Sat. Nov 23rd, 2024

தமிழகத்தில் 5 நாட்களுக்கு சுட்டெரிக்கும் வெயில் நிலவும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை உள்பட தமிழகத்தின் 26 மாவட்டங்களில், அடுத்த 5 நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தரைக்காற்று வடமேற்கு திசையில் இருந்து தமிழகம் நோக்கி வீசுவதால், இயல்பை விட வெப்பம் 6 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், கரூர், திருச்சி, தஞ்சை, மதுரை உள்ளிட்ட 26 மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

அனல் காற்று வீசும் என்பதால் தேர்தல் பரப்புரையில் ஈடுபடுவோர் மதியம் 12 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை வாக்கு சேகரிப்பதைத் தவிர்க்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், அந்தமானில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இல்லை என்றும், தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளது.