Sat. Nov 23rd, 2024

பிரதமர் மோடி நேற்றிரவே தமிழகத்திற்கு வந்து தங்கியதுடன், இன்று காலை மதுரையில் அதிமுக பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தை தொடங்கிவிட்டார். அவர் தமிழகத்தில் தங்கியிருக்கும் போது, இன்று அதிகாலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புதல்வி செந்தாமரை வீடு, திமுக எம்.எல்.ஏ., வீடு என பல இடங்களில் வருமான வரித்துறை சோதனை தொடங்கியது. அதனைப்பார்த்து ஆவேசமடைந்த திமுக வேட்பாளர்கள் அனைவரும் மோடியை தங்கள் தொகுதிக்கு பிரசாரத்திற்கு வருமாறு அழைத்து கிண்டலடித்துள்ளனர். எல்லோரும் சொல்லி வைத்த மாதிரி இன்று காலை 10.02 மணியில் இருந்து அவரவர் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

திமுக வேட்பாளர்களிடம் இப்போது பிரதமர் மோடியை சீண்டிப் பார்க்கும் அம்சம் ட்ரண்ட்டாக மாறியுள்ளது. தாங்கள் போட்டியிடும் தொகுதியில் வாக்குசேகரிப்பில் ஈடுபடுவதற்கே நேரம் இல்லாத திமுக வேட்பாளர்கள், தங்கள் டிவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடியை பிரசாரத்திற்கு அழைத்து கிண்டலடித்து வருகிறார்கள்.

திமுக தலைமையிலான கூட்டணியை நேரடியாக தாக்கி பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் மத்திய அமைச்சர்கள் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், திமுக முன்னணி தலைவர் எ.வ.வேலு வீடு மற்றும் கல்லூரி உள்ளிட்ட அவருக்குச் சொந்தமான பல இடங்களில் வருமான வரிச் சோதனை நடைபெற்றது. இதேபோல, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் வீடு, அண்ணா நகர் எம்.எல்.ஏ., வீடு, கரூர் வேட்பாளர் செந்தில்பாலாஜி வீடு என திமுக பிரமுகர்களை குறிவைத்து வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

தேர்தல் பிரசாரத்தில் சுறுசுறுப்பாக இருக்கும் திமுக.வினரை மத்திய அரசின் நடவடிக்கைகள் சீண்டிப் பார்ககும் வகையில் இருப்பதாக திமுக இரண்டாம் கட்ட தலைவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த நேரத்தில் அதிமுக.வை நேரடியாக எதிர்த்து போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் மற்றும் அந்த கூட்டணியின் வேட்பாளர்களோடு மோதும் திமுக வேட்பாளர்கள் இன்று காலை முதல் மோடியை சீண்டிப்பார்க்கும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவரவர் டிவிட்டர் பக்கத்தில், பிரதமர் மோடி அவர்களே நான் இந்த தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடுகிறேன். எனது தொகுதியில் அதிமுக வேட்பாளர் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து பிரசாரம் செய்ய நீங்கள் வந்தீர்கள் என்றால், அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற உங்களின் வருகையும், பிரசாரமும் உதவும் என கிண்டலாக பதிவு ஏற்றி வருகின்றனர்.

இதேபோல, திமுக வேட்பாளர்கள் போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் சொல்லி வைத்தால் போல, இன்று காலை 10 மணியளவில், அவரவர் டிவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்து பதிவு போடப்பட்டுள்ளது.