Sat. Nov 23rd, 2024


தமிழகத்தில் வன்னியருக்கு வழங்கப்பட்ட 10.5% உள் ஒதுக்கீட்டுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவீத ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி, கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதி தமிழக சட்டமன்றத்தில், தற்காலிக சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிராக பல்வேறு தரப்பினரும் முழக்கங்களை எழுப்பி வந்தனர். குறிப்பாக தென் மாவட்டங்களில் பல்வேறு அதிருப்தி குரல்கள் வெளிவந்தன. இதனை எதிர்த்து திண்டுக்கல்லைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு மீதான விசாரணை தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, உரிய நடைமுறைகளை பின்பற்றியே சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. தேர்தல் ஆதாயத்திற்காக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றார்.

இதனைத்தொடர்ந்து, மனுதாரரின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், போதுமான ஆதாரங்கள் இல்லாமல் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று கூறி இந்த வழக்கில் தமிழக அரசு 8 வாரங்களில் பதில் தருமாறு உத்தரவிட்டனர்.

இதனை தொடர்ந்து வன்னியர் சமூகத்துக்கு அளிக்கப்பட 10.5% உள் ஒதுக்கீட்டுக்கு எதிராக மதுரையை சேர்ந்த அபிஷ் குமார் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வில் நடைபெற்றது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகமுத்து என்பவர் வாதாடினார். இந்த உள்ஒதுக்கீடான 10.5% என்பது எதன் அடிப்படையில் வழங்கப்பட்டது என்பதற்கான ஒரு விவரமும் இல்லை. எனவே சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்தி அதன் அடிப்படையில் வழங்கியிருக்க வேண்டுமே தவிர, தன்னிச்சையாக வழங்கப்பட்டஇந்த உள்ஒதுக்கீட்டை ஏற்றுக்கொள்ள முடியாது.

ஒரு உத்தேச அடிப்படையில் தான் இந்த உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. எனவே தனிப்பட்ட ஒரு சமுதாயத்திற்கு வழங்கப்பட்ட இந்த சலுகையின் மூலம் பிற சமூக மக்களுக்கு அநீதி விளைவிப்பதாகும். எனவே இதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

தமிழக அரசின் உள்ஒதுக்கீடு சட்டத்திற்கு தடை விதிக்க முடியாது என்று கூறிய உச்சநீதிமன்றம், இது தொடர்பாக பதிலளிக்க தமிழக அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளனர்.