Sat. Nov 23rd, 2024

தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி டெல்லி பாஜக மேலிடம் வகுத்த வியூகம், 50 சதவிகித்திற்கு மேல் வெற்றிப் பெற்றுள்ளதாக டெல்லியில் உள்ள மூத்த ஊடகவியலாளர் ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். ஹெச். ராஜா டம்மி பீஸா? என்ற நல்லரசு செய்தியில் வெளிப்படுத்தப்படாமல் விடப்பட்ட ஒரு தகவலைப் பற்றி அவர் விரிவாகப் பேசினார்.

தமிழகத்தில் பாஜக என்றாலே, பிராமணர்கள் என்ற அடையாளம்தான் இளம்தலைமுறையினரிடம் பரவியிருக்கிறது. பிராமண அடையாளத்தை தமிழக பாஜக சுமந்து நிற்பதை தற்போதைய டெல்லி பாஜக மேலிடம் விரும்பவில்லை. அதனால்தான், காரைக்குடியில் போட்டியிட்ட ஹெச்.ராஜாவுக்கு டெல்லி மேலிடம் எந்த முக்கியத்துவமும் தரவில்லை. அதே அடிப்படையில்தான் கே.டி.ராகவன், நாராயணன் திருப்பதி, எஸ்.வி.சேகர் உள்ளிட்ட பிராமணர்களுக்கு, இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது.

இன்றைக்கு தமிழகத்தில் பாஜக இந்தளவுக்கு உயிர்ப்போடும், உரக்க குரல் கொடுக்கும் அளவுக்கும் அடிமட்டத்தில் இருந்து தலைமை வரைக்கும் வலுவாக இருக்கிறது என்றால், அதற்காக உழைத்தவர்கள் மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான இல.கணேசன், பொன் ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா உள்ளிட்டவர்கள்தான் முதன்மையாக இருப்பார்கள். அவர்களின் பல்லாண்டு கால கடுமையான உழைப்பின் காரணமாக, தேசியக் கட்சியான பாஜக, தமிழகத்தில் ஒரு அடையாளத்தை பெற முடிந்ததே தவிர, அரசியல் அங்கீகாரம் பெறும் வகையிலோ, ஆழமாக காலூன்றவோ முடியவில்லை.

கடந்த 20 ஆண்டுகளில், மாநிலத்தில் மிகுந்த செல்வாக்குப் பெற்ற திமுக, அதிமுக ஆகிய இரண்டு கழகங்களும் பாஜக.வுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து அரசியல் ரீதியாக பலன் பெற்று இருக்கின்றன. மத்திய அமைச்சரவையிலும் இடம் பெற்றிருக்கின்றன. இப்படி அரசியலிலும் ஆட்சியிலும் ஆதாயம் அடைந்திருந்தாலும், பாஜக.வை தீண்டதகாத கட்சியாகதான் இரண்டு கழகங்களும் அடையாளப்படுத்திக் கொண்டிருக்கின்றன.

பிராமண அடையாளத்தை வைத்துக் கொண்டு, தமிழகத்தில் பாஜக.வை ஆளும்கட்சி நிலைக்கு உயர்த்துவது எந்த காலத்திலும் சாத்தியமில்லை என்பதை உணர்ந்துதான், தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள காலத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த டாக்டர் எல்.முருகனை, தமிழக பாஜக தலைவராக நியமித்தது டெல்லி மேலிடம்.

இந்த நியமனம் மூலம், தமிழக பாஜக.வில் பிராமணர்களின் ஆதிக்கம் குறைந்து, இதர சமுதாய மக்களின் ஆதிக்கம் தலையெடுக்க தொடங்கியது. அதன் வெளிப்பாடுதான் இந்த தேர்தலில் வெளிப்படையாகவே காண முடிந்தது. அரவக்குறிச்சி வேட்பாளர் அண்ணாமலை, கோவை தெற்கு வானதி சீனிவாசன், நெல்லை நயினார் நாகேந்திரன், ஆயிரம் விளக்கு குஷ்பு என கலவையான வேட்பாளரை அறிவித்த பாஜக மேலிடம், பிராமணர்களுக்கே முக்கியத்துவம் என்றஅடையாளத்தை சுக்கு நூறாக நொறுக்கியுள்ளது.

அந்த அடிப்படையில்தான், இல.கணேசன், கே.டி.ராகவன், நாராயணன், எஸ்.வி.சேகர் போன்றவர்கள், தமிழக அரசியலிலும் பொதுமக்களிடடையே பிரபலமாக இருந்தாலும், தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு தராமல் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

பாஜக.வை நம்பி இணைத்தால் அரசியலில் பிரகாசிக்க முடியும், செல்வாக்கு பெற்றுவிட முடியும் என்ற நம்பிக்கையை பிராமணர் அல்லாத சமுதாய மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்ற வியூகத்தில் பாஜக மேலிடம் முதல் வெற்றியைப் பெற்றுள்ளது. ஹெச்.ராஜாவின் வெற்றியைவிட வானதி சீனிவாசனின் வெற்றியை, அண்ணாமலையின் வெற்றியை, முருகனின் வெற்றியை, நயினார் நாகேந்திரனின் வெற்றியை, குஷ்புவின் வெற்றியை, விருதுநகர் பாண்டுரங்கனின் வெற்றியை, தளி நாகேஷ்குமார், நீலகிரி போஜராஜன் வெற்றியை முக்கியமாக பார்க்கிறது டெல்லி பாஜக.

அதனால்தான், பாஜக.வுக்காகவே தங்கள் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்துக் கொண்ட நாகர்கோயில் எம்.ஆர்.காந்தி, ராமநாதபுரம் குப்புராம் போன்றவர்களைக் கூட, இந்த பிரசாரக் காலத்தில் டெல்லி பாஜக தலைவர்கள் இரண்டாம் நிலையிலேயே வைத்திக்கின்றனர். வானதி சீனிவாசன், எல்.முருகன், அண்ணாமலை ஆகிய மூவருமஎப்படியாவது எம்.எல்.ஏ.,வாக தேர்வாகி சட்டமன்றத்திற்குள் நுழைந்து விட வேண்டும் என்று டெல்லி பாஜக முக்கியத் தலைவர்கள் விரும்புகிறார்கள்.

இப்படி, இந்த தேர்தலை வைத்து தமிழக மக்களுக்கு, குறிப்பாக இரண்டு கழகங்களில் புறக்கணிக்கப்பட்டுள்ள செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர்களுக்கு ஒரு முக்கிய செய்தியை டெல்லி பாஜக உணர்த்தி முயற்சிக்கிறது. கழகங்களில் செல்வாக்கு இல்லாமல் இருப்பதைவிட தமிழக பாஜக.வில் இணைந்தால், உங்களின் அரசியல் வளர்ச்சியை டெல்லி பாஜக பார்த்துக் கொள்ளும் என்பதுதான் மறைமுகமாக விடுக்கப்பட்டுள்ள செய்தி என்கிறார்கள் டெல்லியில் உள்ள பாஜக நிர்வாகிகள்.

இதேபோல, சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் மீது அதிருப்தியை வெளிப்படுத்தும் தலைவர்கள், மாவட்ட நிர்வாகிகள் ஆகியோரை பாஜக.வுக்கு இழுக்கும் திட்டமும் தயாராக இருக்கிறதாம்.

திராவிடத்திற்கு எதிராக பேசுவது, இந்து கடவுள் எதிர்ப்பை அரசியலுக்குப் பயன்படுத்துவது போன்ற சித்தாந்தங்களை முன்வைத்து அரசியல் களத்தில் போராடாமல், தமிழகத்தின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பது ஊழல்தான். கரையான்புற்றுப் போல பெருகும் ஊழலில் அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் ஊறித் திளைத்துக் கொண்டிருப்பவை.

ஊழலில் முதலிடத்தில் உள்ள மாநிலம் என்ற அவப்பெயரில் இருந்து தமிழகம் விடுபட வேண்டும் என்றால், கழகங்கள், காங்கிரஸ் இல்லாத ஆட்சி மலர வேண்டும். அதற்கு பாஜக தான் சரியான தீர்வாக இருக்கும் என்ற பிரசாரத்தை வரும் நாட்களில் அழுத்தமாக முன்னெடுத்து, 2024 ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக வலுவான அடித்தளத்துடன் பாஜக,.வை கட்டமைப்பதுதான் உள்துறை அமித்ஷா, பிரதமர் மோடி ஆகியோரின் வியூகம் ஆகும்.

கடந்த காலங்களில் தமிழகம் வந்த போதும் இல்லாத எழுச்சி, தேர்தல் பிரசாரத்திற்காக தற்போது தமிழகம் வந்தபோது காணப்பட்ட எழுச்சியை, குறிப்பாக இளம்தலைமுறையினர் அதிகளவில் திரண்டு ஆர்ப்பரித்ததை கண்டு பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் ஆச்சரியப்பட்டு போனார்களாம்.

சேலம், நெல்லை, தாராபுரம், நாகர்கோவில் ஆகிய இடங்களில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் திரண்டிருந்த கூட்டத்தைப் பார்த்து உற்சாகமாகியிருப்பதுடன், இன்றைய தேதியில் பிராமணர் இல்லாத பாஜக.வை முழுமையாக கட்டமைத்து, வழிநடத்தவும், வலிமைமிக்கதாகவும் மாற்ற வியூகம் வகுத்திருக்கிறார்கள் இரண்டு தலைவர்களும். அவர்களின் திட்டப்படி, புதுச்சேரியில் பாஜக தலைமையிலான அரசு, ஆட்சிப் பீடத்தில் அமர்ந்துவிட்டால், அங்கிருந்து தமிழக அரசியலை ரிமோட் கண்ட்ரோல் போல் இயக்குவார்கள்.

இரண்டொரு ஆண்டுகளில் தமிழகத்தில் பாஜக.வை அசைக்க முடியாத சக்தியாக, அதுவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் ஏகோபித்த குரல்கள் வாயிலாகவே சாதிப்பார்கள் என்பதுதான் டெல்லி பாஜக முன்னணி தலைவர்களின் பேச்சாக இருக்கிறது என்று கூறினார் டெல்லியில் உள்ள மூத்த ஊடகவியலாளர்கள்.