கடந்த ஒருவாரமாக கோவையில் எங்கு திரும்பினாலும், என்னப்பா… போலீஸ் கமிஷனர் இந்த விரட்டு விரட்டுகிறார் என்ற பேச்சுதான் பரவலாக கேட்கிறதாம்.. கோவை மாவட்டத்தின் அசைக்க முடியாத சக்தியாக கடந்த நான்காண்டுகளாக கொடி கட்டி பறந்த உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் அதிகாரம் எல்லாம் ஏப்ரல் 6 ஆம் தேதிக்குப் பிறகு அப்படியே அடங்கிவிட்டதாம்.
4 ஆண்டு காலம் மூச்சை அடக்கி வாழ்ந்துக் கொண்டிருந்த கோவை மக்கள், ஏப்ரல் 6 ஆம் தேதிக்குப் பிறகுதான் சுதந்திரம் அடைந்ததைப் போல, நிம்மதியாக மூச்சு விடுவதுடன் எவ்வித அச்சமும் இன்றி சுற்றி வருகிறார்கள். அந்தளவுக்கு அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் ராஜாங்கம், இல்லை, இல்லை அராஜகம் கோவையில் உள்ள அனைத்து தரப்பு மக்களையும் வாட்டி வதைத்து வந்திருக்கிறது.
அமைச்சர் பதவியை வைத்துக் கொண்டு கோவை மாவட்டத்தில் எஸ்.பி.வேலுமணி மட்டுமே அதிகார திமிரைக் காட்டவில்லை, அவருடைய சகோதரர், உறவினர்கள் என பெரிய பட்டாளமே தொழிலதிபர்கள், அரசு அதிகாரிகளை மிரட்டி தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருந்ததாம். அமைச்சர், அவரது சகோதரர் மற்றும் உறவுகளை உள்ளடக்கிய கூட்டத்திற்கு அடிவருடிகளாக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கோவை மாவட்டத்தில் கெட்ட ஆட்டம் போட்டு வந்துள்ளனர்.
குறிப்பாக சின்ன சின்ன கான்ட்ராக்ட்டுகளை எடுத்து காசு பார்த்து வந்ததுடன், பல வழிகளில் மாமூல் வசூல் செய்வதிலும் இந்த இரண்டாயிரம் பேரை கட்டி மேய்ந்து வந்துள்ளது, அமைச்சர் கூட்டம். குறிப்பாக டாஸ்மாக் கடை 10 மணிக்கு மூடியவுடன், அமைச்சரின் ஆசிப் பெற்றவர்கள் விடிய விடிய மதுபானங்களை விற்பனை செய்துள்ளனர். டாஸ்மாக் கடையில் மதுபானத்தின் விலை 150 ரூபாய் என்றால், கள்ளச்சந்தையில் 200 முதல் 250 வரை அதிக விலை வைத்து காசு பார்த்து வந்துள்ளனர்.
கோவை மாநகர எல்லைக்குள் இரவு நேரத்தில் கள்ளச்சந்தை விற்பனை கொடி கட்டி பறந்திருக்கிறது. அந்தந்த போலீஸ் ஸ்டேஷன் அதிகாரிகளுக்கு தெரிந்தே இதுபோன்ற அநியாயம் நடந்தபோதும், அவர்களின் கைகள், அமைச்சர் என்ற அதிகாரத்தால் கட்டிப் போடப்பட்டிருக்கிறது. கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் இரவு நேர மதுவிற்பனை மூலம் அமைச்சரின் அடியாட்கள் கூட்டம் 100 கோடிக்கு மேல் சம்பாதித்து இருக்கும் என்கிறார் கோவையில் நமக்கு அறிமுகமான சமூக ஆர்வலர் ஒருவர்.
இதுபோல, அரசுப் பணிகளுக்கு லஞ்சம் பெறும் அரசுத் துறை அதிகாரிகளிடம் மாமூல் வசூலிப்பதற்கு என்று ஒரு கூட்டம், வருவாய், சுகாதாரம், வணிகவரி, பத்திரப்பதிவு என நாள்தோறும் அந்தந்த அலுவலகங்களுக்குச் சென்று அன்றைய தினமே மாமூலை வசூலிப்பதற்கு ஒரு கூட்டம் என வீதி வீதிக்கு அராஜக கூட்டம் வாழ்ந்திருக்கிறது.
உள்ளாட்சி மற்றும் நகராட்சித் துறைகளின் கீழ் உள்ள அலுவலகங்களில் பெறப்படும் லஞ்சத்தொகையில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் கப்பம் கட்ட வேண்டும் என்ற கறார் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததால், மாவட்டந்தோறும் பயணம் செய்து கோடிக்கணக்கில் கப்பத்தொகையை வசூலிப்பதற்கென தனியாக ஒரு கூட்டம் இருந்ததாம்.
இப்படி, அமைச்சருக்கு மாமூல் வசூலித்துக் கொடுப்பதற்காக பணியாற்றி வந்தவர்கள் மட்டும் 2000 பேர் இருக்கும் என்கிறார் அந்த சமூக ஆர்வலர். என்ன சார் இப்படி சொல்றீங்க.. அமைச்சரிடம் ஆயிரம் பேர் இருக்கிறார்கள் என்று சொல்வதே மிதமிஞ்சிய கற்பனையாக இருக்கும். நீங்கள் 2000 பேர் இருக்கிறார்கள் என்று சொல்கிறீர்களே என்று கொஞ்சம் சீரியஸாகவே கேட்டோம்.
சார் நான் சொல்வது பொய் என தெரிந்தால், கோவை மாநகரில் ஒரு சுற்று வந்து நீங்களே விசாரியுங்கள். ஆட்டோ டிரைவர் முதல், தெருவோரம் கடை வைத்திருப்பவர்கள் வரை அமைச்சரிடம் 2000 பேர் இருக்கிறார்கள் என்று கொஞ்சம் கூட தயக்கம் இல்லாமல் சொல்வார்கள். தேர்தலுக்குப் பிறகு அடிதட்டமக்களுக்கு கூட துணிச்சல் வந்துவிட்டது என்றார் அந்த சமூக ஆர்வலர்.
தெரு, தெருவாக விசாரிக்கிற அளவுக்கு நமக்கு நேரமில்லை என்று கூறியபோதுதான், அந்த குண்டை தூக்கிப் போட்டார் அந்த சமூக ஆர்வலர். கோவை மாநகரில் 17 போலீஸ் ஸ்டேஷன் உள்ளது. ஒவ்வொரு ஸ்டேஷனுக்கும் உளவுத்துறையைச் சேர்ந்த ஒரு அதிகாரி இருப்பார். ஒட்டுமொத்த இந்தக் கூட்டமும் மார்ச் வரை, அமைச்சருக்குதான் விசுவாசம் காட்டி வந்தது.
அந்தந்த போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அமைச்சரின் ஆட்கள் செய்யும் அட்டூழியத்தை கண்டுகொள்ளவே மாட்டார்கள். இவர்களோடு கூட்டு வைத்து ஸ்டேஷன் அதிகாரிகளும், அமைச்சர் ஆட்கள் செய்யும் சட்டவிரோத செயல்களை தட்டியும் கேட்க மாட்டார்கள். அதுதொடர்பாக மேலிட அதிகாரிக்கும் புகார் கொடுக்க மாட்டார்கள். இதனால், அமைச்சரின் ஆட்கள் தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் மாதிரி கெட்ட ஆட்டம் போட்டார்கள்.
ஆனால், புதிதாக தேர்தல் ஆணையத்தால் பரிந்துரை செய்யப்பட்டு கோவைக்கு ஆணையராக வந்த ஐபிஸ் அதிகாரி டேவிட்சன் தேவாசீர்வாதம், ஒரீரு நாட்களுக்குள்ளாகவே, உளவுத்துறை போலீசாரின் தில்லுமுல்லுகளை கண்டுப்பிடித்து, 17 பேரையும் ஒரே உத்தரவில் மாற்றிவிட்டு, துடிப்புமிக்க புதிய போலீஸ் அதிகாரிகளை நியமித்து இருக்கிறார். அவரின் முதல் அடியை பார்த்தே, அமைச்சரின் அடிவருடிகள் நடுங்கி போய்விட்டனர்.
தேர்தல் முடிந்த பிறகு, கோவை மாநகர எல்லைக்குள் எங்கும் கள்ளச்சந்தையில் மதுபானம் விற்பனை நடைபெறவில்லை. அதுபோல, அரசு அதிகாரிகளிடம் மாமூல் கேட்பது, கட்டப்பஞ்சாயத்து செய்வது போன்ற பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த ஒருவரைக் கூட கடந்த ஒரு வாரமாக பார்க்க முடியவில்லை. சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் விரட்டி விரட்டி வெளுக்க போலீஸ் கமிஷனர் உத்தரவுப் போட்டுள்ளதாக கூறுகிறார்கள் நேர்மையான போலீஸ் அதிகாரிகள்.
அமைச்சரின் அடிவருடிகள் கூட்டத்தையே இப்போதெல்லாம் காண முடியவில்லை. அமைச்சர் என்ற அதிகாரத்தை வைத்து கோவை மாவட்டத்தையே தனது மாய வலையில் முடிச்சுப் போட்டு வைத்திருந்தார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. அந்த மாய வலையில் பொத்தல்களை நிறைய போட்டுவிட்டார் போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம். அமைச்சரின் அராஜக கூட்டத்தை மட்டுமல்ல, காவல்துறையில் உள்ள கருப்பு ஆடுகளையும் வேட்டையாட தயக்கம் காட்டுவதில்லை.
அவரின் அதிரடிக்கு இன்னொரு உதாரணம், நள்ளிரவில் உணவுக் கடையில் அராஜகம் செய்த உதவி ஆய்வாளர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையையும் சொல்லலாம். கோவைக்கு அவர் வந்த மூன்று வாரங்களிலேயே ரவுடிக் கூட்டம் சுத்தமாக துடைக்கப் பட்டிருப்பதைப் பார்த்து, மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
மே 2 ஆம் தேதிக்குப் பிறகும் டேவிட்சன் தேவாசீர்வாதம் ஐபிஎஸ்.ஸே கோவை மாநகர போலீஸ் கமிஷனராக நீடித்தால், அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் ஆதரவுக் கூட்டத்திற்கு அஷ்டம சனிதான் என்றார் மகிழ்ச்சியான குரலில் சமூக ஆர்வலர்.
அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் கெட்ட நேரம் என்றுதான் சொல்ல வேண்டும். மதுரை போலீஸ் கமிஷனராக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 39 ஐபிஎஸ் அதிகாரிகளின் பணியிடங்கள் மாற்றம் செய்யப்பட்டது, அவரும் மதுரையில் இருந்து சென்னைக்கு மாற்றப்பட்டார்.
மதுரையில் ரவுடிகளின் கொட்டத்தை அழித்தொழித்த அவரது திறமைக்கும், துணிச்சலுக்கும், சென்னை போன்ற ஏதாவது ஒரு மாநகரத்தில் சட்டம் ஒழுங்குப் பிரிவில் பணியாற்றும் வாய்ப்புத் தர முன்வந்தார் டிஜிபி ஜெ.கே.திரிபாதி. ஆனால், அதனை ஏற்க மறுத்து, காவல்துறை அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்கும் நிறுவனத்தில் கொஞ்சம் காலம் பணியாற்ற விரும்புவதாக கூறி, சட்டம் ஒழுங்குப் பிரிவில் இருந்து விலகி, போலீஸ் பயிற்சி நிறுவனத்தில் பணியாற்ற தொடங்கினார், டேவிட் தேவாசீர்வாதம்.
ஆனால், கோவை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த சுமித் சரண், அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் விருப்பத்திற்கு மேல், கடமையுணர்வுடன் பணியாற்றியதைப் பார்த்து, அவரை அங்கிருந்து தூக்கியடித்த தேர்தல் ஆணையம், போலீஸ் பயிற்சி நிறுவனத்தில் நிம்மதியாக பணியாற்றிக் கொண்டிருந்த கூடுதல் டிஜிபி அந்தஸ்திலான அதிகாரி டேவிட்சன் தேவாசிர்வாதத்தை, கோவைக்கு மாற்றி உத்தரவிட்டது. மார்ச் 24 ஆம் தேதியில் இருந்து அமைச்சரின் சரிவுக்கான கவுன்ட் டவுன் தொடங்கிவிட்டது.
ஆண்டவர் சொல்றார், இந்த டேவிட்சன் தோவசீர்வாதம் செய்கிறார் என்று சொல்கிற அளவுக்கு பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறாராம் கூடுதல் டிஜிபி. சல்யூட் சார்….