Thu. Mar 28th, 2024

புதிய அரசியல் கட்சி தொடங்கப் போவதில்லை என்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் திடீர் அறிவிப்பு, அரசியல் களத்தில் ஆழ்ந்த ஈடுபாடு காட்டி வருபவர்களுக்கு பெரிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திவிடவில்லை. ஆனால், அவரையே தங்களின் ஆதர்ஷ புருஷராக நினைத்து கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக, இளமைக்காலம் முதல் அவரின் ஒவ்வொரு திரைப்படத்தையும், அவரின் பிறந்தநாளையும் கொண்டாடி மகிழ்ந்த அவரது ரசிகர்களுக்கு, வாழ்வின் இறுதிக்காலத்தில் ஏற்பட்ட ஏமாற்றமே என்றே சொல்லலாம். அவர்களது ரசிகர்களை விடுங்கள். ஆளும்கட்சியான அ.தி.மு.க.வும் வேண்டாம், பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளுக்கும், ரவுடியிசத்திற்கும் ஆபத்பாந்தவனாக விளங்குபவர்கள் என்று பெயரை சுமந்திருக்கும் முக்கிய எதிர்க்கட்சியான தி.மு.க.வுக்கும் வாக்களிக்க விரும்பாத வாக்காளர்களுக்கு, ரஜினியின் அறிவிப்பு மிகப்பெரிய சோர்வை ஏற்படுத்திவிட்டது.1991 ஆம் ஆண்டில் தொடங்கி 2021 ஆம் ஆண்டு தொடங்கியுள்ள இன்றைய காலகட்டம் வரை தமிழக அரசியல் களம், ஊழல்களாலும், சட்டவிரோத கும்பல்களாலும் தான் நிரம்பிக் கிடக்கிறது. 1991 -96 காலகட்டத்தில் அப்போதைய அ.தி.மு.க. அரசின் அதிகார, எதோச்சதிகார அரசியலுக்கு எதிராக பொங்கிய ரஜினி, அ.தி.மு.க. ஆட்சி தொடர்ந்தால் தமிழகத்தை ஆண்டவனாலும் கூட காப்பாற்ற முடியாது என்று கண்கள் சிவக்க கூறிய வார்த்தைகளின் வீரியம், இன்றைய அரசியல் களத்திற்கும் பொருத்தமாக தான் இருக்கிறது. அரசியலுக்கு வருவேன் என்று அவர் நேரடியாக அறிவிக்காத போதும், அவரது நடிப்பும், செயல்பாடுகளும், அந்த எண்ணத்தை அவரது ரசிகர்களிடமும், திராவிட சித்தாந்தத்தை வெறுக்கும் தேசிய சிந்தனைக் கொண்டோரிடம் ஒரு விதமான தாக்கத்தை, எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது என்பதை அவரே கூட மறுதலிக்க முடியாது. அந்த வகையில், கடந்த 2017 இறுதியில் அரசியலுக்கு வருவதாக அவர் அறிவித்த போது முன்வைத்த வாதத்தை முழுமையாக நாம் ஆய்வுக்குட்படுத்தாமல், அவர் முன்வைத்த வார்த்தைகள் சிலவற்றை இப்போது நினைவு கூறுவது பொருத்தமாகதான் இருக்கும்.
தமிழ்நாட்டில் சிஸ்டமே சரியில்லை, சீர்கெட்டு இருக்கிறது என்று மூன்றாண்டுகளுக்கு முன்பு அவர் சொன்னார். அவரின் கூற்று உண்மை என்பதுபோலதான், கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் பரவலாக நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு போலீசார் வேட்டையில், சாதாரண அரசு அதிகாரிகள் வீட்டிலேயே கோடிக்கணக்கில் கட்டுக்கட்டாக லஞ்சப் பணம், கிலோ கணக்கில் தங்கம், வெள்ளிப் பொருட்கள், பல கோடி ரூபாய் மதிப்பிலான சட்டத்திற்கு புறம்பாக வாங்கிக் குவிக்கப்பட்ட சொத்துகளுக்கு உரிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.
தலைமைச் செயலகம் முதல் கடைக்கோடி கிராமம் வரை அனைத்து அரசு அலுவலகங்களும் லஞ்சப் பணத்தில் மஞ்சள் குளித்துக் கொண்டிருக்கின்றன. அதனை இன்றைய ஆட்சியாளர்களாலும் சரி, முந்தைய ஆட்சியாளர்களாலும் சரி, அப்பாவி மக்களின் ரத்தத்தை சுரண்டி பிழைக்கும் அதிகார வர்க்கத்தை கேள்வி கேட்கும் திராணி இல்லாதவர்களாகதான் இருக்கிறார்கள். காரணம், அரசு அதிகாரிகள் பெரும்பான்மையானோர், தாங்கள் வசூலிக்கும் லஞ்சப் பணத்தை கப்பம் கட்டுவதே ஆட்சியாளர்களுக்குத்தானே. அதனால், தலை முதல் கால் வரை லஞ்சமும், ஊழலும் தலைவிரித்தாடிக் கொண்டு தான் இருக்கிறது.
அதனால், ரஜினி சொன்ன ஆட்சி மாற்றமும், அரசியல் மாற்றமும், இன்றைய தேதியில் தமிழகத்திற்கு முக்கிய தேவையாகதான் இருக்கிறது. தமிழ்நாடு உயிருக்கு போராடும் மனிதனைப் போல அவசர சிகிச்சைப் பிரிவில்தான் இருக்கிறது. ரஜினினியின் அரசியல் பிரவேச அறிவிப்பு, உண்மையிலேயே திராவிடக் கட்சிகளுக்கு பீதியை ஏற்படுத்திதான் இருந்தன. 2021 சட்டமன்றத் தேர்தல் முடிவு எப்படியிருக்கும் என்று அ.தி.மு.க.வும் கவலைப்பட்டது. தங்களின் ஆட்சிக் கனவு கலைந்துப் போகுமோ என்று தி.மு.க.வும் அஞ்சியது. அதனால்தான், தமிழருவி மணியன் போன்ற நேர்மையான அரசியலை விரும்புவோர், ரஜினியின் அரசியல் பிரவேசத்தை ஆர்வமுடன் வரவேற்றார்கள். அந்த வகையில், ரஜினி கட்சி தொடங்கி தேர்தல் களத்தில் குதித்து இருந்தால், தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. வுக்கு எதிரான மனநிலையில் உள்ள வாக்காளர்களை ஒருகுடையில் கீழ் கொண்டு வந்திருக்க முடியும். தேர்தலில் தான் நினைத்ததை சாதிக்க முடியாமல் ஏமாற்றம் அடையும் சூழ்நிலை ஏற்பட்டாலும் கூட, அது ரஜினி என்ற தனிமனிதருக்கு ஏற்பட்ட தோல்வியாக இருக்காது, தமிழகத்திற்கு ஏற்பட்ட தோல்வியாகதான் அடையாளப்படுத்தப்படும். ஏனெனில், இன்றைக்கு ஊழல் இல்லாத ஆட்சிதான், தமிழகத்தின் நிகழ்காலத்திற்கு எதிர்காலத்திற்கு தேவை என்ற உணர்வு, வயதானவர்களிடம் மட்டுமல்ல, இளம்தலைமுறையினரிடமும் வேள்வியாக உள்ளது.
உடல்நிலையை காரணம் காட்டி, அரசியலில் இருந்தே அவர் ஒதுங்கி போகும் முடிவை எடுத்ததற்குப் பதிலாக, சமூக ஊடகங்கள் மூலம் பிரசாரத்தை அவர் தொடங்கி நடந்தியிருந்தால்கூட, அவர் காட்டும் நேர்மையான அரசியலில் நுழைய ஆர்வமாக இருந்த நூற்றுக்கணக்கான தலைவர்களை தமிழகம் அடையாளம் கண்டிருக்கும். அதில் இருந்து ஒருவரோ, பலரோ அடுத்தடுத்த தேர்தல்களில், தமிழக வாக்காளர்கள் ஆதரிக்கும் அளவுக்கு பெரும் மனமாற்றம் ஏற்பட்டிருக்கும். குறைந்த பட்சம் 10 சதவிகிதம் வாக்குகளையாவது நடிகர் ரஜினிகாந்த் மடைமாற்ற முடிந்திருந்தால், நேர்மையை தன் வாழ்நாள் முழுவதும் கடைபிடித்து வரும் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் போன்ற யாராவது ஒருவர் துணிந்து அரசியல் களத்தில் குதிக்க முன்வந்திருப்பார்கள்.
மொத்தத்தில், அரசியல் களத்தில் இருந்து ஒதுங்குவதாக ரஜினி எடுத்த முடிவு, நேர்மையான, தூய்மையான அரசியலுக்கும், ஆட்சிக்கும் ஏங்கிக் கொண்டிருக்கும் கோடிக்கணக்கான வாக்காளர்களுக்கு ஏமாற்றத்தை தான் தந்திருக்கும். அதேசமயம் அவர் கூறியபடி, பண பலமும், படை பலமும் வைத்துள்ள தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வினருக்கு மகிழ்ச்சியை உருவாக்கி கொண்டாட்ட மனநிலைக்குதான் கொண்டு சென்றிருக்கும். ஏனெனில், ரஜினி பிரச்சாரத்தில் ஈடுபட்டால், ஊழலில் திளைத்துக் கொண்டிருக்கும் இரண்டு கட்சிகளுக்கும் எதிராகதான் அவரின் பிரச்சாரம் கடுயைமாக இருந்திருக்கும். அவரின் குரல் 7 கோடி தமிழக மக்களையும் முழுமையாக சென்றடையவிட்டாலும், ஒன்றிரண்டு கோடி மக்களையாவது ஒரு அணியில் திரண்டு நேர்மையான அரசியலுக்கு அடித்தளம் அமைத்திருக்கும் என்பதுதான் யதார்த்தம்.
1996 ஆம் ஆண்டில் அவர் சொன்ன வார்த்தையும், 2019 ஆம் ஆண்டில் அவர் உதிர்த்த வசனங்களும் இந்த நொடி வரை உயிர்ப்புடன் தான் உள்ளது.
தமிழகத்தை ஆண்டவனாலும் கூட காப்பாற்ற முடியாதா? அரசியல் மாற்றமும், ஆட்சி மாற்றமும் எப்போதும் ஏற்படாதா? இந்த கேள்விகளுக்கான விடை, அவரின் மொழியிலேயே பதில் சொல்ல வேண்டி நிலை உருவாகிவிட்டதுதான் வேதனை. எல்லாம் ஆண்டவன் கையில்தான் இருக்கிறது. ஆண்டவன் எப்போது சொல்வார், எந்த அருணாச்சலம் வந்து முடித்து வைப்பார். காத்திருப்போம்…காலம் பதில் சொல்லட்டும்…