Sat. Nov 23rd, 2024

தமிழகத் தேர்தலின் விலை 5000 கோடி ரூபாய்க்கு மேல் என்று அதிர்ச்சி கிளப்புகிறார் அரசியல் மூத்த தலைவர் ஒருவர். மாநிலக் கட்சிகள் மட்டுமல்ல,தேசியக் கட்சிகளும் பணத்தை வாரி இறைத்து இருக்கிறது.

இப்படி, மாநிலத்திற்குள்ளேயே பணம் பறந்தது ஒரு பக்கம் என்றால், கடல் கடந்தும் பணம் பெட்டி, பெட்டியாக கடத்திச் சென்று நூற்றுக்கணக்கான வங்கிக் கணக்குகள் மூலம் கடலோர தமிழக கிராமங்களுக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது என்று கூறி அதிர வைக்கிறார் அந்தமானில் உள்ள சமூக ஆர்வலர் ஒருவர். அவர் கூறிய தகவலை உறுதிப்படுத்திய பிறகே இங்கு பதிவிடுகிறோம்.

தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு ஒரு சில நாள்களுக்கு முன்பு சென்னையில் இருந்து நான்கு மீன்பிடி விசைப்படகுகள் அந்தமான் தீவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளன. நேராக தலைநகரான போர்ட் பிளேயருக்குச் செல்லாமல், அதன் அருகில் உள்ள தீவு ஒன்றுக்கு சென்றுள்ளது. அங்கு நான்கு நாள்கள் நிறுத்தப்பட்டிருக்கிறது. அந்த நான்கு நாட்களில் படகுகளில் இருந்து மீன் பதப்பப்படுத்தி வைக்க பயன்படும் பெடடிகளில் பணம் கட்டு கட்டாக அடுக்கி வைக்கப்பட்டிருந்திருக்கிறது. அத்தனையும், 500, 2000 ரூபாய் நோட்டு கட்டுகள். பணப் பெட்டிகளை உரிய இடத்திற்கு பத்திரமாக கொண்டு செல்வதற்கு 4 நாட்கள் தேவைப்பட்டிருக்கிறது.

4 வது நாள் குடிக்க கொண்டு சென்ற தண்ணீரும், டீசலும் தீர்த்துப் போக, அந்தமானில் உள்ள சமூக ஆர்வலரின் நண்பரான மீன் ஏற்றுமதியாளருக்கு தண்ணீர் மற்றும் டீசல் வேண்டும் என்ற வேண்டுகோளோடு அணுகியிருக்கிறது ஒரு குழு. அந்தமானில் முதன்மையான தொழில், மீன் ஏற்றுமதி தொழில்தான். அந்தமானில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு நாள்தோறும் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மீன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. அந்த தொழிலில் கொடி கட்டி பறப்பவர்கள், கன்னியாகுமரி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த தமிழக மீனவர்கள்தான்.

அந்தவகையில் மீன் ஏற்றுமதியாளர்கள், படகுகள் நிறுத்தப்பட்ட இடத்தை அறிந்ததும், இதில் ஏதோ வில்லங்கம் இருக்கிறது என்று ஒதுங்கிக் கொண்டிருக்கிறார். பிறகு, நான்கு படகுகளில் சென்றிருந்தவர்களில் ஒருவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட, அந்த நபர் உடனடியாக போர்ட் பிளேயரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அதன் மூலம் தகவல் பரவி, போலீசார் விசாரணையை தீவிரப்படுத்த, நான்கு படகுகள் நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்கு அந்தமான் போலீசார் விரைகின்றனர். ஒரு படகு, மீட்புப் படகு மூலம் போர்ட் பிளேயருக்கு இழுத்து வரப்படுகிறது.

செம கவனிப்புப் போல..அடுத்தடுத்து மூன்று விசைப்படகுகளும் இழுவை கப்பல் மூலம் போர்ட் பிளேயருக்கு இழுத்து வரப்பட்டு, அதில் இருந்தவர்கள் போலீஸ் கண்காணிப்பு வளையத்தில் வைக்கப்படுகின்றனர். அடுத்தடுத்து நான்கு நாட்கள் தீவிரமான விசாரணை நடக்கிறது. இந்த இடத்தில்தான் ஒரு முக்கிய திருப்பம்..இந்த விசாரணை தீவிரமான காலகட்டத்தில், தமிழகத்தில் இருந்து குறிப்பாக சென்னையில் இருந்து முக்கிய புள்ளி அந்தமானுக்கு பறக்கிறார். இரண்டொரு நாளில் எல்லாம் சரி செய்யப்படுகிறது.

சட்டவிரோதமாக அந்தமானுக்குக் சென்ற நான்கு படகுகளும், சென்னை திரும்புகின்றன. அந்தமானுக்குரிய சட்டப்பிரிவுகளின் படி நடவடிக்கை எடுக்கப்பட்ட பிறகே, படகுகளும், அதில் பயணம் செய்தவர்களும் சென்னைக்கு திரும்ப அனுமதிக்கப்படுகின்றனர்.

படகுகள் சென்னை திரும்பியதை உறுதி செய்து கொண்ட பிறகு, அந்தமானில் மீன் ஏற்றுமதி தொழிலில் ஈடுபட்டுள்ள தமிழர்களை ஒரு குழு அணுகி, 10 லட்சம் முதல் 50 லட்சம் வரை பணத்தைக் கொடுத்து, அவரவர் வங்கிக் கணக்குகள் மூலமாக சென்னையில் தொடங்கி கடலூர், நாகப்பட்டினம், கன்னியாகுமரி, ராமநாதபுரம், உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் உள்ள ஆயிரக்கணக்கான வங்கிக்கணக்குகளுக்கு ஒரு லட்சம், இரண்டு லட்சம் என பணத்தை பரிமாற்றம் செய்து தரும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

அந்தமானில் உள்ள மீன் பிடி ஏற்றுமதியாளர்களில் 100க்கும் மேற்பட்டோர் கோடிக்கணக்கில் வர்த்தகம் செய்வதால், இந்த பணபரிமாற்றம் குறித்து வங்கி அதிகாரிகளுக்கும் சந்தேகம் எழவில்லை. தொடக்கம் முதலே இதனை மோப்பம் பிடித்த சமூக ஆர்வலர், அந்தமான் போலீஸில் உள்ள தனது தொடர்புகளை அணுகி பேசியிருக்கிறார். அப்போதுதான் பகீர் தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

இந்த களேபரங்கள் அந்தமானில் நடந்து கொண்டிருக்கும்போது, சென்னையில் இருந்து மீனவர்கள் சமுதாயத்தில் பிரபலமான ஹரிதாஸ் என்பவர் அங்கு பறந்து சென்றிருக்கிறார். இவர் தமிழகத்தில் உள்ள பிரபல, செல்வாக்குமிக்க அரசியல்வாதிகளுக்கு மிகவும் நெருக்கமானவர் என்று கூறுகிறார்கள். இவர் அந்தமான் சென்றவுடன் காட்சிகள் மாறியதுடன், படுவேகமாக சில வேலைகள் நடந்ததாகவும் கூறுகிறார் அந்த சமூக ஆர்வலர்.

அந்தமானில் ரியல் எஸ்டேட் பிஸினஸில் மிகவும் பிரபலமானவராக ஹரிதாஸ் இருப்பதால், அங்கு சில தீவுகளும் விலைக்கு வாங்கப்பட்டிருக்கலாம் என்று கூறும் அந்த சமூக ஆர்வலர், இவரைப் போல சென்னை கல்மண்டபத்தைச் சேர்ந்த இன்னொரு பிரபலமும் அந்தமான் சென்றுள்ளார்.. அவர், சென்னையில் உள்ள அமைச்சரின் பினாமியாக செயல்படுபவர் என்றும் கூறினார். அவரின் பெயரும் நமக்கு தெரியும். அவரது பயணத்தைப் பற்றி உறுதிப்படுத்த முடியாததால், இங்கு பதிவு செய்வதை தவிர்க்கிறோம்.

மார்ச் முதல் வாரத்தில் இருந்து நாள்தோறும் 10 கோடி ரூபாய் என்ற விகிதத்தில் 200 கோடி ரூபாய்க்கு மேல் பணம் தமிழகத்திற்கு வந்திருக்கலாம் என்றும் மீதித் தொகை அந்தமானில் முதலீடு செய்யப்பட்டிருக்கலாம் என்றும் உறுதியான குரலில் தெரிவிக்கிறார் அந்தமான் சமூக ஆர்வலர்.

அந்தமான் போல இன்னும் என்ன நிகழ்வுகள் நடந்திருக்கிறதோ, தேர்தலையொட்டி,…எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் பதுக்கப்பட்டிருக்கிறதோ… தேர்தல் ஆணையம் எத்தனை அவதாரங்கள் எடுத்தாலும், அவர்களின் கண்களில் விரலை விட்டு ஆட்டுகிற வித்தை தெரிந்தவர்கள் நம் தமிழக அரசியல்வாதிகள்… எங்கே செல்கிறது தமிழகம்?