ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. சென்னையில் உள்ள 16 தொகுதிகளிலும் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் முனைப்புடன் நடைபெற்று வருகின்றன. வாக்குப்பதிவு நடைபெறவுள்ள வாக்குச்சாவடி மற்றும் மாநகரம் முழுவதும் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அவருடன் மாநகராட்சி ஆணையர் பிரகாஷும் உடன் சென்றார். ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், மொத்தமுள்ள வாக்குச்சாவடிகளில் 50 சதவிகித இடங்களில் துணை ராணுவப் படை வீரர்கள் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுவார்கள். சென்னை மாநகர காவல் அதிகாரிகள் உள்பட மொத்தம் 25 ஆயிரம் காவலர்கள் வாக்குப்பதிவு தினமான 6 ஆம் தேதி பாதுகாப்பு மற்றும் வாகன ரோந்துப் பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று தெரிவித்தார்.