Sun. May 19th, 2024

ரஜினிகாந்தின் மனைவியாக நயன்தாராவும், கீர்த்தி சுரேஷ், சூப்பர் ஸ்டாரின் சகோதரியாகவும் நடிக்கின்றனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மிகவும் எதிர்பார்ப்பிற்குரிய தீபாவளி 2021 பொழுதுபோக்கு மற்றும் கொண்டாட்டத்திற்குரிய அன்னாத்த படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது. இதற்காக அவர், சென்னையில் இருந்து விமானம் மூலம் ஹைதராபாத்துக்கு புறப்பட்டுச் சென்றார். விமான நிலையத்தில் அவர் உற்சாகமாக நடந்து சென்ற காட்சியும், விமான நிலைய நுழைவு வாயிலுக்கு முன்பாக திரண்டிருந்த ரசிகர்களை பார்த்து அவர் கையசைத்திலும் புதிய உத்வேகத்தை கண்ட அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர்.

அன்னாத்த படத்தின் படப்படிப்பு ஏறக்குறைய 50 சதவீதத்திற்கும் மேலாக முடிந்துவிட்டது. இயக்குனர் சிவாவும், அவரது குழுவினரும் அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக தயாராகவே இருந்து வருகின்றனர். இன்னும் 60 நாட்களில் படத்தின் எஞ்சிய காட்சிகளும் திரைப்பட மாக்கப்பட்டுவிடும். ரஜினிகாந்தின் வருகையை அடுத்து, நாளை முதல் ஹைதராபாத்தில் படப்பிடிப்பு தொடங்குகிறது. இந்த நகரத்திலேயே கிட்டத்தட்ட ஒரு மாத காலம் படப்பிடிப்பு நீடிக்கும், அதைத் தொடர்ந்து கிளைமாக்ஸ் காட்சிகளுக்காக கொல்கத்தாவுக்கு அண்ணாத்த படக்குழு பறக்கிறது. மொத்த படப்பிடிப்பையும் 12௦ நாட்களுக்குள் முடிக்க திட்டமிட்டிருக்கிறது படத் தயாரிப்பு குழு.

சூப்பர் ஸ்டாரின் இறுதிகட்ட படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடக்கவுள்ள அதே நாட்களில், தல அஜித்தின் வேதாளத்தின் படப்பிடிப்பும் அதே நகரில் நடக்க இருப்பது, படக்குழுவினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரஜினிகாந்த், நயன்தாரா மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோருக்கான காட்சிகள், விரைவாகவும், காலதாமதமின்றியும் படமாக்குவதற்கான முன்தயாரிப்புகளுடன் இயக்குனர் குழுவினர் தயாராக இருக்கின்றனர். ஏற்கெனவே கொரோனோ தொற்று பிரச்னையால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டதுடன், ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நெருக்கடியும் ஏற்பட்டது.

இந்தமுறை இதேபோன்ற நோய் தொற்று, படப்பிடிப்பு தளத்தில் பரவாமல் இருப்பதற்காக, அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ள நிலையில், ஜூன் மாதத்திற்குள் படப்பிடிப்பை முடித்து நவம்பர் 4 – தீபாவளியன்று படம் திரைக்கும் வரும் வகையில், படப்பிடிப்பு மற்றும் பின்னணி இசைக் கோர்ப்பு போன்றவற்றை திட்டமிட்டிருக்கிறது தயாரிப்பு குழு. ரஜினிகாந்தின் மனைவியாக நயன்தாரா நடிக்கிறார், கீர்த்தி சுரேஷ் சூப்பர் ஸ்டாரின் சகோதரி வேடத்தில் நடிக்கிறார்.

இடைவேளைக்கு முந்தைய பாகத்தை இயக்குனர் சிவா விறுவிறுப்பாக இயக்கி முடித்துவிட்டார். இடைவேளைக்கு அடுத்த பாகத்தின் படப்பிடிப்புதான் இப்போது தொடங்குகிறது. இடைவேளைக்கு முந்தைய பகுதியில் வைத்துள்ள டிவிஸ்ட், கதையின் முடிச்சுகள் இடைவேளைக்குப் பிறகுதான் அவிழ்க்கப்படவுள்ளது. அதில்தான் நிறைய சுவாரஸ்யங்கள் உள்ளன. ரஜினியின் அறிமுக காட்சியும் இனிமேல்தான் படமாக்கப்பட்வுள்ளது.

முழுக்க, முழுக்க பொழுதுபோக்கு அம்சங்களை கொண்டிருந்தாலும், அண்ணாத்த படம், உணர்ச்சிகரமான திரைப்படம். குடும்ப பெருமையை நெகிழ்ச்சியுடனும், சந்தோஷத்துடன் அனுபவித்து பார்க்கும் வகையில் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.

சண்டை காட்சிகளில் ரஜினிகாந்த் தூள் கிளப்புவராக இருந்தாலும், 1990 காலகட்டத்தில் அவர் நடித்து வெற்றி விழா கொண்டாட்டங்களைப் பார்த்த, கிராம பின்னணியை கொண்ட திரைப்படத்தை போலவே அண்ணாத்த படமும் ரசிகர்களை, குறிப்பாக பெண்களை உற்சாகத்தில் ஆழ்த்தும்.

ரஜினியின் கதாபாத்திரத்திற்கு மெருகு ஏற்றும் வகையில், நயன்தாராவின் கேரக்டரும், கீர்த்தி சுரேஷின் கதாபாத்திரமும் முக்கியத்துவம் பெறும் வகையில் காட்சிகள் அமைககப்பட்டுள்ளன. அண்ணாத்தே படம் ரசிகர்களின் விருப்பத்தினை, எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் விறுவிறுப்பு குறையாமல் படமாக்கப்பட்டு வருகிறது, அண்ணாத்த திரைப்படம்.