Sat. Nov 23rd, 2024

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக 2 வது முறையாக பிரதமர் மோடி நேற்றிரவு தமிழகம் வந்தார். டெல்லியில் இருந்து தனிவிமானத்தில் மதுரை வந்த பிரதமர் மோடியை பாஜக தலைவர்கள வரவேற்றனர்.

மதுரையில் தனியார் நட்சத்திர ஹோட்டலில் தங்கிய அவர், சிறிதுநேர இளைப்பாறுதலுக்குப் பிறகு தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தரிசனம் செய்தார்.

30 நிமிடத்திற்கு மேலாக மூலவர் சன்னதிகள் உள்பட ஒவ்வொரு சன்னதிக்கும் சென்று நின்று நிதானமாக சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக கோயில் நுழைவு வாயிலில் அர்ச்சகர்கள், பிரதமருக்கு பூரண கும்ப மரியாதை வழங்கினர். மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு செல்லும் சாதாரண பக்தர்கள் முதல் செல்வாக்குப் படைத்த பிரமுகர்கள் வரை, கோயிலுக்குள் உள்ள பொற்றாமரை குளத்தின் முன்பு நின்று அல்லது ஏதாவது ஒரு மூலையில் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ள தணியாத ஆர்வம் காட்டுவார்கள்.

அதற்கு பிரதமரும் விதிவிலக்கு அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில், பொற்றாமரை குளத்தின் முன்பு நின்று புகைப்படம் எடுத்துள்ளார். கோயில் கோபுரம் பின்னணியில் முழு புகைப்படம் அமைவது மிகவும் சிறப்பானது. அந்த புகைப்படத்தையும், அவரது தோற்றத்தையும் பார்த்தாலே புரிந்து கொள்ள முடியும், பிரதமர் எவ்வளவு ரசனையுடையவர் என்பதையும், புகைப்படத்திற்காக எப்படி தோன்ற வேண்டும் என்பதை துல்லியமாக உணர்ந்து வைத்திருப்வர் என்பதையும் சிறுகுழந்தைகளால் கூட புரிந்து கொள்ள முடியும்…

மதுரையில் இன்று காலை 11 மணியளவில் தனது பிரசாரத்தை பிரதமர் மோடி தொடங்குகிறார். தென் மாவட்ட பாஜக மற்றும் அதிமுக வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பிரதமர் வாக்கு சேகரிக்கிறார்.தொடர்ந்து அவர் மாலையில் நாகர்கோயிலில் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்திலும் கலந்து கொண்டு பாஜக அதிமுக கூட்டணிக்கு ஆதரவு திரட்டுகிறார். இந்தஇரண்டு கூட்டங்களிலும் பிரதமருடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.