Sat. May 18th, 2024

சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ராஜேஷை ஆதரித்து முதல்வர் பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். அப்போது, முந்தைய திமுக ஆட்சியில், தமிழகம் முழுவதும் அப்பாவி மக்களின் நிலங்களை, சொத்துகளை திமுக நிர்வாகிகள் மிரட்டி பிடுங்கிக் கொண்டனர். மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் நில அபகரிப்பு மீட்பு என தனிப்பிரிவையே தொடங்கி, பாதிக்கப்பட்ட மக்களின் துயரத்தை துடைத்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. தமிழகம் முழுவதும் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நில அபகரிப்பு புகார் பதிவு செய்யப்பட்டு, அனைத்து நிலங்களையும் மீட்டு மீண்டும் அவற்றை நிலத்தை பறிகொடுத்த மக்களிடமே ஒப்படைத்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா.

திமுக மீண்டும் ஆட்சிக்கு வநதால், உங்கள் சொத்து உங்களிடம் இருக்காது. நினைவில் வைத்து அதிமுக.வுக்கு வாக்களியுங்கள். அதிமுக தேர்தல் அறிக்கையில், மகளிருக்கு உரிமைத் தொகை 1500 ரூபாய், 6 இலவச கேஸ் சிலிண்டர், வாஷிங் மிஷின் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்துள்ளோம். அவை அனைத்தும் அதிமுக ஆட்சியில் வழங்கப்படும்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா நின்று போட்டியிட்டு வெற்றிப் பெற்ற தொகுதி இது. அவர் உயிரோடு இருந்தபோது இந்த தொகுதிக்கு என்னென்ன வளர்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றினாரோ, அதுபோல, ராஜேஷும் எம்எல்ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டால் உங்கள் தொகுதியில் நிறைய வளர்ச்சித்திட்டங்களை நிறைவேற்றி வைப்பார். அதனால், அதிமுக அரசு அமைய ஆதரவு தாருங்கள்.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.