்று மயங்கி விழுந்தார். அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் அவரை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், மாரடைப்பு காரணாக விவேக் மயக்கமடைந்தாக கூறினர். தொடர்ந்து அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை வழங்கப்பட்டது. இதில், ரத்த நாளங்களில் 100 சதவிகித அடைப்பு இருப்பதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து, அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்ட போதும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை தகவல் வெளியிட்டடது. 24 மணிநேரத்திற்குப் பிறகுதான்அவரது உடல்நிலையின் முன்னேற்றம் குறித்து தெரிய வரும் என்றும் தகவல் கூறப்பட்டது. ஆனால், சிகிச்சைப் பலனின்றி இன்று அதிகாலை 4,30 மணியளவில் நடிகர் விவேக் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
அவரின் உடல், திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அதிர்ச்சி விலகாத நிலையில், திரையுலகினர் அவரது வீட்டில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அவருக்கு திடீரென்று ஏற்பட்ட உடல்நலக்குறைவுக்கு, கொரோனோ தடுப்பூசியும் ஒரு காரணமாக அமைந்துவிட்டது என்று அவருக்கு நெருக்கமான நண்பர்கள் சந்தேகத்துடன் பேசினர். நேற்று முன்தினம்தான் நடிகர் விவேக், அரசு பொதுமருத்துவமனையில் தடுப்பூசி செலுத்திக் கொண்டார். தடுப்பூசியின் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று பலர் சந்தேகம் கிளப்ப, அதனை சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் உறுதிபட மறுத்துவிட்டார். இருப்பினும், அவர் மரணமடைந்ததையடுத்து, அந்த வாதம் மீண்டும் தலைதூக்கியுள்ளது. 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து, பொதுமக்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியவர்.
பத்மஸ்ரீ உள்ளிட்ட பல்வேறு புகழ்மிக்க விருதுகளைப் பெற்றவர்.
பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் அனைத்து நடவடிக்கைகளிலும் முதல் நபராக விளங்கியவர் நடிகர் விவேக் என்கிறார்கள் திரையுலக பிரமுகர்கள்…